மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
கடலூர், ஏப். 6- விருத்தாசலம் அடுத்த கார்கூடல் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணி யில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆற்று பகுதியில் சிலர் மாட்டு வண்டியில் மணல் திருடிக் கொண்டிருந்தனர். காவல் துறையினரைக் கண்டதும் அவர்கள் மாட்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு ஓடி விட்டனர். இதையடுத்து காவல் துறை யினர் மாட்டு வண்டியை பறி முதல் செய்து, மணல் திருட்டில் ஈடுபட்ட கோ. பொன்னேரி பகுதியை சேர்ந்த வீரமணி என்பவரை தேடி வருகின்றனர்.
நீட் பயிற்சி மாணவி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை
கடலூர், ஏப். 6- கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த நீட் பயிற்சி மாணவி ரயில் முன்பு பாய்ந்து புதன்கிழமை மாலை தற்கொலை செய்துகொண்டார். வடலூர் ஆபத்தாரணபுரத்தைச் சேர்ந்தவர் உத்திராபதி. இவர் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றுகிறார். இவர் தற்போது, குடும்பத்துடன் நெய்வேலி, வட்டம் 9இல் உள்ள என்எல்சி குடியிருப்பில் வசிக்கிறார். இவரது மகள் நிஷா (18). நெய்வேலி ஜவகர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்தார். பின்னர் அதே பகுதியில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் கடந்த ஓராண்டாக பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், புதன்கிழமை மாலை வடலூர் வழியாகச் சென்ற காரைக்கால் -பெங்களூர் விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். நீட் பயிற்சி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் குறித்து கடலூர் ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பைஜூஸ் ஆகாஷ் நீட் பயிற்சி மையத்தில் தனது மகள் நிஷாவை பாகுபாடுடன் நடத்தியதே சாவிற்கு காரணம் என்று உத்திராபதி தெரிவித்துள்ளார்.
ஏனாமில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் பணி நீக்கம்
புதுச்சேரி, ஏப். 6- புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ளது. ஏனாம் பிராந்திய அரசு பணிகளில் ஆந்திர மாநில பல்கலைக்கழக கல்லூரியில் படித்தவர்கள் உள்ளனர். அரசு துறை பணிகளில் உள்ளவர்கள் போலியாக பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்திருப்பதாக புகார்கள் வந்தது. இதுதொடர்பாக அவ்வப்போது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் ஏனாம் அரசு பள்ளியில் பணியாற்றிய சமூக அறிவியல் ஆசிரியர் முகமது யாகூப் போலி பி.எட். சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இவர் 2000ஆம் ஆண்டு பி.எட். படித்ததாக சான்றிதழ் அளித்துள்ளார். ஆனால் அவர் படித்த கல்லூரி யில் 2003இல் தான் பி.எட். படிப்பு தொடங்கியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து ஏனாம் கல்வித்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்துள்ளது. இதனிடையே ஏனாம் தொடக்கப் பள்ளியில் 2023ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் தனலட்சுமி, வெங்கடலட்சுமி, சந்தோஷி ஆகியோர் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காததால் நீதிமன்ற உத்தரவின்படி பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி, ஏப். 6- கிருஷ்ணகிரி டவுன் காவல் துறையினர் புதிய பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெரியகலையமுத்தூரைச் சேர்ந்த இமாம்தீன் (55) என்பதும், அவர் கொண்டு வந்த பையில் 10 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.