articles

img

பிரிக்ஸ் கூட்டமைப்பைப் பார்த்து டிரம்ப் ஏன் அஞ்சுகிறார்- பிரகாஷ் காரத்

பிரிக்ஸ் கூட்டமைப்பைப் பார்த்து டிரம்ப் ஏன் அஞ்சுகிறார்?

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17 ஆவது உச்சி மாநாடு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் ஜூலை 6-7 தேதிகளில் நடைபெற்றது. இது பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டு பதினொரு நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு விரிவுபடுத்தப்பட்ட கூட்டமைப்பாக நடை பெற்ற முதல் உச்சிமாநாடாகும். இந்த மாநாடு முடிந்த உடனே பிரிக்ஸ் கூட்டமைப்புடன் சேரும் நாடுகளுக்கு பத்து சதவீத வரி (tariffs) விதிப்பேன் என அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டினார். இதற்கு முன்னும், அமெரிக்க டாலரின் மேலாதிக்கத்தை அழித்து அமெரிக்காவை பலவீனப்படுத்த பிரிக்ஸ் நாடுகள் ஆசைப்படுவதாக கூறி, பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று மிரட்டி இருந்தார். டிரம்ப் ஏன் பிரிக்ஸ் கூட்டமைப்பை பார்த்து இப்படி பயந்து கொந்தளிக்கிறார்?

பிரிக்ஸின் வரலாறும் வளர்ச்சியும்

பிரிக்ஸ் கூட்டமைப்பு 2009 இல் நான்கு நாடுக ளை உறுப்பினர்களாக கொண்டு துவங்கப்பட்டது. அதன்பிறகு ஒரு வருடம் கழித்து தென் ஆப்பி ரிக்கா ஐந்தாவது உறுப்பினராக இணைந்தது. அப்போ திருந்து பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா என முதலில் ஐந்து நாடுகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. இக்கூட்டமைப்பு தெற்குலக நாடுகளின் (Global South) நலன்க ளையும் விருப்பத்தையும் பிரதிபலிக்கக்கூடிய அமைப் பாகக் கருதப்பட்டது. இந்த ஐந்து நாடுகளும் உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்தையும், உலகப் பொருளாதா ரத்தில் கால் பங்கையும் கொண்டிருந்தன.  2024 தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 16 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், எகிப்து, எத்தி யோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய ஆறு நாடுகளை இந்த அமைப்பின் உறுப்பினர்களாக சேர்க்க முடிவு செய்யப்பட்டது. தற்போது இந்த பதினொரு பிரிக்ஸ்  நாடுகள் உலக மக்கள் தொகையில் 49.5 சதவீதத்தை யும், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 26 சத வீதத்தையும் கொண்டுள்ளன.

பிரிக்ஸின் தன்மையும் நோக்கமும்

பிரிக்ஸ் ஒரு அணி சேர்க்கையோ (bloc) அல்லது கூட்டணியோ (alliance) அல்ல. இது ஒரு தெற்கு லக நாடுகளின் குழுவாகும் (ரஷ்யா மட்டுமே விதி விலக்கு), இது பலதரப்பு நிறுவனங்களின் (multilateral institutions) சீர்திருத்தம், வர்த்த கம், பொருளாதார ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம்,  தொழில்நுட்பம் குறித்து பொதுவான நிலைப்பாடு களை அடைய முயற்சிக்கிறது. அதே நேரத்தில் இக் கூட்டமைப்பானது சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற நிறுவனங்கள் மீதும் வர்த்தகம் மற்றும் நிதி வழிமுறைகள் மீதும் ஜி-7 நாடுகள் மற்றும் மேற் கத்திய ஏகாதிபத்தியங்கள் கொண்டுள்ள ஆதிக்கத்திற்கு சவால் விடக்கூடிய திறனையும் கொண்டுள்ளது.  2008 இல் உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு பிரிக்ஸ் உருவானது. அதேபோல ஜி-7 நாடுகளின் நிழலில் இருந்து ஜி-20 நாடுகள் வெளியேறத் தவறி யதால் இக்கூட்டமைப்பு மேலும் முக்கியத்துவம் பெற்றது.

