சுதந்திர தின உரையில், பிரதமர் ‘பிரச்சாரக்’ ஆனார்
“ஊடுருபுபவர்கள்” என்ற கோஷத்தை எழுப்பி, ஆர்எஸ்எஸ்-ஐப் புகழ்ந்து பேசியதன் மூலம், அரசியலமைப்பு விழுமியங்களைப் பாது காப்பதில் தான் வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதமர் மீறியுள்ளார்.
தியாகிகளுக்கு அவமானம்
சுதந்திர தின உரை என்பது, நமது சுதந்திரத்தை கொண்டாடுவதற்கும், சுதந்திர இந்தியா எப்போதும் கடன்பட்டிருக்கும் எண்ணற்ற ஆண்களும் பெண்க ளுமான நமது தியாகிகளை நினைவு கூர்வதற்கும், நமது சாதனைகளில் பெருமிதம் கொள்வதற்கும், நமது சவால்களை அடையாளம் காண்பதற்குமான ஒரு சந்தர்ப்பமாகும். சுயபுராணம் பாடுவதற்கும், கட்சி அரசியலுக்கும், பிளவுபடுத்தும் சக்திகளை ஊக்குவிப்பதற்குமான தளமல்ல இது. ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசின் பிரதமராக இருப்பதற்கும், ஒரு மதவெறி அமைப்பின் பிரச்சார கராக இருப்பதற்கும் இடையிலான எல்லையை தனது 79வது சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி மீறினார். இதன் மூலம், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை இழிவுபடுத்தி, நமது தியாகி களை அவர் அவமதித்துள்ளார்.
விடுபட்ட ‘பேச்சு’
நாட்டின் வளர்ச்சி பற்றிய தனது உரையில் பிரதமர் கூறிய பல கூற்றுக்கள் பற்றி ஒருவர் கேள்வி எழுப்பலாம். நிலமற்றவர்களாக உள்ள கிராமப்புற ஏழைகள் அதிகரிப்பு, தேக்கநிலையை அடைந்துள்ள தொழிலாளர்களின் கூலி, மக்களுக்கு உரிமைகளை அளிக்கும் 100 நாள் வேலைத்திட்டம் அல்லது வன உரிமைகள் சட்டம் போன்ற சட்டங் களை நீர்த்துப் போகச் செய்தல், வேலையின்மை, நாடாளுமன்ற நிலைக்குழுவின் சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள படியான பதவி உயர்வு மற்றும் காலிப் பணியிடங்களில் எஸ்டி/எஸ்சி பிரிவினருக்கானவற்றில் காணப்படும் பெரும் தேக்கம் போன்றவை பற்றியதாக அக்கேள்விகள் இருக்கலாம். ஆனால் இந்த விவா தங்களும் வாதங்களும் புதியவை அல்ல, அவை தொடரும். இத்தகைய கூற்றுக்களை - அவை எவ்வளவு குறைபாடுடையதாக இருந்தாலும் சரி - ஒரு பிரதமர் மீண்டும் மீண்டும் கூறுவது ஒன்றும் அசாதாரணமானது அல்ல. இத்தகைய கூற்றுக்கள் எவ்வாறு கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டுமோ அவ்வாறு உள்ளாக்கப்படும் என்பதில் சந்தேக மில்லை. ஒரு உரையில் குறிப்பிடத்தக்கது என்ன வென்றால், விடுபட்டவைகளும் கூட ஆகும். “ஊழல் எனும் கரையான்” பற்றி கடந்த ஆண்டு பிரதமர் அதிகம் பேசியிருந்தார். இந்த ஆண்டு, “ஊழல்” என்ற வார்த்தை அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போர் முடிந்து விட்டதா? ரூ.2000 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் சம்மன் மற்றும் புகாரை அதானி அதிகாரிகளுக்கு வழங்குவதில் இந்தியாவின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திடம் உதவி கேட்டதாகவும், ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகும் இந்தியாவில் உள்ள அதிகாரிகள் ஆவணங்களை வழங்கவில்லை என்றும் சில நாட்களுக்கு முன்புதான் அமெரிக்க நிர்வாகம், நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் கூறியது. கருப்புப் பணச் சட்டம் (2015) இன் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி வரி மற்றும் அபராதத்திற்கான கோரிக்கைகள் எழுப்பப்பட்ட தாகவும், ஆனால் இதுவரை மீட்கப்பட்ட தொகை ரூ.338 கோடி மட்டுமே என்றும் நாடாளுமன்றத்தில் மற்றொரு தெளிவான பதிலில் அரசு கூறியது. சுவிஸ் வங்கிகளில் இந்தியப் பெருமுதலாளிகள் வைத்துள்ள நிதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளபோது இது நிகழ்ந்துள்ளது.
