districts

img

அவர தீக்கதிருக்கு கொண்டு போயிருங்க தோழர்... அவர் உயிரு அங்கதான் இருக்கு!

நாளெல்லாம் தத்துவத்திற்கு தன்னை அர்ப்பணித்திருந்த ஒரு மாமனிதரை இடுகாட்டு நெருப்பிடம் கொடுத்துவிட்டோம். இருத்தலியம் பெரும் பிரச்சனையாய் மாறி நிற்கும் இக்காலத்தில் இறுமாப்புக் கொள்ளாத பெருமகனை இழந்து நிற்கிறோம். இட்டுக்கட்டி எதையும் சொல்லத் துணியாதவர் அவர். கட்சிக்கு வரும் எளிய மனிதர்களின் மனங்களுக்குள் கம்யூனிசப் புகழினை படர விட்டவர். இவை தன் புகழல்ல, கட்சியின் வரலாறென நூல்களாய் ஒப்புக் கொடுத்தவர். 

கட்சி வரலாறுகளை எழுதும் போதெல்லாம் அது கழிவிரக்கத்தைக் கோரி நிற்காமல் எப்போ தும் பார்த்துக் கொண்டவர். நிச்சயமாக உல கில் அதிகமான வர்க்கப் போராட்ட வரலாறு களைப் பதிவு செய்த அற்புதம் அவர். காலம் கோரிய இடைவெளிக்கு இடுகாடு செல்லும் வரை நியாயம் செய்தவர் அவர். எப்போதும் தெளிந்த அரசியல் முன்வைப்புகளைத் தன்ன கத்தே கொண்டிருந்தவர். தர்க்கம் ஓங்குகிற வேளைகளில் வரலாற்றின் திசைகளில் இருந்து அதற்கான காரணங்களை விளக்குபவர்.   அவரைப் பார்க்கும் போதெல்லாம் பெரும் ஒளியைக் கண்டதொரு பரவசம் கிடைத்த துண்டு. கால்கள் ஆடும் மரச்சேரில் உட்கார்ந்து  நிறை மனதோடுஎப்போதும் பேசுபவர். நிகழ்  சமூகத்தின் நிறை குறைகளை எப்போதும் கவ னத்தில் கொண்டிருந்தவர். நின்று நிதானமாய்  அறிவின் ஒளியை எப்போதும் தந்து கொண்டிருந்தவர்.  உறவு நிலையின் நிலைக்கோடுகளுக்குள் எப்போதும் சிக்காதவர். தோழா , இந்த புத்த கத்தை பெரிய சைஸ் பண்ணி ஜெராக்ஸ் எடுத்துக் கொடுக்க முடியுமா என அவர் கேட்கும் போதெல் லாம் எவருமே எடுத்துவந்து கொடுக்கிற நியா யங்களைக் கொண்டிருந்தவர். அநேகமாக ஒவ்வொரு நாளும் தீக்கதிர் நாளிதழின் முதல் வாசகர் அவர் தான். மதுரை தீக்கதிர் அலுவல கத்தின் நுழைவாயிலில் அமர்ந்து கொண்டு இருக்கும் அவர், நாம் உள்ளே நுழையும் போதே உற்சாகமாய் கை அசைத்து அழைக்கும் அன்பிற்கு அடையாளமானவர். 

முழுநேர ஊழியராய் இல்லாமலே இந்த இயக்கத்திற்காக முழு நேரமும் அவர் ஆற்றிய அரும்பணிகள் அளப்பரியவை. பொறுப்பு களோ, இலக்குகளோ இல்லாத மனதின் பெரும்பேறுக்கு சொந்தக்காரர். எழுதுகிற நூல்களுக்கெல்லாம் பெரும் ஆய்வையும், தயாரிப்பையும் செய்யும் நேர்மையாளர். உலக கம்யூனிச இயக்க வரலாற்றினை ஆங்கிலத்தி லும், தமிழிலும் எழுதி முடிக்க வேண்டும் என்பது அவரின் இலட்சியங்களுள் ஒன்று. அநேகமாய் இந்தியாவில் இருந்து உலகக் கம்யூனிச இயக்க வரலாற்றினை தொகுத்து எழுதத் துணிந்த முதல் கம்யூனிஸ்ட் அவர். தீக்கதிரில் கட்டுரை கள் எழுதும் தோழர்களிடம் அதன் நிறைகுறை களை முழுமனதோடு தெரிவித்தவர்.  கம்யூனிச இயக்கங்களில் இருக்கும் உறுப்பி னர்கள், ஆதரவாளர்கள் மனம் சுருங்கிடாமல், நம்பிக்கையை ஏற்றும் வண்ணம் எழுத வேண்டும் என்பதில் உறுதியாய் நின்றவர். மன தால் கூட அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடக் கூடாதென நினைத்த சிந்தனையாளர். தன்னோடு பேசும் தோழர்களின் குடும்பங்களைப் பற்றி எப்போதும் விசாரிக்கும் கனிவானவர். அவர் களின் குடும்ப சுக துக்கங்களில் மனம் கலங்கு பவர். பெரும் உறுதி கொண்டவராயினும் குழந்தை மனதுக்காரர். மிகுந்த மகிழ்ச்சியில் தெறிக்கும் அவரின் அரிதான வெடிச் சிரிப்புக்கு ரசிகர்கள் ஏராளம். 

நிதானமாய் நினைவுகளோடு நிழலாடிக் கொண்டே இருந்தவர். நீங்கள் கட்டாயம் மார்க்சி யத்தை கற்க வேண்டும், இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றினை படிக்க வேண்டும், இந் திய சமூகவியல் படிக்க வேண்டும் என எப்போ தும் இளைய தோழர்களை வலியுறுத்தியவர். மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் ஒரு எட்டுக்கு எட்டு அறையில் உட்கார்ந்து கொண்டு உலகை அளந்த மாமனிதர். எப்போதும் புத்த கங்களுக்குள் ஏர்பூட்டியவர். தத்துவங்களின் மீது சமர் கொண்டிருந்த சரித்திர நாயகன் சாய்ந்தது நமக்குப் பேரிழப்பு. கம்யூனிச இயக்கத்தின் காலப்பெட்டகம் அவர். அவர் மறைந்த 2 மணி நேரத்திற்கு பிறகும் தோழர் ஒருவர் அவரைத் தட்டி எழுப்பி எந்திரிங்க ,  எந்திரிங்க எனக் கேவி அழுத காட்சிகளின் நினைவகல மறுக்கிறது.  தோழர் என்.ராமகிருஷ்ணனின் மகள் “மதியம் 2 மணிக்கு தீக்கதிர் போயிட்டு 7 மணிக்கு வந்துடுறேனு” சொன்னார் தோழர். உடம்பு சரியில்லை, காலையில தான அங்க இருந்து வந்தீங்கனு சொல்லி அனுப்பாம விட்டுட்டேன். அவர தீக்கதிருக்கு கொண்டு போயிருங்க தோழர். அவர் உயிரு அங்க தான் இருக்கு” என சொல்லச் சொல்ல உணரா நிலைக்கு உள்ளானோம்.  மரணங்கள் எப்போதும் இழப்புகளைத் தான் தரும். அதில் மாற்றமில்லை. இது பேரிழப்பு. மொத்த இயக்கத்திற்குமான பேரிழப்பு. அவர் ஒரு வெளிச்சக்கீற்று. வரலாற்றின் வசந்தம். சுடர்விட்டெரியும் ஒளி! 

- எஸ்.கார்த்திக் 
மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர், 
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

;