மதுரை, அக்.17- மதுரை ஆவினில் பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் முதல் செய்யப்பட்டு பாக்கெட் பால் பதப்படுத்தப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. மதுரையில் 40 வழித் தடங்களில் 390 பால் டெப்போக்கள் மூலமாக பாக்கெட் பால் விற்பனை செய்யப்பட்டது. சராசரியாக நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டருக்கு அதிகமான பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது பால் கொள்முதல் ஒரு லட்சத்து 60 ஆயிரம் லிட்டராகக் குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் குறைவால் மதுரையில் திங்களன்று ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது, காலை நான்கு மணிக்கு விநியோகம் செய்ய வேண்டிய பால் மூன்று மணி நேரம் தாமதமாக ஏழு மணிக்கு மேல் விநியோகம் செய்யப்பட்டது, பால் காலதாமதமாக வினியோகம் செய்யப்பட்டதால் மக்கள் பாதிப்படைந்தனர், கொள்முதல் விலையை உயர்த்தித் தர பால் உற்பத்தியாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பால் விநியோக தாமதத்தைக் கண்டித்து மதுரையில் உள்ள பால் வினியோகஸ்தர்கள் மதுரை ஆவின் மண்டல அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.