‘வாக்களிக்கும் உரிமையும்’ இடம்பெறவில்லை
அவசரநிலையை அமல்படுத்தியவர்களை “பாவிகள்” என்று அழைத்து அவசரநிலை பற்றி குறிப்பிட்டு பிரதமர் பேசியுள்ளார். எந்த வார்த்தை களைத் தேர்ந்தெடுத்து பேசுவது என்பது அவரது தனிச்சிறப்புரிமையாகும். ஆனால், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்களிக்கும் உரிமையே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நேரத்தில், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக அவர் உரிமை கோருவது முரண்பாடாக உள்ளது. வாக்க ளிக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை பிரதமர் வெளிப்படுத்துவார் என்று நாடு எதிர்பார்த்தது. வியாழக்கிழமை அளித்த தனது இடைக்காலத் தீர்ப்பில், வயதுவந்தோர் அனை வருக்கும் வாக்குரிமைக்கான உரிமை பாதுகாக்கப் பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தது. சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த (எஸ்ஐஆர்) நடைமுறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல பிரச்சினைகளை உச்சநீதிமன்ற உத்தரவு நிலைநிறுத்தியது. அரசியலமைப்பால் கட்டளையிடப்பட்ட நிறுவனங்களின் சுயாட்சி கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பிரதமரின் உரையில் இவை குறித்த கவலைகள் இல்லை. “ஊழல்” மற்றும் “வாக்களிக்கும் உரிமை” போன்ற விடுபட்ட வார்த்தைகள் அவற்றின் சொந்தக் கதையைச் சொல்கின்றன.
வெட்கக் கேடான உரை
ஆனால் அவரது உரையின் இரண்டு குறிப்பிட்ட அம்சங்கள் அனைத்து இந்தியர்களுக்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துபவையாகும். முதல் அம்சம், இந்தியாவின் மக்கள்தொகை யை மாற்ற “ஊடுருவுபவர்கள்” செய்யும் “சதி” பற்றிய அவரது அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையாகும். “முஸ்லீம் ஊடுருவுபவர்கள்” பழங்குடி நிலங் களைக் கையகப்படுத்தி, பழங்குடி பெண்களைச் சுரண்டி யதாக ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் களில் பிரதானமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டே மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டது. பிரதமரின் கட்சி இத்தேர் தல்களில் தீர்க்கமாகத் தோற்கடிக்கப்பட்டபோதும் எந்தப் பாடமும் அவர்களால் கற்றுக் கொள்ளப்பட வில்லை. அப்படி ஒரு சதி நடந்திருந்தால், அதில் இத்தனை ஆண்டுகளாக உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் என்ன செய்தது? நாடாளுமன்றத்திற்கு ஒரு முறை கூட இத்தகையதொரு “சதி”பற்றி அதற்கு தெரிவிக்கப்பட வில்லை என்பது எப்படி? இதுபோன்ற “ஊடுருவு பவர்களை” அனுப்பும்நாட்டின் அரசாங்கம் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம். “ஊடுருவுபவர்கள்” இந்தியாவை ஆக்கிர மித்த பத்தாண்டுகளின் போது அவர்களை ‘அனுப்பிய’ நாட்டின் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கிய ஒரு வருக்கு இந்தியா புகலிடம் அளிப்பது முரண்பட்ட தாக இல்லையா? ஒன்றிய அரசின் உதவியுடன் மிகப்பெரிய அளவி லான நிலம் கார்ப்பரேட் நிறுவனங்களால் கையகப் படுத்தப்பட்டுள்ளது என்பதை பழங்குடியினர் பகுதி களில் நிலம் கையகப்படுத்தியது குறித்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரி