court

img

சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

என்ஐஏ, யுஏபிஏ போன்ற சட்டங்களுக்கு கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்த சம்பவத்தில் நக்ஸல் ஆதரவாளர் என கைலாஷ் ராம்சந்தானி என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணை முடிவு பெறாத நிலையில் அவர் இன்னும் சிறையில் உள்ளார். 
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் சூர்ய காந்த் , ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் இது போன்ற வழக்குகளில் விசாரணையை உரிய காலத்தில் நிறைவு செய்ய திறன் வாய்ந்த வழிமுறை இல்லாதபோது, எவ்வளவு காலத்துக்குக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் காலவரையின்றி சிறைக்காவலில் வைப்பது? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
மேலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 
சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்காவிட்டால், அந்தச் சட்டங்களின் கீழ் கைதானோருக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.