districts

வில்லங்க சான்றிதழில் ஆன்லைன் மூலம் திருத்தம் பதிவுத்துறை அறிவிப்பு

சென்னை, டிச.2- வில்லங்க சான்றிதழில் ஆன்லைன் மூலம் திருத்தம் செய்யலாம் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்து வதற்காக பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1975ம் ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான வில்லங்க சான்றிதழ்கள் விரைவுக்குறியீடு மற்றும் சார்பதிவாளரின் மின்கையொப்பமிட்டு அலுவலகம் வராமல் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆவணத்தில் உள்ள விவரத்திற்கும் வில்லங்க சான்றிதழில் உள்ள விவரத்திற்கும் ஏதேனும் மாறுபாடுகள் இருக்கும்பட்சத்தில் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்களை அளிக்கும் நடைமுறை தற்போது உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு காலவிரயமும், சிரமமும் ஏற்படுகிறது. நேரில் சென்று விண்ணப்பம் அளிப்பதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு வில்லங்க சான்றிதழில் உள்ள விவரங்களில் திருத்தங்கள் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வில்லங்க சான்றிதழில் உள்ள விவரங்களில் திருத்தங்கள் செய்ய பதிவுத்துறையின் இணையதளத்தில் ‘அட்டவணை தரவு திருத்தம்' என்ற தெரிவின் வழி சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் சார் பதிவாளரால் சரி பார்க்கப்பட்டு மாவட்ட பதிவாளரின் ஒப்புதலுடன் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.