யில் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலின்படி, 2020 மற்றும் 2022க்கு இடையிலான காலத்தில் பழங்குடியினப் பெண்களுக்கு எதிராக மொத்தம் 6,779 பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. “ஊடுருவுபவர்கள்” செய்த குற்றங்கள் குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை. சுதந்திர தின மேடையைப் பயன்படுத்தி உண்மைகள் இல்லா மல் வகுப்புவாத இயல்புடைய இத்தகைய தீவிரமான கூற்றுக்களை பிரதமர் வெளியிடுவது வெட்கக் கேடானது. இந்தியா முழுவதும் வெளிநாட்டினரைக் கண்டறிதல் என்ற பெயரில், ஏழை - புலம்பெயர்ந்த - வங்காள மொழி பேசும் தொழிலாளர்கள், குறிப்பாக முஸ்லிம் புலம்பெயர் தொழிலாளர்கள், மனிதாபி மானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள். சட்ட விரோதமாக குடியேறியவர்களைக் கையாள்வ தற்கான சர்வதேச நெறிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளின்படி அவர்கள் அடையாளம் காணப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். ஆனால் இங்கு இந்தியாவிலோ, இது முற்றிலும் வகுப்புவாதக் கருத்தினால் இயக்கப்படு கிறது. இந்த கொடிய எண்ணம் தான் பிரதமரின் உரையில் பிரதிபலித்தது.
ஆர்எஸ்எஸ்சுக்கு அங்கீகார முத்திரை
இரண்டாவதாக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கை துரோகத்தை ஏற்படுத்தும் ஒரு அறிக்கையாக, பிரதமர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ்ஸைப் புகழ்ந்து பேசி னார். இந்தியாவின் முதல் உள்துறை அமைச்ச ரும் பாஜகவால் இரும்பு மனிதர் என்று போற்றப் படுபவருமான வல்லபாய் படேல், இந்த அமைப்பை பற்றி உறுதிபட தெளிவாக விவரித்தார் . ஆர்.எஸ். எஸ்ஸை தடை செய்யும் போது, “நமது நாட்டில் வெறுப்பை உருவாக்கி வன்முறையில் ஈடுபடு வதோடு, நாட்டின் சுதந்திரத்திற்கு ஆபத்தை விளை வித்து, அதன் நியாயமான பெயரை இருட்டடிப்பு செய்யும் சக்திகளை வேரோடு கிள்ளி எறிந்திட” என அவர் குறிப்பிட்டார். “விரும்பத்தகாத மற்றும் ஆபத்தானதுமான செயல்கள் ஆஎஸ்எஸ் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீ வைத்து கொளுத்துதல், கொள்ளை உள்ளிட்ட வன்முறைச் செயல்களில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் அமைப்பின் தனிப்பட்ட உறுப்பினர்கள் ஈடுபட்டு ள்ளனர்” என்றார் படேல். அப்போதிருந்து, சுதந்திர இந்தியாவில் பல பத்தாண்டுகளாக வன்முறையான வகுப்புவாத கலவரங்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பே பொறுப்பு என அதன் பெயர் அதிகா ரப்பூர்வ விசாரணை ஆணையங்களால் குறிப்பிடப் பட்டு, குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. பிரதமர் இந்த உண்மையை மூடிமறைத்ததோடு மட்டுமல்ல; அவர் அதற்கு தனது பகிரங்கமான அங்கீ கார முத்திரையை அளித்துள்ளார். இது அரசி யலமைப்பையும் அதன் மதிப்புகளையும் பாது காப்பதில் அவருக்கான பொறுப்பை மீறுவதாகும். எல்லை மீறப்பட்டு, இந்தியாவும் உலகமும் பார்த்திட பிரதமர் மோடி ‘பிரச்சாரக் மோடியாக’ மாறினார். உண்மையிலேயே பாரதம் எனும் இந்தியாவிற்கு அது ஒரு சோகமான நாள் ஆகும். நன்றி - ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தமிழில் : எம். கிரிஜா