ரியோ பிரகடனமும்  தெற்குலக நிலைப்பாடும்

தற்போதைய பிரேசில் உச்சி மாநாட்டின் பிரகடனமானது ஈரான் மற்றும் காசா மீதான ஆக்கிர மிப்பு நடவடிக்கைகள் குறித்த தெற்குலக நாடுகளின் நிலைப்பாட்டை தெளிவாகப் பிரதிபலித்துள்ளது. ஈரானின் இறையாண்மை மற்றும் அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களையும், காசா மீதான இஸ்ரே லின் தொடர் தாக்குதல்கள், உணவு மற்றும் மனிதாபி மான உதவிகளுக்கு விதிக்கப்பட்ட தடையையும் இம்மாநாடு கடுமையாகக் கண்டித்துள்ளது.  மேலும் இந்த பிரகடனம், அமெரிக்காவின் தனிச்சையான வரி விதிப்புகள் மற்றும் வரியல்லாத மற்றும் நடவடிக்கைகளின் அதிகரிப்பு குறித்தும் அமெரிக்காவின் பெயரை குறிப்பிடாமல் தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அதே போல சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியில் முக்கிய தெற்குலக நாடுகளுக்கு அதிக வாக்குரிமை அதிகாரம் வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரேசில் மற்றும் இந்தி யாவுக்குப் பிரதிநிதித்துவம் கோரும் கோரிக்கையை யும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

டாலர் ஆதிக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள்

சர்வதேச வர்த்தகத்திற்காக டாலரைச் சார்ந்தி ருப்பதைக் குறைப்பதற்கும், பலதரப்பு நிதி நிறுவ னங்கள் மீதான அமெரிக்கா மற்றும் ஜி-7 நாடுகளின் ஆதிக்கத்தை பலவீனப்படுத்துவதற்கும் பிரிக்ஸ் நாடுகள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது டிரம்பை கொந்தளிக்கச் செய்துள்ளது. அமெ ரிக்கா குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராகப் பொருளா தார மற்றும் நிதித் தடைகளை அதிகரித்து, அவர்களை  சர்வதேச நிதி மற்றும் வங்கி அமைப்புகளிலிருந்து வெளியேற்றி வருவதால், அதிகமான நாடுகள் மாற்று நடவடிக்கைகள் மூலமாக தங்கள் நலன்களைப் பாதுகாக்க முயன்று வருகின்றன.  பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு மாற்றாக சொந்த நாண யங்களில் வர்த்தகம் செய்வது மற்றும் நாணய மாற்று ஏற்பாடுகள் (currency swap arrangements) குறித்து விவாதித்துள்ளன. சர்வதேச வர்த்தகத்தில் எல்லை தாண்டிய பணப்பரிமாற்றத்திற்கான நடவடிக்கை களும் இக்கூட்டமைப்பின் திட்டத்தில் உள்ளது. இந்த பிரேசில் மாநாட்டு பிரகடனமானது தங்கள் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கு, “பிரிக்ஸ் கூட்டமைப்பின் எல்லை தாண்டிய பணப்பரிமாற்றத்திற்கான முன்முயற்சி குறித்து தொடர்ந்து விவாதிக்கவும், மேலும் பிரிக்ஸ் நாடுகளின் பணப்பரிமாற்ற அமைப்புகளுக்கு இடையே அதிக இணைப்புக்கான (inter-opera bility) சாத்தியக்கூறுகள் குறித்த விவாதங்கள் நடத்துவ தற்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியமான வழிகளை அடையாளம் காண்பதில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் பணப்பரிமாற்ற பணிக்குழு (BRICS Payment Task Force - BPTF) செய்துள்ள முன்னேற்றத்தை அங்கீ கரிப்பதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது. டாலருக்கு மாற்றாக புதிய நாணயம் உருவாக்குவதற்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்கு இல்லை என்றாலும், டாலர் மீதான சார்பைக் குறைப்பதற்கான வரையறுக் கப்பட்ட நடவடிக்கைகளுக்கே டிரம்ப் நிர்வாகம் அபாயக்குரலை எழுப்பி வருகின்றது.

