மதுரை:
ஆதிச்சநல்லூர், கீழடியை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டும், 2004-ம் ஆண்டு நடந்த அகழாய்வு அறிக்கை வெளியிட வேண்டும், அங்குஉலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி, மீண்டும் ஆதிச்சநல்லூரில் மாநில அரசுஅகழாய்வு செய்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க இடத்தினை தேர்ந்தெடுக்கும் பணியை மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டலகண்காணிப்பாளர் அருண்ராஜ் குழுவினர் செய்து வருகின்றனர்.இதற்கிடையில் அடுத்த ஆண்டு ஆய்வு மற்றும் அகழாய்வு செய்யும் பணியையும் மாநில அரசு செய்வதற்காக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த தகவலை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மத்திய அரசின் வழக்கறிஞர் விக்டோரியா கெளரி பதில் மனுவாக தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மூலமாக தமிழக அரசுக்கு பல்வேறு அகழாய்வு மற்றும்ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளது தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் மாநில தொல்லியல் துறை அகழாய்வு செய்ய மூன்று இடங்களுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. இதில் கொற்கை அருகே உள்ள அகரம், மாறமங்கலம், ஆறுமுகமங்கலம் ஆகிய இடங்களிலும், ஆதிச்சநல்லூரில் கால்வாய் மற்றும் புளியங்குளம் பகுதியிலும் ஆய்வு செய்ய அனுமதி வழங்கி உள்ளது.சிவகளையில் சிவகளை செக்கடி, ஸ்ரீமூலக்கரை, பேட்மாநகரம், பேரூர் திரடு, வெள்ளிதிரடு, பராக்கிராமபாண்டி, பொட்டல் கோட்டை திரடு, ஆவரங்காடு பகுதியில் அகழாய்வு செய்யவும் அனுமதி அளித்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அகழாய்வு செய்ய வேண்டிய தொல்லியல் இடங்களை ஆய்வு செய்யவும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் பகுதியையும், ஈரோடு மாட்டம் பெருந்துறை தாலுகா கொடுமணலிலும், அரியலூர் தாலுகா கங்கை கொண்ட சோழபுரம் மல்லிகை மூடு, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகியஇடங்களிலும் அகழாய்வு செய்ய அனுமதி வழங்கி உள்ளது.மேலும் கொங்கு மண்டலத்தில் கோவில் கணக்கெடுப்பு திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர், சேலம்,திருப்பூர், கரூர், ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வுசெய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. கிழக்குதொடர்ச்சி மலையில் உள்ள கற்கால தளங்களை ஆய்வு செய்ய வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்மாவட்டங்களில் மாநில அரசு அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. நெல்லை, தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள தாமிரபரணி கரையில் ஆய்வு செய்யவும் மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அசாம் பல்கலைக்கழகம் தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகம் மூலமாக இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் உள்ள தீவுகளில் ஆய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ளது. தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் தாலுகா பார்பனைகோட்டையிலும், சென்னை பல்கலைக்கழகம் அகழ்வாராய்ச்சித் துறை மூலமாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாஎம்.வலசையிலும் அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சார்பில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தாலுகா, எலந்தகரையிலும், தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம்மேலப்பாளையம் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ளது.
தேசிய கடல் சார் நிறுவனம் சார்பாக தனுஷ்கோடி,இராமேஸ்வரம், சேது கால்வாய் சூழலின் தன்மை மற்றும் விரிவாக்கம் பற்றிய ஆய்வு, பாரம்பரிய கல்விக்கான ஷர்மா மையம் சார்பில் திருவள்ளுவர் மாவட்டம் அத்திரபாக்கம் தளத்தினை சுற்றி ஆய்வு செய்வது, தாமிரபரணி, வைகை, காவேரி ஆகிய நதிகளிலும் திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், கரூர், திருப்பூர், கோவை, தஞ்சாவூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகியமாவட்டங்களில் தொல்லியல் தரவுகளை சேகரித்தல் ஆகிய பணி நடைபெற அனுமதி கிடைத்துள்ளது.பழங்கால தலங்களான திருவள்ளுவர் மாவட்டம் சென்ராய பாளையம், திருவாரூர் மாவட்டம் குஞ்சிவம் பகுதியில் பாரம்பரிய கல்விக்கான ஷர்மா மையம் சார்பில்பழங்கால தொல்லியல் பொருட்களை பாதுகாத்தல்குறித்த ஆய்வுக்கும் மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.