சென்னை, செப். 29- இளைஞர் மரணத்திற்கு காரணமான ஓட்டேரி காவல் நிலைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தத்தில் கூறியிருப்பதாவது: சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டம் பி2 ஓட்டேரி காவல் நிலையத் தைச் சேர்ந்த காவலர்கள் திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 74ஆவது வட்டத்தில் 4ஆவது பி தெரு, ஏகாங்கி புரத்தில் வசிக்கும் முருகன் லட்சுமி தம்பதி யரின் மகன் ஆகாஷ் (21) என்பவரை கடந்த 21 ஆம் தேதி விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அன்றிரவே சுமார் 1.30 மணியளவில் சுய நினைவிழந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஏகாங்கிபு ரம் ஏரிக்கரை ஓரமாக ஆகாஷ் கிடப்பதாக அருகில் இருந்தவர்கள் ஆகாஷின் பெற் றோருக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமணையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (செப். 29) ஆகாஷ் மரணமடைந்தார். காவலர்கள் லாக் அப்பில் வைத்து சித்ர வதை செய்து கடுமையாக தாக்கியதால்தான் ஆகாஷ் மரணமடைந்துள்ளார் என்று தெரிய வருகிறது.
கடுமையாக தாக்குதல் நடத்திவிட்டு அவரை மருத்துவமனையில் கூட சேர்க்காமல் சாலையில் வீசி சென்றது மனிதாபிமானமற்ற மனித உரிமை மீறிய செயலாகும். எனவே, விசாரணைக்கு என்று அழைத் துச் சென்றுவிட்டு சட்ட விதிகளுக்குட்பட்டு விசாரணை நடத்தாமலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் மீறிய பி2 காவல் ஆய்வாளர் மற்றும் தாக்குதல் நடத்திய காவலர்களை இடைநீக்கம் செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், 21 வயதே ஆன மகனை இழந்து வாடும் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 25 லட்சம் ரூபாய் நிவாரணமும் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். சென்னையில் காவல்துறையினர் தாக்கு தலால் ஏற்படும் லாக் அப் மரணங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்க ளில் கொடுங்கையூர் காவல் நிலையம், தலைமைச் செயலக காலனி காவல் நிலையம், தற்போது ஓட்டேரி என அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் காவல்துறையினர் மீதான நம்பிக்கை சீர்குலைந்து வருகிறது. எனவே தாங்கள் தலையிட்டு இதுபோன்ற சம்பவங்கள் இனி மேல் நடக்காதவாறு சட்ட ரீதியான கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் நகல் காவல்துறை தலைமை இயக்குநர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கும் அனுப்பப் பட்டுள்ளது.