மாற்று நிறுவனங்களின் வளர்ச்சி

ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் உள்ள நிறுவ னங்களுக்கு மாற்றாக சில நிறுவனங்களை அமைப்ப தில் பிரிக்ஸ் படிப்படியான முன்னேற்றம் அடைந்து வரு கிறது என்பது புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank - NDB) விசயத்தில் தெளி வாக உள்ளது. இந்த வங்கி சீனாவின் ஷாங்காய் நகரை தலைமையிடமாகக் கொண்டு 2015 இல் 100 பில்லியன் டாலர் மூலதனத்துடன் நிறுவப்பட்டது. இந்த வங்கி கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கடன் களாக வழங்குவதற்குப் பதிலாக, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான கடன்களை கொடுக்க முயற்சிக்கி றது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மற்றும் தெற்குலக நாடு களில் 98 உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சுமார் 36 பில்லியன் டாலர் வரை கொடுத்துள்ளது. தற்போது வங்கியின் தலைவராக பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி தில்மா ரூசெஃப் உள்ளார்.  இந்த வங்கி மட்டுமல்லாது பிரிக்ஸ் நாடுகளின் மத்திய வங்கிகளிடையே பொது நிதியைக் கொண்ட தற்செயல் இருப்பு ஏற்பாடு (Contingent Reserve Arrangement - CRA) ஒன்றும் உள்ளது. இது பண நெருக்கடி ஏற்படும் போது உறுப்பு நாடு களுக்கு ஆதரவை வழங்குகிறது.

விமர்சனங்களுக்கு பதில்

ஒரு நிலையான ஏகாதிபத்திய எதிர்ப்பு திட்டத்தைக் கொண்டிருக்காததால், பிரிக்ஸ் கூட்ட மைப்பு முக்கியமற்றது என்று சில இடதுசாரி விமர்ச கர்கள் அதை நிராகரிக்கின்றனர். இந்த விமர்ச னம் தவறானது. பிரிக்ஸ் கூட்டமைப்பானது ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு தளம் (anti-imperialist platform) அல்ல. இந்த அமைப்பு தெற்குலக நாடு களின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்து வதுடன், அந்நாடுகளின் வளர்ச்சிக்கான தேவைக ளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் பொதுவான முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் வரை, அது பன்முகத்தன்மையை (multi-polarity) வலுப்படுத்தும் நோக்கத்திற்கு உதவும்.  பிரிக்ஸ் அமைப்பு அதனுடைய நோக்கம், ஒற்றுமை ஆகிய இரண்டிலும் வளரும்போது, அது அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கும் வளரும் நாடுகளுக்கும் இடையே நிலவும் முரண்பாட்டின் வெளிப்பாடாக இருக்கும். இந்தியா உட்பட பல பிரிக்ஸ் உறுப்பினர்கள் அமெ ரிக்காவுடன் உத்தி சார் மற்றும் பொருளாதார உறவு களைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் இந்த தெற்கு லக நாடுகள் ஒரு பலதுருவ உலகில் புறநிலையாக ஒரு பங்கையும் கொண்டுள்ளன. இது அவர்களின் சொந்த தேசிய நலன்களுக்கு சிறப்பாக சேவை செய்யும்.  இத்தகைய நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தி யத்துடன் இணக்கமாக இருக்கும் அதே வேளையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதன் மூல மாக ஒரு குறிப்பிட்ட அளவில் தங்களுடைய உத்தி சார் சுயாட்சியைக் (strategic autonomy) காப்பாற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகளையும் வழங்குகிறது.

டிரம்பின் ஆக்கிரமிப்பும்  பிரிக்ஸின் வளர்ச்சியும்

டிரம்ப் தலைமையிலான ஆட்சியானது வர்த்த கம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தன்னிச்சை யான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெ டுக்கிறது. இது தெற்குலக நாடுகளை கடுமையாக பாதிக்கிறது. அமெரிக்காவின் வர்த்தகப் போரானது அதனுடைய நெருங்கிய நட்பு நாடுகளான கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென் கொரியாவையும் விட்டுவைக்கவில்லை. இது அமெ ரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியக் கூட்டணியை பலவீனப்படுத்துகிற அதே வேளையில், மறுபுறம் தெற்குலக நாடுகளுக்கான ஒரு உண்மையான தளமாக பிரிக்ஸ் அமைப்பின் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருகிறது.  தற்போது அதிகமான நாடுகள் பிரிக்ஸ் கூட்ட மைப்பில் சேர விரும்புகின்றன. தற்போதைய பிரேசில் மாநாடானது ஒரு புதிய ‘கூட்டாளி நாடுகள் (partner countries)’ என்ற ஒரு பிரிவையும் அறிமுகப் படுத்தியுள்ளது. இம்மாநாட்டில் பெலாரஸ், பொலி வியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு நாடு களுக்கு இந்த கூட்டாளி நிலை வழங்கப்பட்டுள்ளது. இந்த புதுமையுடன், பல தெற்குலக நாடுகள் பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்துள்ளன.

