districts

img

வீரமாகாளி அம்மன்கோயிலில் 2ஆம் நாள் தேரோட்டம்

அறந்தாங்கி, ஆக 1-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மையப்பகுதியில் அமைந்திருக்கும் வீரமாகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 30 நாளும் திருவிழா நடைபெறும். இவ்வாண்டிற்கான திருவிழா கடந்த ஜூலை 12 வெள்ளிக்கிழமை, பூச்சொரிதல் விழாவுடன்  தொடங்கியது. கடந்த 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் மண்டகப்படிதார்கள் சார்பில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் இரண்டு நாள் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். பாலைவனம் ஜமீன்தார் துரை தாமரைசெல்வன் தேர் வடம் பிடித்து கொடுக்க  புதன்கிழமை முதல் நாள் தேர் திருவிழா துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து சென்று பழைய ஆஸ்பத்திரி சாலை ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயம் அருகே  நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வியாழன் இரண்டாம் நாள் பாரதிதாசன்தெரு, பெரிய பள்ளிவாசல் வழியாக தேர் இழுக்கப்பட்டு வ.உ.சி. திடல் அருகே நிலைக்கு சென்றது. ஆடிதிருவிழாவை முன்னிட்டு தினமும் மதியம் அன்னதானமும், மாலை நேரத்தில் கோயில் கலை அரங்கில் பல தரப்பட்ட கலை  நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் செவ்வாய்க்கிழமை தெப்பத் திருவிழாவுடன் ஆடிப் பெருந்திருவிழா நிறைவு பெறவுள்ளது.