விழுப்புரம், ஜன.10- விழுப்புரம் மாவட்டம்,வானூர் வட்டத்தில் பெஞ்சால் புயல் நிவாரணம் விடுபட்ட கிராமங்களுக்கு ரூ.2ஆயிரம், மற்றும் பொங்கல் தொகுப்பில் ரூ.1000 உடனடியாக வழங்க வலியுறுத்தி வெள்ளி யன்று சிபிஎம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம்,வானூர் வட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் விடுபட்ட கிராமங்களுக்கு கொடுக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்த ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் டிச.23அன்று விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் சமாதானப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஒரு வார காலத்திற்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரையில் நிவாரணம் வழங்கப்படவில்லை. உடனடியாக வானூர் வட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2ஆயிரம் நிவாரணத்தை விடுபட்ட கிராமங்களுக்கு காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும், பொங்கல் தொகுப்பில் ரூ.1000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு வட்ட செயலாளர் எஸ்.பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.கே.முருகன்,வி.அர்ஜுனன் ஆகியோர் கலந்து கண்டு கோரிக்கைகளைக் வலியுறுத்தி பேசினர். முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற வட்டக் குழு உறுப்பினர்கள் ஐ.சேகர், வி.சுந்தரமூர்த்தி,ஆர்.சேகர், கே.மாயவன், எ.அன்சாரி, ஜே.முகமது ஆனஸ், கே. விசுவநாதன், எம் யுகந்தி உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர்.