articles

img

தர்மம் எப்போது வெல்லும் - சா.பீட்டர் அல்போன்ஸ்

தர்மம் எப்போது வெல்லும்

காசாவில் வாழும் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தும் மனிதாபிமானமற்ற போர் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அழித்து ஒழிக்கவும், பணயக் கைதி களை மீட்டெடுக்கவும் நடத்தப்படுவதாக சொல்லப்பட்ட இஸ்ரேல் அரசின் ராணுவ நடவடிக்கைகள் தற்போது காசாவில் வாழும் பாலஸ்தீனர்களை அழிக்கும் “இன அழிப்புப் போராக” மாறியுள்ளது. இதுவரை 62,000 பாலஸ்தீனர்களுக்கு மேலாக கொல்லப்பட்டுள்ளார்கள். இதில்  18,000 பேர் குழந்தைகள். காசா மக்கள் தொகையில் சுமார் 10% மக்கள் ஊனமாக்கப் பட்டிருக்கின்றனர். இருபது லட்சம் மக்கள் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டப்பட்டு, சாலை ஓரங்களிலும், திறந்த வெளிகளிலும் வாழ்கிறார்கள்.  

அக்கிரமத்துக்கு உதவிக் கொண்டு அமைதிப் பரிசுக்கு ஆசை?

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படுகின்ற உணவு, மருந்துகள் போன்ற நிவாரணப் பொருட்களை எடுத்துச்செல்ல சர்வ தேச நாடுகளையும் தொண்டு நிறுவனங்களை யும் இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்காத கார ணத்தால் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக் கான குழந்தைகளும், முதியவர்களும், நோயா ளிகளும் பசியாலும், பட்டினியாலும் இறந்து வருகின்றனர். சர்வதேச ஊடகவியலாளர் களையும், தொண்டுநிறுவனங்களைச் சார்ந்த தன்னார்வலர்களையும்கூட இஸ்ரேல் ராணுவம் சுட்டுத்தள்ளுகிறது. இத்தனை அநியாய அக்கிரமங்களுக்கும் பகிரங்கமாக உதவி செய்யும்  அமெரிக்க   ஜனாதி பதி டொனால்டு டிரம்ப். “உலக சமாதானத்தின்  காவலராக” தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இந்த ஆண்டு உலக சமாதானத் திற்கான நோபல் பரிசை வாங்கத் துடிக்கிறார். இந்த மரணக் கச்சேரிக்கு பக்கவாத்தியம் வாசிப்பவர்கள் பணக்கார ஐரோப்பிய வல்லரசுகள். பாலஸ்தீனம் முழுவதும் மரண பயம். குடியிருப்புகளில் எல்லாம் பிண வாடை. முன்னறிவிப்பின்றி பறந்துவரும் ட்ரோன்கள் வீசும் அமிலக் குண்டுகளால் அடையாளமே தெரியாமல் சிதைந்துபோகும் குழந்தைகளை அடையாளம் காண அவர்களது உடல்களில் குழந்தைகளின் பெயர்களை பச்சைகுத்தி வைக்கும் தாய்மார்கள். மருத்துவ மனைகளில் மின்சாரம் இல்லை. மொபைல் போன்களின் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் அவலம்.

ரவுடி நாடாக வளர்க்கும் அமெ., ஐரோப்பிய நாடுகள்

அமெரிக்காவின் ஆயுத உதவிகளும், ஐரோப்பிய நாடுகளின் வணிகத் தொடர்புகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் இல்லா மல் இஸ்ரேல் ஒரு மணிநேரம்கூட போர்க் களத்தில் நிற்க முடியாது. முக்கியமாக எண் ணெய் வளமிக்க அரபுநாடுகளை தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க இஸ்ரேல் என்ற “ரவுடி நாடு” அவர்கள் கைவசம் எப்போ தும் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். பாலஸ்தீனத்திற்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதியான பிரான்செஸ்கா ஆல்பனீஸ், இந்த போரின் மூலமாக அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள் பெறும் லாபம் குறித்த விளக்கமான அறிக்கையை வெளியிட்டார். அமேசான், மைக்ரோசாஃப்ட் உட்பட பல நிறு வனங்கள் தங்களது புதிய தொழில்நுட்பங் களையும், ஆயுதக் கண்டுபிடிப்புகளையும் சோதனை செய்யும் ஆய்வுக்களமாக காசாவை மாற்றியிருக்கின்றன. இந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஆல்பனீஸ் மீது ‘யூதர்களின் விரோதி’ என்று குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவரது வங்கிக் கணக்குகளை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் முடக்கி வைத்துள்ளன. நாகரிகமிக்க, ஜனநாயக உணர்வுள்ள, மனித நேயம் மிக்க நாடுகள் என்று எப்போதும் தங்களைப்பற்றி பெருமை பேசிக்கொள்ளும் இவர்கள், தங்களால் நேரில் செய்யமுடியாத “அயோக்கியத் தனங்களை” இஸ்ரேல் மூல மாக நிறைவேற்றிக்கொள்வார்கள். இதற்கான நிதி உதவி உட்பட அனைத்து உதவிகளையும் அமெரிக்காவும், ஐரோப்பிய வல்லரசு நாடு களும் இஸ்ரேலுக்கு செய்து வருகின்றன. பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரத்தை முதன்முதலில் வழங்கிய இந்தியா போன்ற நாடுகளும், அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கிய ரஷ்யா-சீனா போன்ற நாடுகளும் இன்று அவர்களுடைய உள்நாட்டு பாதுகாப்பு, எல்லைப் பதற்றங்கள், டிரம்ப் எனும் “அநியாய மான பேராசைக்காரர்” சர்வதேச நாடுகளின் மீது தொடுத்திருக்கும் அநியாய வரி விதிப்புப் போர் போன்ற பிரச்சனைகளால் பாலஸ்தீனர் களுக்கு ஆதரவாக ஓங்கிக் குரல் கொடுக்க முடியவில்லை.

