districts

img

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம்

திருவள்ளூர், டிச.13- மிக்ஜம் புயல் மற்றும் மழை யால் திருவள்ளூர் மாவட் டம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள தால்  அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய குழுவிடம் மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், மிக்ஜம் புயல் மற்றும் மழையால்  பாதிக்கப்பட்ட ஆவடி, புழல் ஏரி, சோழவரம் ஏரி,  சிறுவாக்கம், கொசஸ்தலை ஆறு, மீஞ்சூர், சுப்பா ரெட்டி பாளையம், அத்திப்பட்டு புதுநகர், பழவேற்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒன்றிய குழுவை சேர்ந்த ஏ.கே.சிவ்ஹரே, விஜயகுமார்,பவ்யா பாண்டே ஆகியோர் புதனன்று (டிச 13),  பார்வையிட்டனர்‌. ஒன்றிய குழுவுடன் நகராட்சி நிர்வாக செயலர்  கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியர்  த. பிரபு சங்கர் இணை ஆணையர் சிம்ரஞ்சித் சிங் கலோன் மாநகராட்சி ஆணை யாளர்  ஷேக் அப்துல் ரகுமான், பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் ஆய்வில் கலந்து கொண்டுள்ளனர். ஒன்றிய ஆய்வு குழுவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். அதன் விவரம் வருமாறு. டிச 4 அன்று ஏற்பட்ட புயல் திருவள்ளூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பை யும் சேதாரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மிகப்பெரும் அளவில் பொருட்கள் சேதம் கால்நடைகள் உயிரிழப்பு விவ சாய நெற்பயிர், மா, வாழை, பூ பயிர் உள்ளிட்ட விவசாயம் கடுமை யாக பாதித்துள்ளது. மீன்பிடி சாத னங்கள் , மின்கம்பங்கள் சேதம், சாலைகள் சேதம், சிறு தொழில்கள் பாதிப்பு என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு பிரதான குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி திறந்து விடப்பட்டதும் பூண்டியில் இருந்து செல்லும் கொசஸ்தலை ஆறு, பிச்சாட்டூர் ஏரியிலிருந்து செல்லும் ஆரணி ஆறு ஆகிய இரண்டு ஆற்றுப்படுகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரை ஓரம் உள்ள பல கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

ஆரணி ஆற்றுப்படுகையில் ஆரணி பேரூராட்சி ஒரு பகுதியும், மங்கலம் பகுதி முற்றிலும் துண்டிக்கப்பட்டும் பெருவாயல் பொன்னேரி நகராட்சியில் குன்ன மஞ்சேரி ஆற்றங்கரை ஓரம், பெரும்பேடுக்குப்பம், ஆகிய பகுதிகளில் கரைமேல் தண்ணீர் சென்றதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ரெட்டிபாளையம் அருக்கி கரை உடைப்பு ஏற்பட்ட தால் ரெட்டிபாளையம், சோமஞ் சேரி, தத்தமஞ்சி, வஞ்சி வாக்கம், பிரளையம்பாக்கம், ஆண்டார்மடம், கடப்பாக்கம் போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடு களுக்குள் தண்ணீர் சூழ்ந்து பொருட்கள் அடித்து சென்றது. கால்நடைகள் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. டிச 5 அன்று ரெட்டிபாளையம் சோமஞ்சேரி பகுதி களில் இரவு தண்ணீர் அதிகரிக்க அதி கரிக்க இரவு முழுவதும் மக்கள் வீடுகளுக்கு மேல் ஏறி நின்று தண்ணீரில் இருந்து தங்களது உயிரை காத்துக் கொள்ள போராடினர்.

அதேபோல் கொசஸ்தலை ஆற்றுப்படுகையிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கவுண்டர் பாளையம், சுப்பா ரெட்டிபாளையம், பள்ளிபுரம், நாப்பாளையம், அத்திப்பட்டு புதுநகர் போன்ற பகுதிகளில் நீர் சூழ்ந்து பாதிப்பை கடுமையாக்கியது. இந்த ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பழவேற்காடு பகுதியில் உள்ள  40 மீனவ குப்பங்கள் தீவாக மாறியது. லைட்ஹவுஸ்குப்பம், கோட்டை குப்பம், மாதாகுப்பம், தோனிரோ குளத்துமேடு இடமணி போன்ற பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்ததால், பழ வேற்காடு செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்தப் பகுதிக்கு மூன்று நாட்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன் அத்தியா வசிய சேவைகள் முற்றிலும் முடங்கியது. புயல் காற்றால் மீன வர்களின் படகுகள் கட்டுமரம் மீன்பிடி சாதனங்கள் பெருமளவு சேதாரம் ஏற்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் மழைநீருடன் சிப்காட் தொழில் பேட்டையின் கழிவு நீரும் கலந்து தாமரை குலத்தின் வழியாக கும்மிடிப்பூண்டி பஜார் சாலை களில் பெருக்கெடுத்து ஓடியது இதனால் வீடுகள்உள்ள பகுதிகளில் சாக்கடை துர்நாற்றம் வீசியது. திரு நின்றவூர் நகராட்சியில் உள்ள பெரியார் நகர் ஈஷா பெரிய ஏரி நிரம்பி 14, 15, 16, 17 ஆகிய நான்கு வார்டுகளுக்கு உட்பட்ட 2500 க்கும்மேற்பட்ட வீடுகள் ஒரு வார காலமாக தண்ணீர் மிதந்து வருகிறது. நகராட்சி மாவட்ட நிர்வாகம்  தண்ணீர் வெளியேற்ற பல முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் பழவேற்காடு முகத்துவாரம் தூர் வாருவதுடன் வீடுகளில் ஏற்பட்ட பொருள் சேதம், கால்நடைகள் பாதிப்பு  குறித்து மதிப்பீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய பாதிப்புகள் குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடியாக சென்று சேதாரங்கள் மதிப்பீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும், குறிப்பாக பழங்குடி மக்கள் மாவட்டம் முழுவதும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதால் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனுவை கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன் ஆகியோர் ஒன்றிய குழுவினரிடம் வழங்கினர்.