வீரபத்ரன் சாமி சிலைமீது பெட்ரோல் குண்டு வீச்சு முந்திரி வியாபாரி ஒப்புதல் வாக்குமூலம்
சென்னை, நவ. 10- சென்னை கொத்தவால்சாவடியில் வீரபத்ரன் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசிய போதை ஆசாமியை பக்தர்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தார். சென்னை, பாரிமுனை, கொத்த வால்சாவடி, வீரபத்ரன் கோவில் தெருவில் வீரபத்ரன் கோவில் உள்ளது. கோவிந்தப்ப நாயக்கன் தெரு, வீரபத்ரன் தெரு சந்திப்பில் இந்துசமய அறநிலையத்திற்கு சொந்தமான இந்த கோவிலை ‘வீரபத்ரன் தேவஸ்தானம்’ என்ற அமைப்பு சார்பில் நிர்வாகம் செய்து வருகின்றனர். வெள்ளி யன்று (நவ.10) வழக்கம் போல் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென இடுப்பு பகுதியில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை எடுத்து தீ வைத்து கொளுத்தி சாமி சிலை இருந்த கருவறை மீது வீசி எறிந்தார். அது சாமி சிலை மீது பட்டு கீழே விழுந்து உடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட பக்தர்கள் பதட்டம் அடைந்து அங்குமிங்குமாக சிதறி ஓடினர். பெட்ரோல் குண்டு வீசிய ஆசாமியும் தப்பி ஓட முயன்றார் அப்பொழுது கோவிலில் இருந்த பூசாரி மற்றும் பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த னர். உதவிஆணையர் வீரகுமார் தலைமை யில் முத்தியால்பேட்டை காவல்நிலைய த்தில் அவரை ஒப்படைத்தனர். அந்த நபரி டம் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதி கொத்தவால் சாவடியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் (வயது 39) என்பது தெரிய வந்தது. கோவிலுக்குள் சாமி மீது பெட்ரொல் குண்டு வீசியது ஏன் என்று போலீ சார் முரளி கிருஷ்ணனிடம் கேட்ட போது, ‘‘நான் கொத்தவால் சாவடி மார்க்கெட் பகுதி யில் முந்திரி மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. எத்தனையோ முறை வீரபத்ரன் சாமியிடம் எனது குறையை தீர்க்க கோரி முறையிட்டேன். ஆனால் சாமி எனக்கு எது வும் செய்து தரவில்லை. அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசினேன்’’ என காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்தார்.
தீபாவளி முன்னேற்பாடு 500 காவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி
செங்கல்பட்டு, நவ.10- தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து மற்றும் குற்றத்தடுப்பிற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 காவலர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறையில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்க ளுக்கு பயணம் செய்யும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், மற்றும் எந்தவித சிறு விபத்தும் ஏற்படாமல் இருக்கவும் முக்கிய சந்திப்பு களில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய சந்திப்பு பகுதிகள் மற்றும் மாவட்ட எல்லை களில் வாகன சோதனை சாவடிகளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 24 இடங்களில் சோதனை பணிக் காக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், மார்கெட் மற்றும் அனைத்து வழிபாட்டு தளங்கள் அருகிலும் குற்றம் ஏதும் நடை பெறாமல் இருக்க கண்காணிப்பு கோபுரங் கள் அமைக்கப்பட்டு காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 இடங்க ளில் ரோந்துபணிக்காக காவலர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். மேலும், செங்கல் பட்டு மாவட்டத்தில் உள்ள மூன்று உட்கோட்டத்திலும் எந்தவித போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வும் பணிக்காக காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் தலைமை யில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 20 காவல் ஆய்வாளர்கள், 90 உதவி ஆய் வாளர்கள் மற்றும் காவலர்கள் என சுமார் 500 காவலர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
புழல் ஏரிக்கு நீர்வரத்து 606 கன அடியாக அதிகரிப்பு