இந்தியாவின் குழப்பமான நிலைப்பாடு

சர்வதேசச் சட்டங்களுக்கு விரோதமாக நடந்துகொள்ளும் இஸ்ரேல் குறித்த இந்திய நிலைப்பாட்டில் தெளிவு இல்லை. பாலஸ்தீனத்தை அரை நூற்றாண்டுக்கு முன்னரே அங்கீகரித்தது இந்தியா. வாஜ்பாயி பிரதமரானதும் அத்வானி இஸ்ரேல் சென்றார். அது முதற்கொண்டு இஸ்ரேலோடு இந்தியாவின் நெருக்கம் அதிகரித்தது. மோடி ஆட்சிக்கு வந்ததும் இஸ்ரேலிடம் ஆயுதங்கள் வாங்குவதும், உளவு வேலைக்கான உயர் தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவதும் என்று நெருக்கம் பல மடங்குகள் அதிகமாயிற்று.  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, டிரம்ப்பைப் போல நமது பிரதமரின் நெருங்கிய நண்பர். இதனால் ஐ.நா. பொது அவையில் உட னடியாக போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்ற தீர்மானத்திற்கு 120 நாடுகள் ஆதரித்த வேளை யில், இந்தியா ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து கொண்டு வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வில்லை. பிரிக்ஸ் நாடுகள் கூட்டத்தில் சீன ஜனாதிபதி முன்மொழிந்த போர் நிறுத்தத் தீர்மானத்தையும் வழிமொழிய மறுத்துவிட்டது. ஆனால் வெளியுறவு துறை அமைச்சர் போரில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு தனது எதிர்ப்பை மட்டும் பதிவு செய்தார். பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக மோடி எத்த னை நாள் நடிப்பார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நேதன்யாகுவின்  கடைசி ஆட்டம்

போர் நிறுத்தத்திற்கும், பணயக் கைதி களை விடுதலை செய்வதற்கும் ஹமாஸ் அமைப்பினர் தயார் என்று அறிவித்த பின்னரும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ராணுவத் தாக்குதல்களை நிறுத்த தயாராக இல்லை. அவரது பதவியைக் காப்பாற்றவும், தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கும் இந்த யுத்தம் அவசியம். போர் நின்றுவிட்டால் உடனடியாக தேர்தல் நடத்தப்படவேண்டும். உள்நாட்டில் கடுமையான மக்கள் எதிர்ப்பை மீறி அவரால் வெற்றி பெற இயலாது. அவர் மீதுள்ள ஊழல் வழக்குகளின் விசாரணை, யுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்தவுடன் விசாரணை தொடரும். தண்ட னை நிச்சயம் என்று சொல்கிறார்கள். எனவே யுத்தத்தின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்த நேதன்யாகு முயற்சிக்கிறார். பத்து லட்சம் மக்கள் வாழும் காசா நகரை யும், காசா பகுதி முழுவதையும் இஸ்ரேல் நாட்டின் பகுதி என்று அறிவிக்கும் தீர்மா னத்தை அவரது அமைச்சரவை நிறைவேற்றி யுள்ளது. அதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் மக்களை அங்கே குடியமர்த்தும் பணியையும் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக ஐந்தாயிரம் குடியிருப்புகளைக் கட்டத் துவங்கியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனர்களை வெளியேற்றும் ராணுவ நடவடிக்கைகளை துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற் காக 60,000 ராணுவ வீரர்கள் பணியமர்த்தப் பட உள்ளனர்.

கதறும் காசா நகர தலைவர்

“பாலஸ்தீனம், இஸ்ரேல் என்று இருநாடு களே இல்லை. இனி இஸ்ரேல் மட்டும்தான்” என்று இஸ்ரேல் நிதி அமைச்சர் கொக்கரிக் கின்றார். காசா நகர்மன்ற தலைவர் முஸ்தபா குவாசத் “இது பேரழிவு. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி நகரைவிட்டு பீதியுடன் ஓடுகின்றனர். தங்க இடமின்றி தரிசு நிலங் களில் மேற்கூரைகூட இல்லாமல் தங்கியுள்ள னர். உலக நாடுகளே! இக்கொடுமையைத் தடுத்து நிறுத்துங்கள்!” என்று கதறுகின்றார்.  அரபு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும்  வெறும் கண்டனங்களோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக மவுனம் காக்கிறார்கள். டிரம்ப் உலக சமாதானத்திற்கான நோபல் பரிசுக்காக காத்திருக்கின்றார். நேதன்யாகு, அப்பரிசு பெற தகுதியான ஒரே நபர் டிரம்ப் மட்டும்தான் என வழிமொழிகிறார். டிரம்ப்புக்கு நோபல் பரிசை வழங்காவிடில் நோபல் பரிசு  தலைமை செயலகத்தை டிரம்ப்பும், நேதன்யாகுவும் சேர்ந்து குண்டுகள் போட்டு அழித்தாலும் ஆச்சரியப்படமாட்டேன். “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும்!” என்று அடிக்கடி சொல்கிறார்களே, அந்த தர்மம் எப்போது வெல்லும்? பாலஸ்தீன குழந்தைகளின் மரண ஓலம் எப்போது நிற்கும்?