விழுப்புரம்.ஜூலை 11- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரும்புகை கிராம கல்குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்ட போது, அதில் இருந்து கற்கள் சிதறி விழுந்தன. அப்போது 500 மீட்டர் தூரத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊரணி தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மனைவி செல்வி (45) தலையில் கல் விழுந்தது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் அங்கு திரண்ட செல்வியின் உறவினர்களும், கிராம மக்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் செஞ்சி வட்டாட்சியர் ராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், கல் குவாரி மீது நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்டஈடு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் செல்வியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக செஞ்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.