விழுப்புரம்,டிச.7- கொரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட நாடகக் கலைஞர்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியை சேர்ந்த ராஜா தேசிங்கு நாடக மற்றும் கலை குழுவினர் ஆறுமுகம் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், வருடத்தில் 6 மாதம் மட்டுமே அதுவும் திருவிழாக் காலங்களில் நாடகம் நடத்தி வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இந்த நாடகத் தொழிலை நம்பியே எங்களது குடும்பமும் உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டு காலம் தமிழக அரசின் பொது முடக்கத்தால் நாடகம் நடத்த முடியாமல் வருமானமும் இல்லாமல் அவதிப்பட்டோம். சிலர் கொரானோ நோய்தொற்றின் காரண மாகவும், சில கலைஞர்கள் வறுமை என்னும் கோரப்பிடியால் சிக்கியும் பலியானார்கள். அதிலிருந்து மீள வழி தெரியாமல் முடங்கி கிடக்கின்றோம். எனவே, கருணை மனம் கொண்டு எங்களின் நாடகக் கலைஞர்களின் வாழ்வாதாரம் செழிக்க சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு எங்கள் நாடகக் குழுவில் உள்ள 21 கலைஞர்க ளுக்கும் வங்கி மூலம் கடன் கொடுத்து உதவி செய்ய வேண்டும். அந்தக் கடனை தொழிலில் கிடைக்கும் வரு மானத்தை கொண்டு சிறுக சிறுக திருப்பி அடைத்துவிடுகிறோம். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.