districts

இ.எஸ்.ஐ பயனாளிகளுக்கு முழு உடல் பரிசோதனை

சென்னை, பிப்.5 சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நவீன வசதிகள் கொண்ட  மருத்துவமனையாகும். காப்பீடு செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அதி சிறப்பு மருத்துவ சேவைகள் உட்பட பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்குகிறது. சமீபத்தில் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் பயன் பெறும் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை முறை நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வருடாந்திர நோய் தடுப்பு சுகாதார பரிசோதனை திட்டத்தை தொடங்கியுள்ளது. 40 வயது மற்றும்அதற்கு மேற்பட்ட வயதுடைய காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. ஒன்றிய அரசின் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகம், தேசிய தொலைத்தொடர்பு சேவைகளின் கீழ் இ-சஞ்சீவனி (காணொளி வழி ஆலோசனை)  சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இ - சஞ்சீவனி வலைதளத்தில் உள்நுழைவதன் மூலம் பயனாளிகள் தங்கள் பணியிடத்தில் இருந்து தங்கள் வசதிக்காக ஆன்லைனில் பல்வேறு மருத்துவ ஆலோசனை சேவைகளைப் பெறலாம். இ-சஞ்சீவனி சேவைகள் மூலம் பல் மருத்துவம் ஆயுர்வேதம் மற்றும் ஆலோசனைகளை காணொளி வாயிலாகவும் பயனாளிகள்  பெறலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.