வேலூர், நவ 7 - வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வள்ளிமலையில் நடைபெற்ற விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 798 பயனாளிகளுக்கு ரூ.10.91 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.ரா.சுப்புலெட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, காட்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் வே.வேல்முருகன், வேலூர் மாநகராட்சி துணை மேயர் மா.சுனில் குமார், 1 வது மண்டலக்குழுத்தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் வருவாய் துறையின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரம், மின்சார வாரியத்தின் சார்பில் மின் இணைப்பு பெயர் மாற்றம், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் வங்கி கடன் உதவி, சுகாதார துறையின் சார்பில் மருத்துவ காப்பீட்டு அட்டை, தொழி லாளர் நலத் துறையின் சார்பில் அடை யாள அட்டை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஆணை, தோட்டக்கலை துறையின் சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கான ஆணை என 798 பயனாளிகளுக்கு சுமார் ரூ.10 கோடிக்கு மேலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். அதேபோன்று பொன்னை, வள்ளி மலை மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் உள்ள இளைஞர்கள் படிப்ப தற்காக சேர்க்காடு பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வரப்பட்டு தற்பொழுது கல்லூரி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று விழாவில் பேசிய அமைச்சர் துரை முருகன் கூறினார்.