districts

திருச்சி முக்கிய செய்திகள்

தஞ்சாவூரில் இணையவழியில் பொறியாளரிடம் ரூ. 6.80 லட்சம் மோசடி

தஞ்சாவூர், ஜூன்.8 -  தஞ்சாவூரில் இணையவழியில் பங்கு சந்தை வர்த்தகம் எனக் கூறி பொறியாளரிடம் ரூ.6.80 லட்சம் மோசடி செய்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூரைச் சேர்ந்த 39 வயது பொறியாளரின் பேஸ்புக் முகவரி, வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மார்ச் மாதத்தில் மர்ம நபர் அனுப்பிய தகவலில் இணையவழியில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  இதை நம்பிய பொறியாளர், மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 6.80 லட்சம் அனுப்பினார். ஆனால், எந்தவித லாபமும் கிடைக்காததால் மர்ம நபரை பொறியாளர் தொடர்பு கொள்ள முயன்றபோது, அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொறியாளர், தஞ்சாவூர் சைபர் குற்றக் காவல் பிரிவில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தஞ்சையில் கால்நடை வளர்ப்பு இலவசப் பயிற்சி

தஞ்சாவூர், ஜூன்.8 -  தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப்பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி ஜூன்.24,25,26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.  இதுகுறித்து பல்கலைக்கழகப் பயிற்சி மையத் தலைவர் கே. ஜெகதீசன் தெரிவித்திருப்பதாவது: தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கறவை மாடு வளர்ப்பு குறித்து ஜூன்.24 ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து 25 ஆம் தேதியும், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து 26 ஆம் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவசப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.  இப்பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியமில்லை. மேலும் விவரங்களுக்கு, 04362 - 264665 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

பள்ளி, கல்லூரி  விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் 

தஞ்சாவூர், ஜூன் 8 -  தமிழ்நாடு அரசால், தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோர் - சீர்மர பினர்-சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான, பள்ளி விடுதிகளில் மாணவர்களுக்கு 26-ம், மாணவிகளுக்கு 11-ம், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ விடுதிகளில் மாணவர்களுக்கு 7-ம், மாணவிகளுக்கு 11-ம் என மொத்தம் 55 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.  பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் , மூன்று வேளை உணவு, தங்கும் வசதியும்,  10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்-மாணவியருக்கு 4 இணைச்சீருடைகள் வழங்கப்படும்.  10, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் - மாணவியருக்கு கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பு வழிகாட்டிகள்  மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.  கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப் பயிலும் மாணவ-மாணவியருக்கு ஜமுக்காளமும், பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவியருக்கு ஆண்டுதோறும் பாய்களும் வழங்கப்படும்.  மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும், சேருவதற்கான தகுதி பெற்றோர்- பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி,மீ க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விடுதி மாணவியருக்கு பொருந்தாது.  தகுதியுடைய மாணவ-மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்- காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகத்தில் ஜூன் 14-க்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்தவரை  ஜூலை 15-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் விண்ணப்பி க்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  எனவே. பள்ளி- கல்லூரி மாணவ - மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்த லைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். 

ஈச்சங்கோட்டை பண்ணையில் மரங்களின் பலன்களை அனுபவிக்கும் உரிமம் பொது ஏலம்

தஞ்சாவூர், ஜூன் 8 -  தஞ்சையில் உள்ள கால்நடை உயிரின பெருக்கு பண்ணையில் பலன் தரும் மரங்களின் பலன்களை அனுபவிக்கும் உரிமம் பொது ஏலம் வருகிற ஜூன்.13 ஆம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை உயிரின கால்நடை பெருக்கு பண்ணையில் 675 பல வகை மரங்களின் மகசூல் பலன்களை அனுபவிக்கும் உரிமம் 2023-2024. 2024-2025, 2025-2026 ஆகிய 3 ஆண்டுகளுக்கு பொது ஏலம் வருகிற 13 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஈச்சங்கோட்டையில் உள்ள கால்நடை பெருக்குப் பண்ணை துணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.  இதில் 100 பனை மரங்கள், 25 இலுப்பை மரங்கள், 95 மா மரங்கள், 10 முந்திரி மரங்கள், 28 இலவம் மரங்கள், 80 வேப்ப மரங்கள், 325 புளிய மரங்கள், 7 பலா மரங்கள், 5 நெல்லி மரங்கள் ஏலமிடப்படுகிறது. ஏலம் அரசு விதிமுறைகளின்படி பகிரங்கமாக நடைபெறும். ஒவ்வொரு வகை பலன் தரும் மரங்களும் தனித்தனியே ஏலமிடப்படும்.  ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வைப்புத் தொகை ரூ.3 ஆயிரத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துணை இயக்குநர், கால்நடை உயிரின பெருக்கு பண்ணை, ஈச்சங்கோட்டை என்ற பெயருக்கு ஜூன் 6 அன்று அல்லது அதற்கு பிறகு பெறப்பட்ட வங்கி வரைவோலை மற்றும் குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை வருகிற 12 ஆம் தேதி  காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் ஏலத்தில் கலந்து கொள்ள பதிவுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. அதிகப்படியாக ஏலத்தொகை கோரும் ஏலதாரரின் தொகை அங்கீகரிக்கப்படும். ஏலம் எடுத்தவுடன் மொத்த ஏலத்தொகையில் 50 விழுக்காடும், ஒரு ஆண்டிற்கு பின் 50 விழுக்காடு தொகையயும் சேர்த்து ரொக்கமாக செலுத்த வேண்டும்.  அவ்வாறு செலுத்த தவறினால் வைப்புத்தொகையை அவர் இழக்க நேரிடும். தவிர்க்க முடியாத காரணத்தால் ஏலத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பழுதான இருசக்கர வாகனத்திற்கு காப்பீட்டுத் தொகை வழங்கல் நுகர்வோர் நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கை 

