இந்தியா... உண்மை நிலையின் ஒரு பகுதி
ஆகஸ்ட் 15 அன்றும் ஜனவரி 26 அன்றும் தில்லியிலும், மாநில தலை நகரங்களி லும், மாவட்டங்களின் முக்கிய நகர்களிலும் தேசிய கொடியேற்றுவிழா, ராணுவ அணி வகுப்பு மற்றும் விமான - ஹெலிகாப்டர்கள் சாதனை நிகழ்த்தப்படும். பிரதமர், ஜனாதிபதி, மாநில முதல்வர்கள், கவர்னர்கள் வீர உரையாற்றுவார்கள். கலை நிகழ்ச்சிகள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அந்த இரு நாட்கள் 1947, 1950 ஆண்டிலிருந்து தொடர்ந்து நமது நாட்டில் நடந்தேறி வருகிறது. அனேகமாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் இந்நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். இந்தநிகழ்ச்சி களை பார்க்கிறபோது இந்தியாவின் முன்னேற்றம் நம்கண்களில் ஜொலிக்கும். சிலதுறைகளில் முன் னேற்றம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. பல துறைகளில் முன்னேற முடியவில்லை என்பதையும் மறுக்க இயலாது.
அணிவகுக்கும் அந்நியப் பொருட்கள்
நான் பாஸ்போர்ட் அளவு போட்டோ எடுக்க நண்ப னின் ஸ்டுடியோவிற்கு சென்றேன். கேமராவில் போட்டோ எடுத்தார். உடன் அதை கணினியில் ஏற்றி பிரிண்டர் மூலம் எட்டு போட்டோ போட்டு கொடுத்தார் ஐந்து நிமிடத்திற்குள். மிகவும் ஆச்சரியமாக இருக்கி றது என்று அக்கருவிகளை பற்றி விசாரித்தேன். பிரிண்டர், கணினி தென்கொரிய தயாரிப்பு, கேமரா ஜப்பான் என்றார். நான், ஏன் இந்தியப் பொருட்க ளை வாங்கலாமே என்றேன். இந்தியா இதுபோன்று தயாரித்தால் வாங்கிக் கொள்வேன் என்றார் நெத்தி யடியாக. அவர் மேலும் எனக்கு வகுப்பெடுத்தது வியப்பளித்தது. “சார் இப்ப நம்ம பிரதமர் மோடி, அடிக்கடி வெளி நாட்டுக்கு பறக்கும் போயிங் 777 தனி விமானம் அமெரிக்கா தயாரிப்பு. அவர் அணியும் கண்ணாடி, கூலிங்கிளாஸ், கைக்கடிகாரம், கார், செருப்பு , உடை, உணவு, குடிநீர் உள்பட எல்லாமே அந்நிய நாட்டு சரக்குதான் சார். அவர் மட்டும் தான் இந்தியர். எப்போது அந்நியனாக மாறுவார் என்று யாருக்கும் தெரியாது என்றார்” தமாஷாக! மாலையில் நான் இறகுபந்து (Badminton) விளையாடுவேன். அங்கும் எனக்கு ஓர் அதிர்ச்சி! இறகுப்பந்துகள் ஜப்பான், சீனாவிலிருந்து இறக்கு மதியாவது இத்தனை நாள் விளையாடிய எனக்கு தெரியாது! அடித்து ஆடும் பேட் (Rocket) உள்பட ஜப்பான் தயாரிப்பே! கோச் சொன்னார். சார் ஷீ (Shoe) கூட ஜப்பான் தயாரிப்பே என்றார். சாதாரண இறகுபந்து கூடவா நாம் தயாரிக்க முடியவில்லை என வியந்து தொடர்ந்து இந்தியாவை தேட ஆரம்பித்தேன்.
