யுஜிசி கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரோஹித் வெமுலா மற்றும் பயல் தட்வி ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களில் நிலவும் சாதிய பாகுபாடுகளுக்கு முற்று புள்ளி வைக்கக் கோரி கடந்த 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2012ஆம் ஆண்டின் பழைய விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான 2026-ஆம் ஆண்டின் புதிய விதிமுறைகளை யுஜிசி கடந்த 13-ஆம் தேதி வெளியிட்டது.
இந்தப் புதிய விதிமுறைகள், எஸ்.சி/எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுப்பதில் இது கவனம் செலுத்துகிறது. ஆனால், வட இந்திய மாநிலங்களில் இந்த புதிய விதிகளுக்கு எதிராக ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து, யுஜிசி கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த புதிய விதிமுறைகள் 'தெளிவற்றவையாக' இருக்கிறது; தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதனை சட்ட வல்லுநர்களைக் கொண்டு மறுபரிசீலனை செய்ய பரிந்துரைத்துள்ளது. தொடர்ந்து புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அடுத்து விசாரணை வரை, 2012-ஆம் ஆண்டு யுஜிசி விதிமுறைகளே நடைமுறையில் இருக்கும் என்றும் உத்தரவிட்டது.
மேலும், இந்த மனுக்கள் தொடர்பாக மார்ச் 19-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவிற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