சென்னை,நவ.10- சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகள் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது. வியாழனன்று இரவு தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. இதனால் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 606 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் இப்போது 2745 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. மொத்தம் உள்ள 21 அடியில் 18.67 அடிக்கு தண்ணீர்உள்ளது. ஏரியில் இருந்து 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
காஞ்சிபுரம்-செங்கல்பட்டில் 55 ஏரிகள் நிரம்பியது
காஞ்சிபுரம்,நவ.10- காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக 55 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. 111 ஏரிகள் 75 விழுக்காடும் , 174 ஏரிகள் 50 விழுக்காடும், 406 ஏரிகள் 25 விழுக்காடும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மாடம்பாக்கம் ஏரி தண்ணீர் குடிநீருக்கு ஏற்றதாம்
தாம்பரம்,நவ.10- மாடம்பாக்கம் ஏரியில் உள்ள 5 கிணறுகளில் இருந்து சிட்லபாக்கம் மற்றும் மாடம்பாக்கத்தில் உள்ள சுமார் 3,300 வீடுகளுக்கு தினமும் 1.5 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் சிட்லபாக்கம் பகுதியில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் தரமற்று பயன்படுத்த முடியாத அளவுக்கு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.இதைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மாடம்பாக்கம் ஏரியில் உள்ள தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பினர். இதன் முடிவில் மாடம்பாக்கம் ஏரியில் இருந்து விநியோகிக்கப்படும் தண்ணீர் குடிநீருக்கு உகந்தவை என்பது உறுதியானது. இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா கூறும்போது, “மாடம்பாக்கம் ஏரியில் இருந்து விநியோகிக்கப்படும் தண்ணீர் பற்றி கண்காணித்து வருகிறோம். தண்ணீரின் தரம் குறித்த சோதனையில் எந்த குறைபாடுகளும் இல்லை. பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை. மாடம்பாக்கம் ஏரி அருகே புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ரூ.1,500 கோடியில் இப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கவும் அரசு திட்டமிட்டு உள்ளது என்றார்.
தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆணையர் சந்தீப்ராய் ஆய்வு
சென்னை, நவ. 10- சென்னை தி.நகரில் தீபாவளியையொட்டி மக்கள் குடும்பம் குடும்பமாக புத்தாடைகள் வாங்க குவிந்து வருகின்றனர். இதையொட்டி தி.நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆய்வு செய்தார். தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களாக சென்னை, புறநகர் பகுதி மக்கள் புத்தாடைகளை வாங்க துணிக் கைகளில் குடும்பம் குடும்பமாக குவிந்து வருகின்ற னர். சென்னை தியாகராயநகர் பகுதியில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் போன்ற சாலை களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் காலை முதலே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. இந்த கடைகளுக்கு குடும்பம், குடும்பமாக வந்து புத்தாடைகளை அள்ளிச் சென்றனர். துணிக்கடைகளுக்கு இணையாக சாலையோர கடைகளிலும் துணிகள் மற்றும் அணிகலன்கள் விற்பனை களை கட்டி வருகிறது. சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் வெள்ளியன்று காவல் ஆணையர் தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, தி.நகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சென்னை பெருநகர காவல் துறை சார்பாக செய்யப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
தீபாவளி கொண்டாட ஒரே நாளில் 3.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
சென்னை, நவ. 10- தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வியாழ னன்று ஒரே நாளில் 3.