இராமநாதபுரம், டிச.6- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் வீட்டில் ரத்த வாந்தி எடுத்து மரணமடைந்தார். குடும்பத்தினர் காவல்துறை மீது புகார் தெரி வித்து பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் மறி யலில் ஈடுபட்டனர். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர் கோலிய நேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் மணிகண்டன்.இவர், சனிக்கிழமை கீழத்தூவல் அருகே வாகன சோதனையின்போது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் காவல்துறையினர் விரட்டி பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், சிறிது நேரம் கழித்து மணிகண்ட னின் தாயாரை வரவழைத்து அவருடைய செல்போன் மற்றும் பைக்கை வைத்துக்கொண்டு மணிகண்டனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வீட்டில் மணிகண்டன் ரத்த வாந்தி எடுத்து மரணமடைந்துள்ளார். இத னால், ஆவேசம் அடைந்த குடும்பத்தினர், உற வினர்கள் பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக சிபிஎம் மாவட்டச் செயலாளர் காசிநாத துரை, தாலுகா செயலாளர் முருகன் ஆகியோர் கூறுகையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மரணம் குறித்து உடனே வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட கீழத்தூவல் காவல்துறை அதிகாரி மீது சட்டபூர்வ நடவடிக்கை மற்றும் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும், மரணமடைந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.