புரட்சிகர அறவாழ்வின் அடையாளம் தோழர் நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம்!
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சமூக விடுதலைப் போராட்ட வீரருமான தியாக சீலர் தோழர் இரா. நல்லகண்ணு (101) அவர்கள் புதனன்று (25.02.2026) பிற்பகல் 02.15 மணிக்கு, சென்னை ராஜீவ்காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரி வித்துக் கொள்கிறோம். பொது வாழ்வில் தூய்மை, எளிமை, நேர்மை மற்றும் தன்னலமறுப்பு ஆகிய வற்றின் வாழும் அடையாளமாகத் திகழ்ந்து தமிழக மக்களின் பேரன்பையும், பெருமதிப்பை யும் பெற்ற ஒரு மாபெரும் ஆளுமையை நாம் இன்று இழந்து நிற்கிறோம். பிறப்பும் கல்விப் பின்னணியும் முந்தைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்ந்து வந்த வசதியான விவசாயக் குடும்பத்தில் இராமசாமி - கருப்பாயி தம்பதியருக்கு மூன்றாவது குழந்தை யாக 1925 டிசம்பர் 26 அன்று தோழர் இரா. நல்ல கண்ணு பிறந்தார். இவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் முத்துராமலிங்கம், சேது அம்மாள், வைகுண்டத்தம்மாள், சேது வைகுண்டராமன், முத்தம்மாள், இருளப்பன், லட்சுமி, கமலம், ஜானகி என ஒரு பெரிய குடும்பத்தில் வளர்ந்தவர். இராமசாமி - கருப்பாயி தம்பதியர் தங்கள் பிள்ளைகள் அனைவரையும் படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் கருத்தாக இருந்ததால், இரா. நல்லகண்ணு உட்பட அனைவரும் உயர் கல்வி பெற்றனர். விடுதலைப் போராட்டமும் மார்க்சியத் தேடலும் பள்ளிப்பருவ காலத்தில் தீவிரமாக நடை பெற்ற நாட்டின் விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட அவர், சிறுவர்களை அணிதிரட்டி, பாரதியின் பாடல்களைத் தெருத்தெருவாகப் பாடிச் சுதந்திரக் கனலை மூட்டியவர். 1942-44 கால கட்டத்தில் தேச விடுதலைப் போராட்ட வீரர் அண்ணாச்சி சண்முகம் அவர்களிடம் காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோ ரின் நூல்களை வாங்கிப் படித்து, தத்துவக் கண்ணோட்டம் பெற்றவர். தனது பள்ளி ஆசிரியர் பலவேசம் வழியாகக் கம்யூனிஸ்டு கொள்கை வழியைத் தேர்வு செய்துகொண்டார்.
ஸ்ரீவைகுண்டத்தில் வாலிபர் சங்கம் அமைத்துச் செயல்படத் தொடங்கியதில் இவரது அமைப்பு சார்ந்த பொது வாழ்க்கை தொடங்குகிறது. திருநெல்வேலி மாவட்டச் செய லாளராகப் பணியாற்றிய வி.எஸ். காந்தி அவர் களைச் செயலாளராகக் கொண்டு செயல்பட்ட அந்த வாலிபர் சங்கத்தை, “எனது அரசியல் ஆரம்பப் பள்ளி” என்று இரா. நல்லகண்ணு குறிப்பிடுவார். அவருடன் சக தோழராகத் திகழ்ந்த என்.டி. வானமாமலை பின்னாளில் நாடறிந்த முன்னணி வழக்கறிஞராகத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறை வாழ்க்கையும் களப்போராட்டங்களும் விடுதலைப் போராட்டக் காலத்தில் தீவிரமாகச் செயல்பட்ட தோழர் இரா. நல்லகண்ணு, ‘திருநெல்வேலி சதி வழக்கில்’ கைது செய்யப்பட்டு கடுமையான சித்ரவதைக்கு ஆளானார். ஒன்பதரை ஆண்டுகள் சிறை வாழ்க்கையையும், சில ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையை யும் அனுபவித்தவர். நான்குநேரி