districts

img

திருலோகி மக்களுக்கு பட்டா கிடைத்தும் இடம் கிடைக்கவில்லை

கும்பகோணம், ஆக.16- திருலோகி மக்களுக்கு பட்டா கிடைத்தும் இடம் கிடைக்காததால், ஆக.28 அன்று காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. திருப்பனந்தாள் ஒன்றியம் திருலோகி தெற்கு தெரு, உக்குடித்தெரு, வடக்கத்தெரு ஆகிய இடங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கியும் இடம் அளந்து கொடுக்கப்படவில்லை. குடிமனை இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க கோரியும் பட்டா வழங்கியவர்களுக்கு இடம் அளந்து கொடுக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆக.28 அன்று காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து, திருவிடைமருதூர் வட்டாட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.  அம்மனுவில், “தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்தில் திருலோகி தெற்குத்தெரு, 43 மேலசூரியமூலை உக்குடித்தெருவில் வசிப்பவர்களுக்கும் பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல கட்ட போராட்டம் நடத்தப்பட்டது. அதன்பின்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு இலவச மனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்களுக்கு பட்டாவிற்கு உண்டான இடம் அளந்து கொடுக்கவில்லை. திருலோகி கைலாசநாதர் கோயில் தெருவில் வசிக்கும் மக்களுக்கு 2023 ஆகஸ்ட் 21 அன்று, அன்றைய வட்டாட்சியர் பட்டா வழங்கிய நபர்களுக்கு உடனே இடத்தை வழங்குவதாக தெரிவித்தார். ஆனால் வட்டாட்சியரின் வாக்குறுதிப்படி இதுவரை குடிமனை பட்டா வழங்கவில்லை. எனவே உடனடியாக பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கக் கோரியும், பட்டா வழங்கியவர்களுக்கு இடம் அளந்து தரக் கோரியும், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் வீட்டு மனை இல்லாமல் சிரமப்படும் மக்களுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க கோரியும் ஆக.28 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.