துணை ஜனாதிபதி தேர்தலும் திடீர் தமிழ்நாட்டு பாசமும்
மதுரை சொக்கன்
டியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக சி.பி.ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணியின் சார்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டி யிடுகின்றனர். சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஆனால் வேட்பாளர் பெயரை அறிவிப்ப தற்கு முன்பு எந்தவொரு எதிர்க்கட்சிகளை யும் பாஜக கலந்து ஆலோசிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிலும் கூட இவர்கள் ஆலோசிக்க வில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற் காகத்தான் சி.பி.ராதாகிருஷ்ணன் கள மிறக்கப்பட்டுள்ளார்.
எதற்காக இவரை நிறுத்தினீர்கள் என்று கேட்டால் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ராதாகிருஷ்ணன் என்பது மிகவும் நல்ல பெயர் என்று வினோதமான காரணத்தை கூறுகிறார். ஏற்கெனவே துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் என்ற பெயர் சரியில்லாததால் தான் அவரை மாற்றி விட்டார்கள் போலிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேட்டிருப்பது போல திடீரென ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் பெரிய நாடாளுமன்ற கட்டிடத்திலிருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டு போனவர் என்னவானார் என்று இதுவரை நாட்டுக்கு தெரியவில்லை. ராஜினாமா செய்த தன்கரை அனுப்பி வைக்கப் போனது எத்தனை ஒன்றிய அமைச்சர்கள், எங்கே அனுப்பி வைத்தீர்கள்? என்று தெரியவில்லை. இதனிடையே அதிகாரமிக்க பதவியான துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பு ஒரு தமிழருக்கு கிடைத்திருக்கிறது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி களும் ஒருமுகமாக சி.பி.ராதாகிருஷ்ண னுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி துவங்கி, நயினார் நாகேந்திரன் வரை உருட்டத் துவங்கியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது பெரும்பாலும் அந்தக் கட்டிடத்தின் பக்கம் எட்டிப் பார்க்காத அன்புமணி, தற்போது அந்த பத வியில் இல்லாத போதும் கூட சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் இளம் வயதிலி ருந்தே ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக பணி யாற்றியவர். ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகும் அந்த வேலையைத்தான் செய்து கொண்டிருந்தார். ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பதவிகளை வகித்த போது தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பாஜக மாநில தலைவரைப் போலவே கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார். ஆளுநர் பதவிக்குரிய குறைந்தபட்ச பண்புகளைக் கூட ஆர்.என்.ரவியைப் போல இவரும் பின்பற்றியதில்லை. இவருடைய பழைய வரலாறும் சொல்லத்தக்கதாக இல்லை. கோவையில் செல்வராஜ் என்ற காவலர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் பெரும் வன்முறையில் ஈடுபட்டது. கிறிஸ்தவரான செல்வராஜை இந்து என்று கூறி கலவரத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஒரு முறை பேசும் போது சி.பி. ராதாகிருஷ்ணன், செல்வராஜ் கொலையை தொடர்ந்து காவல் துறையினர்தான் வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் ஒரு காவல்துறையினரைக் கூட நாங்கள் காட்டிக்கொடுக்கவில்லை என்று கூறியுள் ளார். எந்தவொரு பிரச்சனையிலும் இவர் ஒரு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜககாரராக கருத்து தெரிவித்திருக்கிறாரே தவிர, தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பிரச்சனை வந்த போது இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக பேசியதே இல்லை.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதமாவது குறித்து என்றைக்கேனும் அவர் ஒன்றிய அரசை கேட்டதுண்டா? கீழடி அகழாய்வை வெளியிட மறுக்கும் மோடி அரசுக்கு எதிராக அவர் குரல் கொடுத்ததுண்டா? அரிட்டாப்பட்டி மலைப் பகுதியை வேதாந்தா நிறுவனத்திற்கு கைமாற்றி விட ஒன்றிய அரசு துணிந்த போது இவர் துடித்தெழுந்தது உண்டா? தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தரவேண்டிய 2ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு தர மறுத்த போது இவர் ஒரு போஸ்ட் கார்டாவது போட்டதுண்டா? அவ்வளவு ஏன், இவர் சார்ந்துள்ள கோவை பகுதி மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் முற்றாக மதிப்பிழந்தது. ஜிஎஸ்டி வரியால் பின்னலாடை தொழிலின் முதுகு முறிக்கப் பட்டது. மோடி அரசின் கொள்கையால் நூல் விலை உயர்ந்து ஜவுளித் தொழில் ஜல்லி ஜல்லியாக சிதைக்கப்பட்டது. அப்போ தெல்லாம் இவர் ஒரு வார்த்தை பேசிய தில்லை. ஒரு ஆர்எஸ்எஸ்-காரராக அமுக்க மாக இருந்தாரே அன்றி தமிழ்நாட்டு மக்க ளுக்காக இவர் கனவில் கூட பேசியதில்லை. தமிழருக்கு வாக்களியுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி உருட்டுகிறாரே, தமிழ் மொழிக்கு கிள்ளிக் கூட தராமல், சமஸ்கிருத மொழிக்கு அள்ளிக்கொடுத்த போது சி.பி.ராதாகிருஷ்ணன் ஏன் இந்த அநீதி என்று வாதாடியது உண்டா?
அவர் ஆளுநராக இருந்த போது மராட்டிய மாநிலத்திலும் இந்தித் திணிப்புக்கு எதிராக போராட்டம் வெடித்தது. அப்போது அவர் மராட்டிய மக்களின் உணர்வுக்கு மரியாதை கொடுத்ததில்லை. மாறாக, மொழிப் பகைமை கூடாது என்று தான் உபதேசம் செய்தார். இந்தி திணிப்புக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்திய தமிழ்நாட்டிலிருந்து சென்ற அவர், மராட்டிய மக்களின் நியாயமான குரலுக்கு செவிகொடுத்தது உண்டா? சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதியாக்குவது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு உதவும் என்றும், இந்தியா கூட்டணிக்கு நெருக்கடி என்றும் சிலர் கூறுகின்றனர். இவரை நிறுத்துவதால் பாஜகவுக்கோ, அதிமுகவுக்கோ ஒரு ஓட்டு கூட கூடுதலாக கிடைக்கப் போவதில்லை. தமிழ் குறித்தும், தமிழ்நாடு குறித்தும் இவர்கள் போடுவது பகல்வேஷம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். உண்மையில் துணை ஜனாதிபதி தேர்தலும் கூட ஒரு சித்தாந்தப் போர் தான். ஒரு ஆர்எஸ்எஸ் காரர் அந்தப் பதவிக்கு வருவது அரசியல் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய இந்துத்துவா பரிவாரம் செய்யும் முயற்சிகளுக்கு துணையாகவே இருக்கும். நாடாளுமன்ற மாநிலங்களவையை நடத்தும் பொறுப்பும் துணை ஜனாதிபதிக்கு உண்டு. ஒன்றிய ஆட்சியாளர்கள் சொல்வதற்கேற்ப சி.பி.ராதாகிருஷ்ணன் அவையை நடத்துவாரேயன்றி நாடாளுமன்ற விதிகளின்படி நடத்தமாட்டார் என்பதுதான் எதார்த்தமான உண்மை. இப்போதுள்ள சூழலில் ஒரு ஆர்எஸ்எஸ்-காரர் துணை ஜனாதிபதியாக வராமல் இருப்பதே தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் நல்லது. அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அதை மதிக்கத் தெரிந்த ஒருவர் துணை ஜனாதிபதியாக வருவதே பொருத்தம்.