போர்டு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் நா. வானமாமலை, நெல்லை மாவட்டக் கட்சிப் பணிக்காகச் சென்ற முன்னோடித் தலைவர்கள் ப. மாணிக்கம், மீனாட்சிநாதன், கே. பாலதண்டாயுதம் போன்ற வர்களிடம் அரசியல் பாடம் கற்றவர். நான்குநேரி வட்டாரத்தில் விவசாயிகளைத் திரட்டிப் போராடுவதில் அவர் காட்டிய முனைப்பை கண்ட விடுதலைப் போராட்ட வீரர் பி. சீனிவாசராவ், “கட்டுமஸ்தான உடலமைப்பைக் கொண்ட இந்த வாலிபர் எதிர்காலத்தில் ஒரு நல்ல ஊழியராக வருவார்” என்று 1950-களிலேயே கணித்தார். அதன் போலவே, நான்குநேரி மடத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து விவசாயிகள் நில உரிமை பெறப் போராடி வெற்றி கண்டார். இயக்கத்தின் முன்னோடி தலைவர்களான ப.மாணிக்கம், கே.பாலதண்டாயுதம், மீனாட்சிநாதன், வி.எஸ்.காந்தி, கே. செல்லையா, எம்.எஸ்.தேனு போன்றோர்களுடன் இணைந்து தோளோடு தோள் நின்று களப்பணியாற்றியவர். கட்சிப் பொறுப்புகளும் உழைப்பாளர் நலனும் திருநெல்வேலி மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இருந்தவர், கட்சியின் தலைமை யகத் தகவல் மையப் பொறுப்புக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் தமிழ்நாடு விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பொறுப்பை ஏற்று 1992 வரை சுமார் 25 ஆண்டு கள் பணியாற்றினார்.
அடித்தட்டு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகத் தமிழ்நாடு முழு வதும் கிராமம் கிராமமாகச் சென்று சங்க அமைப்பை விரிவுபடுத்தி, புதிய ஊழியர்களைக் கண்டறிந்து போராட்டக் களத்தில் இணைத்துக்கொண்டவர். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகத் தொடங்கி, 1992-இல் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டார். 2005 வரை அந்தப் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டுத் தமிழ்நாட்டின் உயர்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவராகப் பரிணமித்தார். கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் போன்ற உயர் பொறுப்புகளிலும் செயல்பட்ட பெருமைக்குரியவர். அரசியல் முதிர்ச்சியும் சமூக நல்லிணக்கமும் 1996-இல் தமிழக அரசியல் களம் கடுமை யான நெருக்கடியைச் சந்தித்தபோது திமுக, தமாகா, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி அமைவதில் முக்கியப் பங்காற்றினார். தமிழ கத் தேர்தல் வரலாற்றில் 1996 தேர்தல் முடிவு புதிய அரசியல் திசை வழியை உருவாக்கியதில் இவரது பங்கு அளப்பரியது. 1982-இல் மீனாட்சி புரத்தில் மதவெறி சக்திகள் கலவரத்தை உரு வாக்கியபோதும், 1993-98 காலகட்டங்களில் சாதி கலவரங்கள் வெடித்தபோதும், தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து அமைதி யை நிலைநாட்டப் பெரும் பங்காற்றினார். அவரது மாமனார் அண்ணாசாமி, மருதன் வாழ்வு கிராமத்தில் சாதி வெறியர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த இழப்பிற்காக அரசு வழங்கிய வெகுமதித் தொகையைச் சாதிக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே பிரித்து வழங்கி அறம் காத்தவர் நல்லகண்ணு.
