திருப்பரங்குன்றம் வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவை தடை செய்ய முடியாது என்றும், அதுகுறித்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகேயுள்ள எல்லைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து முன்னணியினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியிருந்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்ற நடைமுறை இல்லாததால் புதிய வழக்கத்தை செயல்படுத்த முடியாது எனக் கூறி கோயில் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. அதேபோல், தமிழ்நாடு அரசும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தது.
இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் கலவரத்தில் ஈடுபட்டு பேரிகார்டுகளை சேதப்படுத்தி, காவலர்களை தாக்கிய விவகாரத்தில், 13 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், சிக்கந்தர் தர்கா அருகே தீபம் ஏற்ற அனுமதி தொடர்பான வழக்கு வரும் டிசம்பர் 06-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