பிரேசிலின் தலைமையில்  புதிய முன்முயற்சிகள்

பிரிக்ஸ் அமைப்பிற்கான தலைமை ஒரு வருட காலத்திற்கு மட்டுமே இருக்கும். இந்த ஆண்டிற்கான தலைவராக பிரேசில் இருந்தது. அந்நாட்டு ஜனாதி பதி லூலாவின் தலைமையில், சில குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நடைபெற உள்ள ஐ.நா அவையின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP30), பிரிக்ஸ் நாடுகள் கூட்டு நடவ டிக்கையில் ஈடுபடும் வகையில் ஒரு புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பிரிக்ஸ் கூட்ட மைப்பின் ஒற்றுமை நிலையை குறிக்கிறது.  தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவு (AI) ஆளுகை குறித்த உலகளாவிய விவாதங்களை மேலும் உள்ளடக்கியதாக இந்தப் பிரகடனம் ஆதரித்தது. இந்த விவாதங்கள் பெரும் பாலும் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத தெற்குலக நாடுகளின் கவலைகளை எதிரொலித்தது. மற்றொன்று பலதரப்பு உத்தரவாத முன்முயற்சிக்கான (Multil ateral Guarantees initiative) முன்மொழிவு ஆகும்.  இது முதலீட்டு உத்தரவாதங்களை வழங்கி ஆபத்தைக் குறைப்பதன் மூலமாக தெற்குலக நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான முதலீட்டை எளிதாக்குகிறது.

இந்தியாவின் பிரிக்ஸ் தலைமையும் சவால்களும்

இந்தியா 2026 ஆம் ஆண்டுக்கான தலைவராக உள்ளது. மோடி அம்மாநாட்டிற்கு “ஒத்துழைப்பு, நிலைத்தன்மைக்கான மீள்தன்மை மற்றும் புதுமை களை உருவாக்குதல்” என்பதை கருப்பொருளாக அறிவித்துள்ளார். தெற்குலக நாடுகளின் குரலாகத் தன்னை முன்வைத்துக் கொண்டாலும் மோடி அரசின் வெளியுறவு மற்றும் உத்திசார் கொள்கைகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே இருந்துள்ளன. தற்போது அதனுடைய முக்கிய கவன மானது பயங்கரவாதத்தை அனைத்து பலதரப்பு நிறு வனங்களிலும் முதன்மை விவாதமாக மாற்றுவது ஆகும். பாகிஸ்தானை மையமாக வைத்து செய்யப் படும் இந்த அணுகுமுறையின் அடிப்படையானது, ஒட்டுமொத்த தெற்குலக நாடுகளின் கவலைகளுடன் இணைந்து போகவில்லை. அமெரிக்கா தலைமை யிலான குவாட் (QUAD) அமைப்பில் தன் பங்கை வலுப்படுத்த மோடி அரசு ஆர்வமாக உள்ளது. இப்படி இருந்தாலும் இந்தியாவும் டிரம்ப்பின் நடவடிக்கை களால் பாதிக்கப்பட்டுள்ளது. டிரம்ப்பின் ஆக்கிர மிப்பு கோரிக்கைகளுடன் எவ்வளவு சமரசம் செய்ய  முயன்றாலும் மோடி அரசு டிரம்ப்பின் தாக்குதல்க ளுக்கு ஆளாக நேரிடும்.

பிரிக்ஸின் எதிர்காலமும்  இந்தியாவின் பங்கும்

பன்முகத்தன்மையை ஊக்குவித்தல் என்பதே இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாகும். சமீப காலத்தில் இந்தியாவும் சீனாவும் எல்லைப் பதற்றங்களைக் குறைக்கவும், பொருளாதார மற்றும் பயணம் தொடர்பான உறவுகளை மீட்டெடுக்கும் செயல்முறைகளை மீண்டும் துவங்கவும் கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இது பிரிக்ஸ் அமைப்புக்குள் சுமூகமான ஒத்துழைப்புக்கு இருந்த தடைகளை நீக்கிடவும் உதவ வேண்டும்.  மோடி அரசாங்கம் பிரிக்ஸ் தலைமைப் பதவியைப் பயன்படுத்தி தெற்குலக நாடுகளின் கூட்டு நலன்க ளை மேம்படுத்தும் ஒரு திட்டத்தை தொடரும் என்றும், பிரிக்ஸ் அமைப்பு துவங்கியுள்ள மாற்றுக் கொள்கை கள் மற்றும் வழிமுறைகளை பலவீனப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்கும் என்றும் நம்பப் படுகிறது.