தாமிரபரணி மணல் கொள்ளையைத் தடுக்கச் சட்டப் போராட்டம் நடத்தி ஐந்தாண்டுகள் தடையுத்தரவு பெற்றதும் இவரது சூழலியல் அக்கறைக்குச் சான்று. தமிழ்ப் பற்றும் இலக்கியப் பற்றும் தமிழ் மொழி மீது தளராத பற்றுக் கொண்ட அவர், ‘புலவர்’ பட்டம் பயின்றவர். பாரதியார் பாடல்கள் மூலம் தேசபக்தி உணர்வை ஊட்டியவர். தொன்மை இலக்கியங்களைக் கற்பதில் ஆர்வம் காட்டிய அவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்துடன் எப்போதும் நெருக்கமான உறவில் இருந்தார். தமிழக அரசு வழங்கிய தரை தள வீட்டிலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். ஜெர்மன், சீனா உள்ளிட்ட நாடு களுக்குப் பயணம் மேற்கொண்டு உலகத் தொழி லாளர் இயக்கங்களின் அனுபவங்களைத் தமிழ கத்திற்கு அறிமுகப்படுத்தியவர். விருதுகளும் தன்னலமறுப்பும் அவரது பொதுச் சேவையைப் பாராட்டித் தமிழக அரசு 2007-இல் டாக்டர் அம்பேத்கர் விருதும், 2022-இல் ‘தகைசால் தமிழர்’ விருதும் வழங்கிச் சிறப்பித்தது.
தமக்குக் கிடைத்த விருதுத் தொகைகள் அனைத்தையும் இயக்க வளர்ச்சிக்கும், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கும் வழங்கித் தன்னலமற்ற வாழ்வு வாழ்ந்த வர். 80 ஆண்டு காலப் பொது வாழ்க்கையில் ஒரு துளி கூடக் கறை படியாத நேர்மையின் அடையாள மாகத் திகழ்ந்தார். குடும்பமும் தியாகமும் அவரது வாழ்விணையர் இரஞ்சிதம் அம்மையார் (ஆசிரியை), நல்லகண்ணுவின் நீண்ட காலச் சிறை மற்றும் தலைமறைவு வாழ்க்கையின் போது குடும்பச் சுமையை முழுமையாக ஏற்றுத் தோழருக்குப் பக்கபல மாக இருந்தவர். கடுமையான அடக்குமுறை களையும் கொடுமைகளையும் எதிர்கொண்ட போதும் குழந்தைகளை உயர்ந்த நிலைக்கு வளர்த்தெடுத்தவர். அவர் 2016இல் காலமானார். இவர்களுக்கு ந. காசிபாரதி, டாக்டர் ந. ஆண்டாள் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களது கணவர்களான வழக்கறிஞர் எஸ். அழகுமுத்துபாண்டியன் (முன்னாள் மாவட்டச் செயலாளர்) டாக்டர் என். பழனி ஆகிய இருவரும் ஏற்கெனவே காலமாகிவிட்டனர். இறுதிப் பயணமும் செவ்வணக்கமும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழர், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவரது நல்லுடல் புதன் மாலை முதல் வியாழன் பிற்பகல் 3 மணி வரை சென்னை தி. நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ‘பாலன் இல்லத்தில்’ பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் விருப்பப்படி, அவரது நல்லுடல் வியாழன் (பிப். 26) மாலை 5 மணிக்குச் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ ஆய்வுக்காகக் கொடையளிக்கப்படும். அவரது மறைவுக்கு ஏழு நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டுச் செங்கொடிகள் அரைக்கம்பத்தில் தாழ்த்திப் பறக்கவிடப்படும். வகுப்புவாத, சாதிவெறி சக்திகளுக்கு எதிராகச் சமரசமின்றிப் போராடி வந்த அந்த மாபெரும் தியாகச் சுடரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். சென்று வாருங்கள் தியாக சீலரே! உங்கள் அறவாழ்வு எமக்கு என்றும் வழிகாட்டும்!
