கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வளாகத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் இறந்த நிலையில் மூன்று புள்ளி மான்கள் கண்டறியப்பட்டது.
கோவை மருதமலை வனப்பகுதியில் காட்டு யானைகள், புள்ளி மான்கள் அதிகளவு காணப்படும். இதில் வன எல்லையை ஒட்டிய பாரதியார் பல்கலைக்கழகம் அருகே புள்ளி மான்கள் தினமும் உலா வருகிறது. இந்நிலையில் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மூன்று புள்ளி மான்களை நாய்கள் துரத்துவதாகக் கோவை சரக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான வனத்துறையினர் அங்குச் சென்று பார்த்தபோது, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் ஆங்காங்கே மூன்று புள்ளி மான்கள் இறந்த நிலையில் கண்டறியப்பட்டது. மேலும் மான்களுக்குச் சிறு சிறு காயங்கள் இருந்தவுடன் நாய் வந்து சென்ற கால் தடமும் கண்டறியப்பட்டது. இதையடுத்து கால்நடை மருத்துவ குழுவினர் இறந்த 3 மான்களுக்கும் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு அதே வனப்பகுதியில் உள்ள இடத்தில் மான்களின் உடல்களை அடக்கம் செய்தனர்.