திருவாரூர்,ஜூன்.8- திருவாரூர் மாவட்டம்,குடவாசல் ஒன்றியத்தில் உள்ள திருவிழிமிழலை கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமி பிரியா (30). இவர் திருவாரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஷோரூம் ஒன்றில் வாங்கிய இருசக்கர வாகனம் பழுதானது. இதுதொடர்பாக பழுது நீக்கம் செய்யப்பட்ட தொகையை காப்பீட்டு நிறுவனத்திடம் கேட்டபோது, அதற்கு அந்த நிறுவனத்தினர் மறுத்தனர். இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லட்சுமி பிரியா திருவாரூர் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.கடந்த ஜனவரி 5ஆம் தேதி நடைபெற்ற இறுதி விசாரணையின் போது காப்பீட்டு நிறுவனத்திற்கு ரூ.62 ஆயிரத்து 448 வழங்கிட உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால்  மீண்டும் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி பாதிக்கப்பட்ட லட்சுமி பிரியா தரப்பில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக காப்பீட்டு நிறுவனத்திற்கு நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில்  வெள்ளிக்கிழமையன்று வட்டி உட்பட ரூ.65 ஆயிரத்து 990 ஐ சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் காசோலையாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழங்கியது. இந்த காசோலையை லட்சுமி பிரியாவிடம் நீதிமன்ற ஆணைய தலைவர் சேகர்,உறுப்பினர் லட்சுமணன் அடங்கிய அமர்வு வழங்கியது.

மயிலாடுதுறை-சேலம் ரயிலை கூடுதல் பெட்டிகளோடு இயக்கக் கோரிக்கை ரயில் மறியலில் ஈடுபட பயணியர் சங்கம் முடிவு

மயிலாடுதுறை, ஜூன் 8-  மயிலாடுதுறையில் இருந்து சேலம் செல்லக்கூடிய ரயிலில் அதிக அளவில் பயணிகள் செல்வதால் கூடுதல் பெட்டிகளை இணைக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ஜூன் 8 சனிக்கிழமையன்று  முதல் குறைந்த பெட்டிகளுடன் மெமு ரயிலாக ரயில்வே நிர்வாகம் மாற்றியதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டனர். மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய ரயில் கடந்த வருடம் சேலம் வரை நீட்டிக்கப்பட்டது. காலை 6.20 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்படும் இந்த ரயில் கும்பகோணம் , தஞ்சாவூர் , திருச்சி , கரூர் , நாமக்கல் மார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது. தொடர்ந்து மறுமார்க்கமாக சேலத்தில் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சி வழியாக மயிலாடுதுறையை இரவு 9.45 மணிக்கு வந்தடைகிறது. முன்பதிவு இல்லாத இந்த ரயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர்கள் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.  சேலம் வரை நீட்டிக்கப்பட்டதில் இருந்து பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து வந்ததால் 12 பெட்டிகளுடன் இயங்கிய இந்த ரயிலை கூடுதல் பெட்டிகளுடன் இணைத்து 16 பெட்டிகளாக இயக்க வேண்டும் என மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் பல நாட்களாக கோரிக்கை விடுத்து ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்தனர். .இது தொடர்பாக ரயில் பயணிகள் சங்கத்தினர் திருச்சி கோட்ட மேலாளரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து சனிக்கிழமை  முதல் மயிலாடுதுறையில் இருந்து சேலம் செல்லக்கூடிய ரயில் மெமுவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் பயணிகள் செல்லக்கூடிய சேலம் ரயிலில் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே அமரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான பயணிகள் நின்று கொண்டு பயணிக்ககூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. ரயில் எந்த ஊருக்கு செல்கிறது என்ற பெயர் பலகை வைக்கப்படாததால் பயணிகள் மயிலாடுதுறை- சேலம் செல்லக்கூடிய ரயிலை அடையாளம் காண்பதில் சிரமப்பட்டனர். எனவே பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் மயிலாடுதுறை- சேலம் ரயில் ஐசிஎப் வண்டியாக கூடுதல் பெட்டிகளுடன் இணைத்து இயக்க வேண்டுமென மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் வழங்க  உரிய நடவடிக்கை மேற்கொள்க: அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் 

கரூர்,ஜூன் 8- கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடனான  ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் தலைமையில் ஜூன் 8 அன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் என 50 இடங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் மீது முன்னுரிமை கொடுத்து விரைந்து தீர்வுகாண வேண்டும்.  பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். கரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்தி பொதுமக்களிடம் கொண்டு சேர்த்திட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.