districts

img

மோதிபாக் - இளங்கோ

உங்கள் ராமர் கோயிலில் வாழ்கிறார் எங்கள் கடவுள் இந்த மண்ணில் வாழ்கிறார்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அதே மக்களின் சமூக பொருளாதாரத்தை எந்தளவுக்கு சீரழிக்க முடியும் என்பதற்கு இந்த ஆவணப்படம் எடுத்துக்காட்டு.  உத்தரகாண்ட் மலை மக்கள் தங்கள் பகுதியை தனி மாநிலமாக்க வேண்டுமென 1974 முதல் போராடி வந்தனர்.  சமவெளியில் இருப்பவர்கள் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை புரிந்துகொள்ள முடியாது என உறுதியாக நம்பினர்.  அவர்களது விருப்பம் தாங்கள் தனி மாநிலமானால் முன்னேற்றம் வரும் என்பதுதான்.  2000 இல் உத்தரகாண்ட் பிறந்தது.  முன்னேற்றமும் வந்தது.  ஆனால் மக்களுக்கல்ல.  பிரிவினையை தூண்டிவிட்ட அரசியல்வாதிகளுக்கும் ஆளும் அதிகாரிகளுக்கும் வளர்ச்சி வந்தடைந்தது. வித்யாதுத்சர்மா 83 வயதானவர்.  உ.பி. அரசில் வருவாய்த்துறையில் வேலை கிடைத்து பார்த்துக்கொண்டிருந்தார்.  ஆனால் தனது தந்தையார் நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டுமென விரும்பி வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்தார்.  விவசாயத்தைக் காதலுடன் செய்ததால் அதில் பல புதுமைகள் புகுத்தினார்.  2 பெண் குழந்தைகள் 2 ஆண் குழந்தைகளைப் பெற்று வளர்த்தார்.  மனைவியும் ஒரு மகனும் இறந்து விட மற்றவர்களும் பிரிந்து சென்று விட இந்த வயதிலும் தான் மட்டும் விடாப்பிடியாக விவசாயம் செய்து வருகிறார்.  அவருக்குத் துணையாக இருப்பவர் ராம் சிங் என்ற நேபாளி.

வித்யாதுத்சர்மா வாழும் சங்குடா கிராமம் அழகான மலை உச்சியில் அமைந்திருக்கிறது.   சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு அருகாமை மற்றும் தொலைவிலுள்ள நகரங்களுக்கு குடிபெயர்ந்து சென்று விட்டனர்.  3500 க்கு மேற்பட்ட வீடுகள் மூடிக்கிடக்கின்றன.  அவற்றில் பல சிதிலமடைந்து விட்டன.  ஆங்காங்கே ஒரு சில முதியவர்கள்தான் தென்படுகின்றனர்.  ஆனால் உத்தரகாண்டின் டேராடூன், மிசெளரி, நைனிடால் போன்ற பெரு நகரங்கள் ஜொலிக்கின்றன. வித்யாதுத்சர்மா பகிர்கிற அவரது அனுபவங்களும் உத்தரகாண்டின் தற்போதைய நிலையும் ஆவணப்படமாகியுள்ளது.  இன்றைய இளைஞர்கள் உடல் உழைப்பை விட மூளை உழைப்பையே விரும்புகிறார்கள்.  ஒரு காலத்தில் காடுகளை அழித்து மலைவாழ் மக்கள் நிலங்களாக்கினர்.  இப்போது நிலங்கள் அழிந்து அவை காடுகளாக மாறி வருகின்றன.  வித்யாதுத் சர்மா அருமையான கவிஞரும் கூட.  எள்ளலும், அழகும் மிளிர்கிற அவரின் கவிதைகள் ஆங்காங்கு தெறிக்கின்றன.  காகிதங்களில் அவ்வப்போது கவிதைகள் எழுதுகிறார்.  புத்தகம் எளிதில் போட்டு விடலாம்.  அதைவிட முக்கிய ஒரு உருளைக்கிழங்கு விதையை உருவாக்குவது எனச் சிரிக்கிறார்.  வறட்சி, தண்ணீர்ப்பஞ்சம், காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் எதுவும் அவரை ஒன்றும் செய்துவிட முடியவில்லை.

உழைத்திட ஒரு கைதான் ஆனால் உணவருந்திடப் பல கைகள் என்கிறார் கவித்துவமாக.  நியாயத்திற்கான மக்களின் அன்றாடப் போராட்டங்களிலும் கலந்து கொள்கிறார்.  பத்ரிநாத், கேதார் நாத் பயணத்துக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள்.  அப்போது பஸ்கள் கிராமங்களுக்கு வருவதில்லை.  இதனை எதிர்த்து மாவட்ட போக்குவரத்து அதிகாரியை போராட்டக்குழுவினருடன் சந்திக்கிறார்.  ஏழைகளை ஏழையாகவே வைத்திருந்து தேர்தலின் போது மது கொடுத்து ஓட்டு வாங்குகிறார்கள் எனக் கொதிக்கிறார் ஒரு போராட்டக்காரர்.   உங்கள் ராமர் கோயிலில் வாழ்கிறார் எங்கள் கடவுள் இந்த மண்ணில் வாழ்கிறார் எனத் தனது கைவிரல்களால் தன் நிலத்தின் மண்ணைக் கோதியவாறே கவிதை உதிர்க்கிறார் வித்யாதுர்த்சர்மா.   நாட்டிலேயே அதிகளவு 22.75 கிலோ எடைகொண்ட முள்ளங்கியை உற்பத்தி செய்து சாதனை படைக்கும் அவருக்கு அரசின் விருது தருகிறார்கள்.  அவருக்குத் தெரியும் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டுமென்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது என்று.

;