சென்னை, மார்ச் 6 - சென்னை மேற்கு முகப்பேர் அரசுப் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி களை செய்து தரக் கோரி திங்களன்று (மார்ச் 6) கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், பெற்றோர்களும், மாணவர்களும் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். மேற்கு முகப்பேரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 300 மாணவர்கள் பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மழைபெய்தால் பள்ளி வளாகம் நீச்சல் குளமாக மாறி விடுகிறது. மாணவர்களின் தேவைக்கு ஏற்ப கழிப்பறைகளும், வகுப்பறைகளும் இல்லை. எனவே, பள்ளியின் பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும், குடிநீர் தொட்டி, கழிவறை, பள்ளி வளாகத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் மற்றும் ஆய்வகம், நூலகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பள்ளி முன்பு இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் நடத்திய இந்த இயக்கத்தை கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு தொடங்கி வைத்து பேசுகையில், “அரசு பள்ளிகளை வலுப்படுத்த மாணவர் சங்கம் தொடர்இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக இந்த கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. அரசு பள்ளிகள் தரமான இயங்கினால்தான் சமூகத்தில் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும்”என்றார். இந்நிகழ்வில் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ஆனந்த், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஸ்வேதா, சதீஷ், தமிழ்ச் செல்வன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த இயக்கத்தையொட்டி மனு அளிக்க சென்ற மாணவர் சங்க தலை வர்களிடம் இருந்து அதனை பெற்றுக் கொள்ள தலைமை ஆசிரியர் சாந்தி மறுத்துவிட்டார்.