districts

சென்னை முக்கிய செய்திகள்

ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலம்

சென்னை, பிப்.17-  பல்லாவரம் ரயில் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டம் மிகுந்து பரபரப்பாக காணப்படும். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்லாவரத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு வியாபாரம், வேலை, படிப்பு என்று பல்வேறு விஷயங்களுக்காக ரயில் மூலம் சென்று வருகின்றனர். இந்நிலையில், ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில், ஞாயிறன்று  காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புடவையால் தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள், இதுகுறித்து உடனடியாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

புதுபொலிவு பெற்ற விக்டோரியா மஹால்

சென்னை, பிப்.17-  சென்னையின் அடையாளமாக திகழும் விக்டோரியா மஹால் பழமை மாறாமல் புனர மைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் மார்ச் மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விக்டோரியா பொதுக்கூடத்திற்கான புனரமைப்பு பணிக்கான விரிவான திட்ட அறிக்கையில் அதன் முழுமையான உறுதித்தன்மையுடன் பழமை மாறாமல் இருப்பதை உறுதி செய்ய துணை ஆணை யர் தலைமையில் 10 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்த மியூசியத்திற்கென 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் உள்ள பல்வேறு மியூசியத்தின் உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். தற்போது புன ரமைப்பு பணிகள் சுமார் 80% முடி வடைந்துள்ளதால், மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, அடுத்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும், என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.  விக்டோரியா மஹால் முதல் தளத்தை, தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல், கலைநயத்துடன் கூடிய முகப்பு விளக்குகள் அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது. புனரமைப்பு பணி, உறுதித்தன்மையுடன் பழமை மாறாமல் இருப்பதை உறுதி செய்ய துணை ஆணையர் தலைமையில் 10 நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீர் 
மறுபரிசீலனை செய்ய புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

புதுச்சேரி, பிப்.17- கிராமப்புறங்களில் இருந்து ஆழ்குழாய் கிணறுகள் மூலம் புதுச்சேரி நகரத்திற்கு குடிநீர் விநியோக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன்,  துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பிரெஞ்சு அரசின் நிதி உதவியுடன் புதுச்சேரியின் நகர்ப்புறங்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வ தற்கு  கிராமப்புறங்களில் ஆழ்துளை கிணறு கள் அமைக்கும் நடவடிக்கை தவறானது. பாகூரில் ஆழ்குழாய் கிணறுகளை அமைக்க ஒப்பந்த புள்ளி பொதுப்பணித்துறை கோருவது தொடர்பாக பாகூர் மக்களை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சந்தித்தபோது இத்திட்டத்திற்கு  அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிலத்தடி நீர் குறையும் அபாயம்!  இது அறிவியல் அடிப்படை இல்லாத திட்டமாகும். ஆட்சியில் இருப்போருக்கும், அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்களை தவறாக வழி நடத்தும் அதிகாரிகளுக்கு கமிஷன் கிடைக்கும் திட்டம். இந்த திட்டத்தால் நிலத்தடி நீர் ஆதாரங்கள் குறையும். ஒன்றிய அரசின் நிலத்தடி நீர் வாரியம் புதுச்சேரி யில் நிலத்தடி நீர் ஆதாரங்கள் சுரண்டலை தெளிவுபடுத்திய நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் கடல் நீர் அதிக அளவில் நிலத்தடி நீரில் புகும். ஏற்கெனவே நகர்புற நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 3 ஆண்டுகளுக்குள் கிராம பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளாகும். மாநிலத்தின் நீர் ஆதாரங்கள் பற்றிய விரிவான ஆய்வு செய்து பொதுவெளியில் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.இந்த திட்டம் மட்டுமில்லாமல் புதிய மதுபான ஆலைகள் போன்ற பிற திட்டங்களை செயல்படுத்த எந்த நட வடிக்கையும் எடுப்பதற்கு முன் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்

சென்னை, பிப். 17- அண்மையில் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி அந்த நிகழ்ச்சியை செங்கோட்டை யன் புறக்கணித்தார்.  இந்நிலையில், அதிமுகவில் உள்ள 82 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர் களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திங்களன்று அறிவித்தார். அதில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. அதே போல இதுவரை ஒதுங்கி இருந்த அதிமுக தலைவர்கள் பலரது பெயரும் கூட அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் மாவட்டச் செயலாளராக இருக்கக் கூடிய எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன் பெயர் மட்டும் இடம்பெறவில்லை. இதனால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் வெளியேற்றப்படுகிறாரா? என கேள்வி கிளம்பியுள்ளது.

