சென்னை,மார்ச்.06- விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு ஒன்றிய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி விகடன் ப்ளஸ் இதழில் மோடி - ட்ரம்ப் குறித்த கார்ட்டூன் அட்டைப்படமாக வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தான் பிப்ரவரி 15ஆம் தேதி தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கும் அந்த கார்ட்டூன் ஆட்சேபனைக்குரியதாக இருப்பதாகப் புகார் கொடுத்தார்.
இந்நிலை பிப்ரவரி 15 மாலையே விகடன் இணையதளம் ஒன்றிய அரசால் முடக்கப்பட்டது. அதற்குப் பிறகு அடுத்ததாகச் சட்ட ரீதியான போராட்டத்துக்கு விகடன் தாயாராக இருப்பதாகத் தனது அறிக்கை வெளியிட்டது.
இன்று நடைபெற்ற விகடன் இணையதள முடக்கம் தொடர்பான விசாரணையில், விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு, முடக்கம் தொடர்பான ஒன்றிய அரசின் உத்தரவை தடை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.