சென்னை:
போடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேனி மாவட்டம் போடி தொகுதியில் அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி போடி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் வழக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழ மையன்று நீதிபதி பாரதிதாசன் முன்பாக நடைபெற்றது.அப்போது, ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஓ.பி.எஸ். வேட்பு மனுவை தாக்கல் செய்த போது வேட்பு மனுவில் கடன் மதிப்பை குறைத்து காட்டியிருந்ததாகவும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அப்போதே புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் நடத்தப்பட்டதாகவும், எனவே போடி தொகுதியில் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.