பொத்தேரி, மே 19 - செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே கல்லூரி மாணவரை தாக்கி மோட்டார் சைக்கிள் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் பிரபு. இவர் பொத்தேரியில் தங்கி அங்கு உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் காட்டாங்கொளத்தூர் பகுதியில் இருந்து கொருக்கந்தாங்கல் பகுதிக்கு விலையுயர்ந்த கே.டி.எம். மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த 2 மர்ம வாலிபர்கள் ஆனந்த்பிரபுவை தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் அவர் அணிந்து இருந்த நகையை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மறைமலை நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கல்லூரி மாணவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது காட்டாங்கொளத்தூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குட்டி என்ற ராகவேந்திரன், அவரது நண்பர் தைலாவரம் பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து மோட்டார்சைக்கிள் மற்றும் நகையை பறிமுதல் செய்தனர்.