districts

img

ஒன்பது மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலை பணி: பொதுமக்கள் கடும் அவதி

திருப்பூர், ஜூன் 17– திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்திற்குட்பட்ட 19 ஆவது வார்டு பகுதியில் ஒன்பது மாதங்களாக தார்ச்சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் மாநகரில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்ஒருபகுதியாக கொங்கு மெயின் ரோடு, ரங்கநாதபுரம் முதல் மற்றும் இரண்டாவது வீதி, மாகாளியம்மன் கோயில் எதிரில் 40 அடி அகலம் உள்ள தார்ச்சாலையையும் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே இருந்த தார்ச்சாலையை வெட்டி எடுத்துவிட்டு, ஜல்லிக்கற்களை கொட்டி மண் சாலை அமைத்தனர். ஆனால், அதன் பிறகு பணி கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஒன்பது மாதங்களாகியும் அங்கு புதிய தார்ச்சாலை அமைக்கப்படாததால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, வீடுகளின் வாசற்படிகள் இடிக்கப்பட்டு இருப்பதால் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் வீடுகளுக்கு சென்று வருவது, சாலையில் நடந்து செல்வதும் கடினமாக உள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம், விரைந்து நடவடிக்கை எடுத்து, அரைகுறையாக ஒன்பது மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மண், ஜல்லி சாலையில், புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். பொதுமக்கள் சிரமத்தை போக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சார்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி பா.கார்த்தி வலியுறுத்தியுள்ளார்.