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ் (மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை),கோயம்பேடுபேருந்து நிலை யம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படு கின்றன. இது தொடர்பாக பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டதை யடுத்து, அவரவர் செல்லும் ஊர்களுக்கு ஏற்ப பேருந்து நிலையங்களுக்குச் சென்று பயணத்தைத் தொடர்ந்தனர். இந்த பேருந்து நிலையங்களை இணைக்கும் வகை யில் கோயம்பேட்டில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆம்னி பேருந்துகளைப் பொறுத்த வரை, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையங்கள் வாயிலாக பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருப்போரூர்-, செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர். இந்த பேருந்துகளில் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்தில் ஏறிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு போக்கு வரத்துக் கழக பேருந்துகள் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலை பேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்க ளுக்கு 1800 425 6151 மற்றும் 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
ஓடும் ரயிலில் மருத்துவம்: பாதுகாப்பு உதவி கேட்டு 80 ஆயிரம் புகார்கள்
சென்னை,நவ.10- ரயில்களில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு அவசர மருத்துவ உதவி, பெண்கள் பாதுகாப்பு, பயணத்தின் போது இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரச்சனை களுக்கு தீர்வு காண ரயில்வேத் துறை உதவி எண்களை அறிவித்து சேவை செய்து வருகிறது. செல்போன், இன்டர்நெட், எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனாலும் 24 மணி நேரமும் ‘ரயில் மெடேடு’ உதவி மையம் எண் 139 பயணிகள் இடையே அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக உள்ளது. தெற்கு ரயில்வேயில் 51 விழுக் காட்டிற்கும் அதிகமான புகார்கள் ரயில் மெடேடு உதவி மையம் 139 மூலமாகவும் 25 விழுக்காடு ரயில் மெடேடு இணைய தளத்தின் மூலமாகவும் 4.5விழுக்காடு சமூக ஊடகங்கள் மூலமாகவும் பெறப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில் நடப்பு நிதியாண்டில் நவம்பர் 9-ந்தேதி வரை மொத்தம் 80,915 புகார்கள் ரயில் மெடேடில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 80,902 குறைகள்நிவர்த்தி செய்யப்பட்டு உள்ளது. இது 99.98 சதவீதமாகும்.அக்டோபர் மாதத்தில் மட்டும் 14,826 புகார்கள் ரயில் மெடேடில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனை சராசரியாக 36 நிமிடங்களுக்குள் தெற்கு ரயில்வே தீர்வு காண முடிந்தது. மருத்துவ அவசர நிலை மற்றும் பாது காப்பு உதவியின் போது சராசரியாக தீர்வு நேரம் 8 நிமிடங்களாக உள்ளன. அதாவது புகார் வந்த 8 நிமிடத்தில் சம்பந்தப்பட்ட வர்களுக்கு அவசர உதவி வழங்கப்பட்டு பாதுகாக்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான சேவையை அளிக்கும் வகையில் இந்த உதவி எண்கள் மூலம் தகவல் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படுகின்றன. ரயிலில் விட்டு சென்ற விலை மதிப்புமிக்க பொருட்கள் 45 நிமிடங்களில் ரயில் மெடேடு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கருவாட்டுக் கடையில் பணம் திருடு
சென்னை, நவ. 10- ஆவடி காய்கறி அங்காடியில் சலீமா (55) என்பவர் கருவாடு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கருவாடு வாங்க பர்தா அணிந்து கொண்டு 2 பெண்கள் வந்தனர். சலீமாவிடம் வெளிநாட்டுக்கு கருவாடு வாங்கி அனுப்ப வேண்டும் எனக் கூறி, அவரிடம் வஞ்சிரம் கருவாடு கேட்டுள்ளனர். இதையடுத்து சலீமா இருவரையும் கடைக்குள் அழைத்து அலமாரியில் உள்ள கருவாடை பார்க்குமாறு கூறியுள்ளார். அவர்கள் உள்ளே வந்து பார்ப்பது போல் நடித்து, அங்கிருந்த ரூ.40 ஆயிரம் பணப்பையை திருடிக் கொண்டு தப்பி விட்டனர். சிறிது நேரத்தில் சலீமாவிற்கு பணப்பை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சலீமா ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாலியல் தொல்லைக்கு 6 ஆண்டுகள் சிறை
சென்னை, நவ. 10- ஆவடியில் 13 வயது சிறுமிக்கு பாலி யல் தொல்லை கொடுத்த காசிராஜன் என்பவருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆவடியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2022ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த காசிராஜன் (55) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி காசிராஜனை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி அளித்த தீர்ப்பில், காசிராஜனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தார். இதையடுத்து காவல் துறையினர் காசி ராஜனை புழல் சிறையில் அடைத்தனர்.
46 இருளர்களுக்கு இலவச வீடு
கிருஷ்ணகிரி,நவ.10- கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், சீங்கோட்டை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் 132 தலித் பழங்குடி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள், 11 பய னாளிகளுக்கு அரசு மானி யத்தில் வீடு கட்டும் ஆணை களும், 46 இருளர் இன மக்களுக்கு வீடு கட்டு மான பணிகளுக்கான ஆணைகளையும் ஆட்சியர் கே.எம். சராயு வழங்கினார். தனித்துறை ஆட்சியர் பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்ட அலு வலர் ஜெயந்தி, தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் ஆறுமுகம், வேளாண்மை பொறியி யல் துறை உதவி செயற் பொறியாளர் செல்வம், வட்டாட்சியர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருகி வரும் ஆன்லைன் மோசடி
கிருஷ்ணகிரி,நவ.10- கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர் பகுதியை சேர்ந்த 35 வயது ராஜேசேகர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். யூடியூப்பில் பகுதி நேர வேலையில் முதலீடு செய்து பணி புரிந்தால் பல லட்சங்கள் வரை சம்பாதிக்கலாம் என்று இவரது செல்போனுக்கு கடந்த 14 ஆம் தேதி வந்த குறுஞ்செய்தியை நம்பி அதில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கில் 6.39.439 பணத்தை செலுத்தியுள்ளார். அதன் பிறகு இந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. ஓசூர் ராயக்கோட்டை சாலை நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்த ஜெயக்குமார் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 28 ஆம் தேதி அவரது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் இன்ஸ்டாகிராமை தொடர்பு கொண்டு பின்பற்றினால் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம், இதில் பகுதி நேரமாக வேலை பார்த்தாலும் அதிக பணம் கிடைக்கும் என்று பேசியவர் கொடுத்த வங்கி கணக்கிற்கு ரூ. 14.50 லட்சம் பணத்தை ஜெயக்குமார் செலுத்தியுள்ளார். அதன் பிறகு இந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஓசூர் ராயக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் தேவி (26) தனியார் நிறுவன ஊழியருக்கு கடந்த 15 ஆம் தேதி வாட்ஸ் அப்பில் வந்த குறுஞ்செய்தியில் கூகுள் மேப்பில் ரேட்டிங் போடும் வேலையில் பணியாற்ற முதலீடு செய்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டதை நம்பி அதில் இருந்த வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் செலுத்தியுள்ளார். பின்னர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆன்லைன் மோசடியில் ஏமாற்றப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களில் இதுபோன்று 5 சம்பவங்கள் நடந்துள்ளன. மாவட்டத்தில் ஆன்லைன் மற்றும் சீட்டு மூலம் மக்களை ஏமாற்றி வருவது அதிகரித்து வருகிறது. முதலீடு செய்யக் கூறும் குறுஞ்செய்திகளை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.240 உயர்வு
சென்னை, நவ. 10- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளியன்று சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 45,160 -க்கு விற்பனையாகிறது. உக்ரைன் ரஷ்யா போர், இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்த வாரம் திங்கள்கிழமை முதல் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த நிலையில், திங்கள் முதல் தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை வெள்ளியன்று மீண்டும் உயர்ந்துள்ளது.அதன்படி, ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ரூ. 5,645-க்கும், சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 45,160-க்கும் விற்பனையாகிறது.
காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி விரைவில் துவக்கம்: முதலமைச்சர்
புதுச்சேரி,நவ.10- காரைக்காலில் விரைவில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த முதல மைச்சர் ரங்கசாமி,“புதுச்சேரியில் உள்கட்ட மைப்பை மேம்படுத்தும் அனைத்து பணி களும் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை மூலம் நடந்து வருகிறது.மேம்பாலங்கள், தார்சாலைகள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது”என்றார். அனைத்து சமுதாய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் காலத்தோடு வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக செவிலியர் கல்லூரி தொடங்கப் பட்டுள்ளது. காரைக்காலில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் அவர் கூறினார். சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணி களை ஈர்க்கும் வகையிலும் திட்டங்களை கொண்டுவர அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆன்மிகம், கல்வி, மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது எனவும் முதல்வர் கூறி னார். புதுச்சேரி சந்திர பிரியங்காவுக்கு மாற்ற அமைச்சரவையில் புதிய அமைச்சர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரி வித்தார்.