articles

தேசிய சொத்துக்களை சூறையாடும் ‘என்எம்பி 2.0’

தேசிய சொத்துக்களை சூறையாடும் ‘என்எம்பி 2.0’ 

புதுதில்லி, பிப். 27- ஒன்றிய பாரதிய ஜனதா அரசு அறி வித்துள்ள இரண்டாவது கட்ட தேசிய பண மாக்கல் திட்டத்தை (NMP 2.0),  பொதுச்சொத்துக்களைக் கொள்ளையடிப்ப தற்கான ஒரு “கொடூரமான வரைவுத் திட்டம்” என இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கடுமையாகச் சாடியுள்ளது. நாட்டின் பொதுத் துறை மற்றும் அரசுத் துறைகளைத் திட்டமிட்டுச் சிதைப்பதன் மூலம், தேசிய சொத்துக்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் இந்த நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சிஐடியு வலியுறுத்தியுள்ளது.  மிரளவைக்கும்  சொத்து விற்பனை இலக்கு  ஒன்றிய நிதி அமைச்சர் பிப்ரவரி 23 அன்று வெளியிட்ட இந்த இரண்டாம் கட்டத் திட்டத்தில், வரும் 2026-2030 நிதியாண்டு களுக்குள் ரூ. 16.72 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முதல் கட்ட திட்டத்தை (NMP 1.0) விட 2.6 மடங்கு பெரியதாகும். நிதி அமைச்சர் தனது உரையில் முதற்கட்ட  திட்டம் 89% வெற்றியை எட்டியதாகக் கொண்டாடியதை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள சிஐடியு பொதுச்செயலாளர் எளமரம் கரீம், “அரசாங்கம் எதை வெற்றி என்று சொல்கிறதோ, அதை உழைக்கும் வர்க்கம் பொதுச் சொத்துக்களின் பட்டப்பகல் கொள்ளையாகவே பார்க்கிறது” என்று விமர்சித்துள்ளார். சுரங்கம், நெடுஞ்சாலைகள், நிலக்கரி மற்றும் துறைமுகங்கள் மிகக் குறைந்த விலைக்கு கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கப் படும் ‘அதி முக்கியத்துவம் வாய்ந்த’ துறைகள் பொதுமக்களின் வரிப்பணத்தில் பல பத்தாண்டுகளாக கட்டமைக்கப்பட்ட உட்கட்டமைப்புகளை, எந்தவித இடர்பாடும் இன்றித் தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்காக அரசாங்கம் பரிசாக வழங்கு கிறது. குறிப்பாக 12 அதி முக்கியத்துவம் வாய்ந்த (Strategic) மற்றும் அத்தியாவசிய சேவைத் துறைகளிலிருந்து தனியார் நிறுவனங்கள் கட்டணம் மற்றும் வரிகளை வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் முக்கிய துறைகள்: நெடுஞ்சாலைகள் மற்றும் போக்கு வரத்து: சாலைகள் அனைத்தும் தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதால், மக்களின் நடமாடும் உரிமை பறிக்கப்பட்டு, ஒவ்வொரு சாலையும் ஒரு சுங்கக் கட்டண வசூல் மையமாக மாறும். மின்சாரம் மற்றும் எரிசக்தி: பெரும் மின்சாரச் சொத்துக்கள் தனியார் வசம் செல்வதால், மின் கட்டணம் விண்ணைத் தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரித்  துறையை ஏலம் விடுவது நாட்டின் இறை யாண்மை மற்றும் எரிசக்திப் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட சவாலாகும். ரயில்வே மற்றும் துறைமுகங்கள்: நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடிகளாக விளங்கும் இவை, தனியார் எளிதாகப் பணம் சம்பாதிக்கும் இடங்களாக மாற்றப்படுகின்றன. இதர துறைகள்: பெட்ரோலியம், சிவில் விமானப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் நகர்ப்புற நிலங்கள் என அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் பசிக்காகப் பலியிடப்படு கின்றன. மக்களுக்கு இரட்டைச் சுமை இந்தத் திட்டம் ‘விக்சித் பாரத்’ (Viksit Bharat) என்ற போர்வையில் கார்ப்பரேட் கட்டுப்பாட்டிலான பொருளாதாரத்தை உரு வாக்குகிறது என்று சிஐடியு எச்சரித்துள்ளது. “பொதுமக்கள் முதலில் தங்கள் வரிப்பணத்தின் மூலம் சொத்துக்களை உருவாக்குகிறார்கள்; பின்னர் அதே சொத்துக்களைப் பயன்படுத்த தனியார் ஏகபோக நிறுவனங்களுக்கு மீண்டும் கட்டணம் செலுத்துகிறார்கள். இது உழைக்கும் மக்களை நசுக்கும் ஒரு இரட்டைச் சுமை,” என்று அறிக்கை கூறுகிறது. பிரம்மாண்ட எதிர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு பொது-தனியார் பங்களிப்பு (PPP) மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் (InvITs) போன்ற பெயர்களில் பல பத்தாண்டு களாக தேசிய வருவாயைத் தனியார் வசம் நிரந்தரமாக மாற்றும் இந்தச் சூழ்ச்சியை முறி யடிக்க வேண்டும் என சிஐடியு கோரியுள்ளது. “நாட்டை விற்பதை நிறுத்து! பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்போம்! என்எம்பி 2.0-ஐக் கைவிடு!” என்ற முழக்கங்களுடன், ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கமும், பொதுமக்களும் ஒன்றிணைந்து இந்தத் திட்டத்திற்கு எதிராகப் பிரம்மாண்டமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று சிஐடியு பொதுச்செயலாளர் எளமரம் கரீம் அழைப்பு விடுத்துள்ளார்.