சென்னை, டிச. 9- மாண்டஸ் புயலால் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் ராட்சத அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி வருகின்றன. இதன் காரணமாக கடலொர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் மெரினா பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடல் நீர் கடற்கரை மணல் பகுதியை தாண்டி சீனிவாசபுரம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் அவதிக்குள்ளானார்கள். பட்டினப்பாக்கத்தில் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சிலவற்றையும் ராட்சத அலை இழுத்துச் சென்றது. இந்த படகுகளை மீனவர்கள் போராடி கரைக்கு கொண்டு வந்தனர். பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் கடற்கரை பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. அதேபோல் திருவொற்றியூர், காசிமேடு கடற்கரை பகுதிகளிலும் ராட்சத அலையுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது.