சிவகங்கை,செப்.20- சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல்-தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் செப்டம்பர் 19 அன்று அரசு சட்டக்கல்லூரியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.பின்னர் மாணவர்களுக்கு சேர்க்கைக்கான சான்றினை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். இதில் ப.சிதம்பரம் பேசுகையில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு சிவகங்கை மாவட்ட மக்கள் மிகவும் கடமைப்பட்ட மக்களாவார்கள். ஆட்சி அமைக்கப்பட்டு 16 மாதங்களில் சட்டக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி அறிவித்து மாணவ சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் திருமயம், ஆலங்குடியில் கலைக் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது .
முதல்வர் விரைந்து நிறைவேற்றி வருகிறார் .சட்டம் என்பது மூன்றாவது கண். சட்ட அறிவு இல்லா மல் எந்த துறையும் செயல்பட முடியாது. இக் கல்லூரிக்கான கட்டிடப் பணி விரைந்து துவக்கப்பட்டு 12 முதல் 15 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும். கல்லூரி கட்டிடத்தினை முதல்வர் திறந்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் பேசும்போது, அனைவரும் கல்வி பெற வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல் படுத்தி வருகிறார்.சட்ட கல்லூரி தேவைகள் அதிகரித்துள்ளது. கல்வி பூமியான காரைக்குடி யில் சட்டக் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும் .கல்லூரி கட்டிட பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகை யில், பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான படிப்பு சட்டப்படிப்பு தான். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் பெண் நீதிபதிகள் உள்ளனர். பெண்கள் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது என்று கூறினார். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் ,சட்டத்துறை செயலாளர் கார்த்திக்கேயன்,சட்டக்கல்வி இயக்குநர் ஜெ.விஜயலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர் காரைக்குடி சட்டக் கல்லூரி தனி அலுவலர் ராமபுரம் ராமபிரான் ரஞ்சித் சிங் நன்றி கூறினார்.