districts

சென்னை விரைவு செய்திகள்

யுபிஎஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு  

கடலூர், பிப். 5- ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்விற்கு இலவச பயிற்சி அளிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுகான தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கல்வித் தகுதி10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் முதல் முறையாக தேர்வாணையம் இத்தேர்வினை தமிழ் வழியிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கு தேர்வாணைய இணையதளம் வாயிலாக வரும் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 7) அன்று தொடங்குகிறது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடத்தப்படும். எனவே இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரத்தை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண்ணில் 9499055908 தொடர்பு கொண்டோ அல்லது அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ பதிவு செய்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


வேலூரில் 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

வேலூர், பிப். 5- வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மேட்டூரில் இருந்து காவேரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மேட்டூரில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 759 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க பிராதான குழாயில் இணைப்பு வழங்கும் பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கி உள்ளது. இதனால் ஜோலார்பேட்டை,  ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு குடிநீர் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை உள்ளூரில் கிடைக்கும் குடிநீர் ஆதாரத்தை வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்த பின்னர் வழக்கம் போல் குடிநீர் சப்ளை செய்யப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவில் பூட்டை உடைத்து  நகை கொள்ளை

கடலூர், பிப். 5- கடலூர் அருகே எஸ்.குமராபுரத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. சனிக்கிழமை இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.   மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை கோவிலை திறக்க வந்த பூசாரி, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், 15 ஆயிரம் ரூபாய் மற்றும் சாமி நெற்றியில் இருந்த ஒன்னரை சவரன் நகை ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ஒன்னரை லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு ஒரு முறை ஆஞ்சநேயர் சிலையில் இருந்த வெள்ளி பூணூல் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.