விழுப்புரம், ஆக.28 - வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறி யியல் பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர் களை தொழில் முனைவோராக்கும் திட்டம் 2022-23-ம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 12 பேருக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது. பிரதம மந்திரி யின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின்கீழ் பயனடைந்த தகுதியுடைய பயனாளிகளுக்கு மட்டும் 25 விழுக்காடு மானியமாக அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற 21 முதல் 40 வயதுடையவராக வும், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணி புரியாதவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்திற்கு ஒரு பட்டதாரி மட்டுமே நிதி உதவி வழங்கப்படும்.