ஆம்பூர், டிச.16 - ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கக் கோரி தொழி லாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டில் இயங்கி வருகிறது கூட்டுறவு சர்க்கரை ஆலை. தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய சர்க்கரை ஆலைகளை போல் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையையும் இயக்க வலியுறுத்தி சிஐடியு, தொமுச, ஐஎன்டியூசி, ஏடிபி ஆகிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைகுழு சார்பில் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வேலூர் மாவட்டச் செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆம்பூர் தாலுகா செயலாளர் மணிமாறன் கூறுகையில், “ ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பல ஆண்டுகாலம் லாபத்தில் இயங்கி வந்தது. ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி விவசாயிகளும் பயனடைந்து வந்தனர். படிப்படியாக ஆலையின் அரவை நிறுத்தப்பட்டது. இதனால், விவசாயிகளின் குடும்பங்களும், ஆலை தொழிலாளர்கள் மற்றும் கரும்பு வெட்டும் தொழிலளர் குடும்பங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக மூடப்பட்ட ஆலையை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு திறக்க வேண்டும் என்றும் 8 மாத காலமாக சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்றும் அமைச்சரும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்” என்றனர்.