மாமனார் மீது மருமகள் புகார்
கள்ளக்குறிச்சி, அக். 10- உளுந்தூர்பேட்டை அருகே தனது கணவரை கடத்தி சென்று விட்டதாக மாமனார் மீது இளம்பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஆண்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர் ராஜசேகர் என்பவரை காதலித்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆறு மாத கர்ப்பிணியாக இருந்து வரும் பிரிய தர்ஷினியை, ராஜசேகரின் தந்தை ரங்கராஜ், அவரது தாய் அஞ்சலை இருவரும் தனது மகனுடன் நீ வாழ வேண்டும் என்றால் 50 சவரன் நகை, ஒரு கார் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று கூறி கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது கணவர் ராஜசேகரை மாமனாரே கடத்திச் சென்றுவிட்டதாக பிரியதர்ஷினி காவல் துறையில் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த அந்த பெண், மண்ணெண்ணெய் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆட்சியரிடம் புகார் கொடுக்க வந்தது தெரிய வந்தது.
ரேசன் அரிசி பதுக்கல்: 3 பேர் கைது
திருவண்ணாமலை, அக். 10- திருவண்ணாமலை அடுத்த மாதலாம்பாடி கிராமத்திலுள்ள அரிசி ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் 2 சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மங்க லம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை யடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாகனம், அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு, 2 லாரி யையும் மங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிறகு, குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சியிலிருந்து 50 கிலோ எடை உள்ள 140 மூட்டைகளில் 7 டன் ரேசன் அரிசியை கடத்தி வந்து பாலீஷ் போட்டு பெங்களூருவிற்கு கடத்த இருந்தது தெரிய வந்தது. மேலும் கோதுமையை யும் கடத்தி வந்து மாவு அரைத்து கடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அரிசி ஆலை மேலாளர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
கடலூர், அக். 10- கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வரும் நவம்பர் 1 அன்று ஆட்சி யர் தலைமையில், ஓய்வூதியர் இயக்குநரால் நடைபெறுகிறது. மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை இரண்டு பிரதிகளில் “ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு” என குறிப்பிட்டு வரும் 15ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
கடலூர், அக். 10- கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சிறுபாக்கம் சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி (68). இவர் திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த பகுதி வழியாக சென்றுள்ளார். அப்போது சித்தேரி பகுதியில் மின்கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது. கீழே கிடந்த மின்கம்பியை பெரியசாமி மிதித்துள்ளார். அதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுபாக்கம் காவல் துறையினர் பெரியசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழையால் மக்காச்சோளம் சேதம்: இழப்பீடு வழங்க சிபிஎம் கோரிக்கை
கடலூர், அக். 10- கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திட்டக்குடி வட்டம், ராமநத்தம் அருகே தொழுதூர், வைத்திய நாதபுரம், ஆலந்தூர், சித்தூர், புவிகரம்பலூர், கண்டமாத்தான், மேல்கல் பூண்டி, கீழ்கல் பூண்டி, நாங்கவூர், தச்சூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க படைப்புழுவால் மக்காச்சோளம் பயிர்கள் தொடர்ந்து பாதிப்பு அடைந்துள்ளது. இதுகுறித்து கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் பெய்த கன மழையால் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை, தோட்டக்கலை துறையினர் பார்வையிட்டு முறையாக கணக்கெடுப்பு நடத்தி அனைத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
சிறுவன் பலி
கடலூர், அக். 10- விருத்தாசலம் அருகே உள்ள பொன்னேரி கிராமத்தில் வசிக்கும் செந்தில் மகன் பிரேம்குமார் (13). விருத்தா சலத்திலுள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். வீட்டின் எதிர்ப்புற சாலை யோரத்தில் நின்று கொண்டி ருந்தபோது அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனம் மோதி யதில் தலையில் பலத்த காய மடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார்.
கழுத்தறுத்து ஆட்டோ ஓட்டுநர் கொலை
கடலூர், அக். 10- கடலூர் அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில், ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கடலூர், ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவமணி (32). இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி சத்யா. இவர்களது மகன் சுதீஷ் (2). இந்த நிலையில், ராமாபுரத்திலுள்ள ஒரு வாழைத் தோப்பில், சிவமணி கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், கையில் வெட்டு காயங்களுடனும் இறந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் சிவமணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, சிவமணியை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.