திருச்சிராப்பள்ளி, செப்.22- திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் சார்பில் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் தினமும் மாலையில் சிந்தனையாளர்களின் சிறப்புரை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் 6-ஆம் நாளான புதனன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் வீரயுக நாயகன் வேள்பாரி நாடகம் நடைபெற்றது. பின்னர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், பண்பாட்டின் வேர்கள் என்ற தலைப்பில் பேசுகையில், ‘‘எழுத்து வடஇந்தியாவை விட தென்னிந்தியாவில் தான் முதலில் கண்டறியப்பட்டது. சங்க இலக்கியம் இயற்கையை மையப்படுத்துகிறது. இயற்கையை இடைவிடாது புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. வேத இலக்கியம் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலை பேசுகிறது. இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலை புரிந்து கொள்ளவும், நிறுவவும் முயற்சிக்கிறது. இதுதான் இரண்டிற்கும் இடையில் உள்ள மிக முக்கியமான வேறுபாடு என பலஆய்வாளர்கள் எழுதி உள்ளனர். சங்க இலக்கியத்தில் உள்ள இயற்கை, வானியல் குறிப்புகள் இன்றும் நமக்கு தெரியாது. இந்திய பண்பாடு மதங்களால் உருவாக்கப்பட்ட பண்பாடு அல்ல. மொழியின் சமத்துவத்தால் உருவாக்கப்பட்டது. அதில், தமிழ்மொழியின் பங்கு தலையாய பங்கு. முதன் முதல் கண்டறியப்பட்ட கல்வெட்டில் உள்ள சொல் இன்றைக்கும் புழக்கத்தில் உள்ள மொழியாக, 3 ஆயிரம் ஆண்டுகள் புழக்கத்தில் உள்ள மொழியாக கால்கோள் என்ற சொல் உள்ளது. ஒரு சொல்லிற்கு பின்னால் ஒரு பண்பாடு உள்ளது. ஒரு சொல்லுக்கு பின்னால் உள்ள பண்பாடும் ஒரு மொழியின் வலிமையும் மாறிக்கொண்டே இருப்பது இயல்பு. முதன் முதலில் பெரியார் என்பது வைணவ இலக்கிய பிதாமகன் நம்மாழ்வாருக்கு கொடுக்கப்பட்ட பட்டம். இன்றைக்கு பெரியார் என்றால் ஒருவரை தான் சாரும். பகுத்தறிவும், நாத்தீகமும், கடவுள் மறுப்பும் கொண்ட ஒரு தலைவனின் பட்டமாக மாற்றி இந்த மொழி தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது. ஆளுவோர்களால் காக்கப்பட்டது அல்ல எம்மொழி. எம்மக்களால் காலம்காலமாக பாதுகாக்கப்பட்டது.
சமஸ்கிருதம் சொல்லும் தலையேழு வள்ளல்கள், இடையேழு வள்ளல்கள் இலக்கிய கதாபாத்திரங்கள். ஆனால், சங்க இலக்கியங்கள் சொன்ன கடைஏழு வள்ளல் இந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் கதாபாத்திரம். சாஸ்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கின்ற உ.வே.சா தனது சுயசரிதையில் சங்க இலக்கியங்கள், காவியங்களை நெருப்பில் போடவேண்டும் என சாஸ்திரம் சொன்னால் முதலில் நெருப்பில் போட வேண்டியது சாஸ்திரத்தை தான் என குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றையும் மீறியது அல்ல கடவுள். எல்லாவற்றையும் நேசிக்க சொன்னது தான் கடவுள் என்பது அறிவுடைமை. இந்திய அரசியல் சாசனம் வெறும் அரசியல் சட்ட நூல் அல்ல. இந்திய பண்பாட்டின் தொகுப்பு. எங்கள் வரலாறு இந்திய அரசியல் சாசனத்தின் முன்னும் பின்னும் இருந்து துவங்குகிறது. 3 ஆயிரம் ஆண்டு இந்த மண்ணை ஆண்ட வேறுகளில் இருந்து துவங்குகிறது இந்திய பண்பாட்டை உருவாக்கியது மதங்கள் அல்ல, மன்னர்கள் அல்ல. அது மக்களால் உருவாக்கப்பட்ட மொழியின் வழி, சிந்தனையில் வழி உருவானது என்கிற இந்தியா என்ற பெருமிதத்தின் வரலாற்றை அரசியல் சாசனத்தில் வரைந்து வைத்த முன்னோர்களை நினைவு கூர்ந்து பண்பாட்டு வேர் என்பது மதமோ மற்ற நிறுவனங்கள் சார்ந்தது அல்ல மொழியும், நம்முடைய சிந்தனையும் சார்ந்தது’’ என பேசினார்.