districts

img

பனை மரத்தை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

பாபநாசம், செப். 4-  பாபநாசம் அடுத்த உத்தாணியில் தொடங்கும், சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் உடைய சுந்தரப் பெருமாள் கோயில் பை பாஸ் சாலையில் இரு புறமும் தமிழர்களின் வாழ்வியல், பண்பாட்டோடு இணைந்த, மாநில மரமான பனை மரங்கள் வரிசையாக நிற்கின்றன.  இப்பகுதியில் ஏராளமான வாகனங்களில் செல்பவர்கள், வரிசையாக நிற்கும் பனை மரங்களை ரசிக்க முடியாதபடி, பல பனை மரங்களில் கொடிகள் படர்ந்துள்ளன. இதில் கதம்ப வண்டுகள் கூடு கட்டினாலோ, விஷ ஜந்துக்கள் அண்டினாலோ தெரியாது. பனையால் பல பலன்கள் மக்களுக்கு கிடைக்கின்றன. பனை ஓலை விசிறியாக பயன்படுகிறது. பதநீர் மருத்துவ குணம் உடையது. நுங்கு உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. பனை வெல்லம் கருப்பட்டி சர்க்கரைக்கு மாற்றாகும். பனங்கிழங்கு சத்தான உணவு. பனை மரம் மண் அரிப்பை தடுக்கும். பனை ஓலையை கூரையாக வேயலாம். பாய், கூடையாக பின்னலாம். கை வினைப் பொருள் தயாரிக்கலாம். பண்டைய கால இலக்கியம், வரலாறு ஓலைச் சுவடிகளில் தான் எழுதப்பட்டன.  முதிர்ந்த பனை மரங்கள் மரச் சட்டம், அலங்காரப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகின்றன. இதனால், பனை மரத்தை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று இந்த பை பாஸ் சாலையோரம் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப் படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.