தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
கிருஷ்ணகிரி, ஏப். 8- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த அத்திமரத்துபள்ளத்தை சேர்ந்தவர் கவுதம் (17). இவர் சிகரலப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அவர் பள்ளி ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக அவரது பெற்றோருக்கு புகார் சென்றது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமார் கவுதமின் பெற்றோரை அழைத்து மாணவனுக்கு அறிவுரை கூறி அனுப்பினார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கவுதம் தற்கொலை செய்து கொண்டார். மாண வரின் தற்கொலைக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காரணம் என கவுதமின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் தலைமை ஆசிரியருக்கு மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்களிடம் நான்தான் தலைமை ஆசிரியர் என்பதை மறந்து விட்டீர்களா எனக் கூறி திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் வகுப்பில் இருந்த மேசை, ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளியில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
சாலை விபத்தில் வட்டாசியர் பலி
செய்யாறு, ஏப். 8- கடலூர் மாவட்டம், பண்ருட்டி லட்சுமி நகரைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன் (54). இவர் திண்டி வனத்தில் வட்டாட்சியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூங்கோதை (48). இவர்களது மகன் சிவசங்கரன். இவர்கள் 3 பேரும் காரில் வெள்ளிக்கிழமை காலை காஞ்சிபுரம் கோவிலுக்கு சென்றனர். காரை சிவசங்கரன் ஓட்டி சென்றார். பின்னர் இரவு 10 மணியளவில் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் செய்யாறு அடுத்த நெடுங்கல் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருக்கும் போது, மேல்மருவத்தூரில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கட சுப்பிரமணியின் சம்பவ இடத்திலேயே பலியானார். பூங்கோதை, சிவசங்கரன் இருவரும் படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அனக்காகூர் காவல் துறையினர் வெங்கடசுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவையில் ஏப். 20 முதல் கோடை விடுமுறை
புதுச்சேரி, ஏப். 8- புதுவையில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏற்கனவே வரும் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடத்த கல்வித்துறை திட்டமிட்டது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 11ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும் 20ஆம் தேதி முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை மாணவர்கள், ஆசிரியர்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். கல்லூரிகளை பொறுத்தவரை இன்னும் ஆலோசனை செய்யவில்லை. சிறுவர்கள் என்பதால் முதலில் அவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு மருத்துவத்துறை ஒப்புதல் கேட்டு அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.