குருமன்ஸ் மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்குக  

திருப்பத்தூர், பிப். 17 - தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க இணைப்பு சங்கமான குறுமன்ஸ் பழங்குடி மக்கள் சங்க சிறப்பு மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பத்தூரில் மாநிலத் தலைவர் எல்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் காளியப்பன், எஸ். விஜயன், வி.தட்சிணாமூர்த்தி, டி.கோடியப்பன் முன்னிலை வகிக்க, மாநில பொதுச்செயலாளர் பி.வீரபத்திரன் வரவேற்று பேசினார். பொதுக்குழு கூட்டத்தை மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன் துவக்கி வைத்தும், மாநிலத்தலைவர் பி.டில்லிபாபு நிறைவு செய்து பேசினர். முடிவில் பொருளாளர் அரங்கநாதன் நன்றி கூறினார். பொதுக்குழுவில் குருமன், குறும்பன், குறும்பர், குறுமா அனைவரும் குறுமன்ஸ் என்று அறிவித்துள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு எண் 12799/22 நான்கு மாத காலத்திற்குள் நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் அரசாணை எண் 104 மூலம் குறுமன்ஸ் இனச்சான்று வழங்க வலியுறுத்துவது என்றும், இனச்சான்று கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து பழங்குடி மக்களுக்கு, நிலுவையில் உள்ள மனுக்களை  உடனடி நடவடிக்கை எடுத்து இனச்சான்று வழங்க வேண்டும். 2025 பிப் 24 அன்று சென்னையில் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் நடைபெறும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் குறுமன்ஸ் பழங்குடி மக்கள் சார்பில் பெருந்திரளாக பங்கேற்பது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரிக்கை

கிருஷ்ணகிரி, பிப்.17 -  தமிழ்நாடு அரசு 11 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் கோரிக்கை விடுத்துள்ளார். பள்ளி மாணவர்கள் தற்போது 10,11,12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் சூழ்நிலை உள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகளும் அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்வது, மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் இருந்து இடைநிற்றலும் அதிகரித்துள்ளது.  நீட்,ஜே இ இ மற்றும் பிற அகில இந்திய தேர்வு களுக்கும் தயாராவதற்கு நேரம் ஒதுக்கவும் முடிவ தில்லை.11 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடர்ந்தால் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு உயர் கல்விக்கான அடிப்படை சான்றாகவும் அமையாது. பல மாநிலங்களில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ள நிலையில்,தமிழ்நாட்டில் மட்டும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இருப்பது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த சிரமத்தையும்,மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே மாணவர்கள் மன நலம் கருதி 11 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

விகடனுக்குத் துணை நிற்கிறேன்:  எழுத்தாளர் அருந்ததி ராய்

சென்னை, பிப். 17- விகடன் இணையதளம் முடக்கப் பட்டதற்கு எதிர்க்கட்சிகளும், ஊடகவியலாளர்களும், அரசியல் கட்சிகளும், கருத்துரிமைக்கான குரல் ஒடுக்கப்படுவதாக மோடி அரசை விமர்சித்து கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், “நான் ஆனந்த விகடனுக்குத் துணை நிற்கிறேன்” என சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான அருந்ததி ராய் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகையில், “நம் அரசாங்கம், சட்டத்துக்குப் புறம்பான வகையில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராகச் சென்றால், போராடவே வாய்ப்பளிக்காமல் கருத்துகளை ஒடுக்கினால், அதற்கு நாம் அனுமதித்தால், அவர்கள் நம் குரல்களை எடுத்து விடுவார்கள்; நம்மை கூண்டில் அடைத்து சாவியையும் தூர எறிந்து விடுவார்கள். நம் குழந்தைகள் ஏதும் அறியாத கைப்பாவைகள் ஆகிவிடுவார்கள். ஒரு தேசமாக நாம் தடம் புரண்டுவிடுவோம், தேக்கநிலையை அடைந்துவிடுவோம். நான் ஆனந்த விகடனுக்குத் துணை நிற்கிறேன்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.

கடலூர் அருகே ரயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை

கடலூர், பிப்.17- கடலூரை அடுத்த மருதாடு  பகுதியை சேர்ந்த காத்த முத்து மகன் குகன் (17). கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். திங்களன்று (பிப்.17) பள்ளியில் திருப்புதல் தேர்வு நடைபெற்ற நிலையில் பள்ளிக்கு  செல்லவில்லை. மருதாடு அருகே உள்ள வரக்கால்பட்டு ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, மன்னார்குடியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற பாமணி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து குகன் தற்கொலை செய்து கொண்டார்.  பின்னர், கடலூர் முதுநகர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குகன் உடலை மீட்டனர்.

மணல் கடத்திய ஆந்திர லாரிகள் அதிரடி பறிமுதல்

சென்னை, பிப்.17- திருவள்ளூர் அடுத்த பட்டரை பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே சனிக்கிழமையன்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த 2 லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் தமிழகத்திற்கு மணல் கொண்டு வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, திருப்பதியைச் சேர்ந்த ஜானி, சித்தூரைச் சேர்ந்த ஜெய்சங்கர், ஆந்திர மாநிலம்பாலகுண்டா பகுதியைச் சேர்ந்த ரோசய்யா (29) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.