கண்ணீர்ப் புகைக்குண்டு, கரன்சி காகிதம் கூட
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தியை படித்த ஞாபகம். இந்தியர்கள் அழ வேண்டுமானால் கூட வெளிநாட்டினர் தயவு தேவை என்ற ஒரு நக்கல் செய்தி. என்னவென்றால் போராட்டக் களத்தில் உள்ள இந்தியர்களை கலைக்க காவல்துறை உபயோ கிக்கும் கண்ணீர்ப் புகைக்குண்டு தான் அது! அதுவும் இறக்குமதியாம்! தற்போது பாமக தலைவர் மரு. ராமதாஸ் அவர்க ளின் வீட்டில் கண்டுபிடித்த ஒட்டுக் கேட்கும் கருவிகூட லண்டன் தயாரிப்பாம், அவரே சொன்னது! நம் கரன்சி நோட்டுக்கான காகிதம் ஜெர்மன், ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதியாம், இங்க் உள்பட! அனேகமாக 2030இல் தான் இப்படிப்பட்ட இறக்கு மதி நிறுத்தப்படுமாம் என நம்பிக்கை உள்ள செய்தி கூறுகிறது! நர்மதா அணை அருகே உயர்ந்து நிற்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை எல் அண்ட் டி நிறு வனம் நிறுவினாலும் அதன் வெண்கல பாகங்கள் சீனாவில் உருவாக்கப்பட்டது என்பது தான் உண்மை! தெலுங்கானாவில் அமைக்கப்பட்டிருக்கும் ராமானு ஜர் சிலையும் சீன தயாரிப்பே என்கின்ற போது வியப்பாகவே உள்ளது! மும்பை, தெலுங்கானாவில் இருக்கும் அம்பேத்கர் சிலைகளும் வெளிநாட்டினர் உதவியோடு உருவாக்கப்பட்டவைகளே! இதுமட்டுமா? நம்முப்படைகளின் முக்கிய இராணுவ தளவாடங்கள் பெரும்பாலும் அந்நிய கம்பெனிகளையே சாரும்! ரபேல் விமானம் பிரான்சிலிருந்தும் அணு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் ஆயுதங்கள் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் இருந்தும் வாங்கப்படுகின்றன! இயக்கு வது மட்டுமே இந்தியர்கள்! இயந்திரங்கள் இறக்குமதி யானவை ஆகும்! பயணிகள், விமானங்களும் போர்விமானங்களும், புல்லட் ரயில்களும், அமெ ரிக்கா, சீனா, பிரிட்டன், ஜெர்மன், ஜப்பான், இத்தாலி, ரஷ்யா போன்ற நாடுகளின் தயாரிப்பிலேயே உள்ளது. உலக நாடுகள் இந்நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து கொள்கின்றன. இந்தியா சில வகை போர் விமானங்கள் மட்டுமே இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறது. சிலவகை செயற்கைக் கோள்களையும் சொந்த தயாரிப்பில் பறக்கவிட்டு அசத்தியுள்ளது! மேலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன்கள், மடிக்கணினி, கார்கள், பேனா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருட்கள் வெளிநாட்டு உபயம் தான்! இருந்த போதும் இந்தியா வளர்ச்சி யை நோக்கி பயணிக்கிறது. அந்த வளர்ச்சியின் பலன்களை கார்ப்பரேட்டுகள் அன்றாடம் அபகரித்துக் கொள்கிறார்கள். இந்திய அரசாங்கம் கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்துள்ள பொதுத்துறைகளான துறைமுகம், விமான நிலையங்கள், வங்கிகள், சாலை மார்க்கங்கள் உள்ளிட்ட பல துறைகளை கார்ப்பரேட்டுகள், சத்தம் இல்லாமல் பேசியே மோடி அரசிடம் இருந்து பிரதிபலனாக பெற்றுக் கொண்டனர்.
எது வல்லரசு?
இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்று அனைவரும் விரும்பும் ஒரு சொல்லாடல். வல்லரசு என்றால் என்ன? ஒரு விவாதத்தில் கேட்டேன், பிரசவத்தின் போது ஏற்படும் தாய்-சேய் மரணங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பட்டினிச் சாவுகள் இருக்கவே கூடாது. தனிநபர் வருமானம் உயர்வை நோக்கியே இருக்க வேண்டும். மக்கள் அச்சம் இல்லாமல் வாழும் சூழ்நிலை என்றும் இருப்பது அவசியம். இதுவே வல்லரசுக்கான குறியீடு. இங்ஙனம் நமது இந்தியா பயணிக்கிறதா? நமது நாட்டின் குறியீட்டு எண்கள் கீழ்நோக்கியே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. உதாரணமாக பட்டினிக் குறியீடு, 127 நாடுகள் கணக்கெடுப்பில் 105ஆவது இடத்திற்கு தரம் தாழ்ந்துள்ளது! உலக நாடுகளின் கடவுசீட்டு (Passport) தரவரிசையில் கூட 2024-இல் 80ஆம் இடத்திலிருந்து தற்போது 148 இல் சறுக்கி விழுந்துள்ளது. மே 28ஆம்தேதி “உலக பட்டினி தினம்” என்பதை அகராதியில் இருந்தே அகற்ற வேண்டும். அதுவே உண்மையான வல்ல ரசாகும்!
பயனில்லா இரட்டை எஞ்சின் அரசு
1949 இல் விடுதலை பெற்ற சீனாவில் விவசாயி கள் தற்கொலை என்ற செய்தி கேள்விப்பட்டதே இல்லை. மாறாக இந்தியாவில் தற்கொலைகள் நடக்காத நாளில்லை. இந்த ஆண்டு துவக்கத்தில் மூன்று மாதங்களில் மட்டுமே மராட்டிய மாநி லத்தில் 767 விவசாயிகளின் தற்கொலை என்ற செய்தி தேசத்தின் அவமானமே ஆகும். ஆளும் அரசியல் வாதிகள் மட்டும் ஐந்து வளைய பாதுகாப்பிற்குள், வெளிநாட்டு ஆயுதங்கள் தரித்த வீரர்கள் மத்தியில் வலம் வந்து என்ன பயன்? மக்கள் பாதுகாப்பாக இருந்தால் தானே மன்னனுக்கும் பெருமை. இரட்டை எஞ்சின் இருந்தும் பாஜக அரசினால் பயனில்லை. இந்திய மக்களை ஓரணியில் திரட்டுவோம்! அரசின், வகை வகையான தவறான மக்கள் விரோதக் கொள்கைகளை நொடி விடாது பிரச்சாரம் செய்வோம்! மதவெறிகளை அகற்றி மாண்புகள் புகுத்திடுவோம்! உண்மையான ஜனநாயக குடியர சுத் தன்மை கொண்ட நல்லரசை உருவாக்க உறுதி பூணுவோம்.