விழுப்புரம்,ஜன.18- தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டில் அரசு மானியத்தில் தோட்டம் அமைக்க விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரியின் விடுதியில் உள்ள 10 செண்ட் நிலத்தில், அரசு மானியத்துடன் தோட்டம் அமைக்கப்பட்டது. அதில் கல்லூரி மாணவிகள், விடுதி காலியிடத்தில் உழவு செய்து நாற்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் செந்தில் தலைமை தாங்கினார். கோலியனூர் ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குநர் வெங்கடேசன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். கல்லூரி விடுதி காப்பாளர் பெமினா செல்வி, உதவி பேராசிரியர்கள் ஞானமூர்த்தி, ரீகன் மற்றும் மாணவிகள் பலர் கலந்துகொண்டு மூலிகை செடிகள், தோட்டப்பயிர்களுக்கான விதைகளை நட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.