ஈரோடு, டிச.2- பவானிசாகர் அணையில் இருந்து 9500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 கொள்ளளவு கொண்டதாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 104.50 அடியாகவும், நீர் இருப்பு 32.3 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர், பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று 3800 கனஅடியாக இருந்தது. இது வியாழன்று காலை 9519 கன அடியாக அதிகரித்தது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து பவானி ஆற்றில் 7700 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1800 கன அடி நீரும் என மொத்தம் 9500 கனஅடி தண்ணீர் உபரி நீராக திறக் கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத்தொடர்ந்து ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணியில் வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ள னர்.