ஒன்றிய அரசின் கொடிய சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 12-ல் தேசமே ஸ்தம்பிக்கும்!
தொழிலாளர் தேசிய சிறப்பு மாநாட்டில் 10 மத்திய தொழிற்சங்கங்கள் பிரகடனம்
புதுதில்லி, ஜன.09- நாட்டின் உழைக்கும் வர்க்கத்தின் மீதும், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக விழு மியங்களின் மீதும் ஒன்றிய பாஜக அரசு தொடுத்துள்ள இடைவிடாத தாக்குதல்களை முறியடிக்க, வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் மாபெரும் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று பத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை ஜனவரி 9 வியா ழனன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதுதில்லி ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில் நடைபெற்ற தேசிய அளவிலான தொழிலாளர் சிறப்பு மாநாட்டில் பங்கேற்ற ஆயிரக்கணக் கான பிரதிநிதிகள் முன்னிலையில், இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் இந்த எழுச்சிமிக்க உரிமைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்த மாநாடு நாட்டின் ஒரு மிக முக்கியமான கால கட்டத்தில் நடைபெறுவதாகவும், தொழிலாளர் களின் உரிமைகளைப் பறிக்கும் நான்கு தொழி லாளர் சட்டத் தொகுப்புகளைத் திணிப்பதன் மூலம் உழைக்கும் மக்களின் போராட்ட வலிமை யைச் சிதைக்க அரசு முயல்வதாகவும் இம்மாநாடு குற்றம் சாட்டியுள்ளது. தலைவர்கள் ஆவேச உரை இம்மாநாட்டை ஒருமித்த கருத்துடன் வழி நடத்த அனைத்துச் சங்கங்களையும் உள்ள டக்கிய தலைமைக்குழு அமைக்கப்பட்டது. மாநாட்டின் தலைமைக்குழு மற்றும் முக்கியப் பேச்சாளர்களாக ஐஎன்டியுசி சார்பில் அமித் யாதவ் மற்றும் அசோக் சிங், ஏஐடியுசி சார்பில் ஹரித்வார் சிங் மற்றும் அமர்ஜீத் கவுர், ஹெச் எம்எஸ் சார்பில் சம்பா வர்மா மற்றும் ஹர்பஜன் சிங் சித்து, சிஐடியு சார்பில் சுதீப் தத்தா மற்றும் எளமரம் கரீம் ஆகியோர் பங்கேற்று உரை யாற்றினர். மேலும் ஏஐயுடியுசி சார்பில் விஜய் பால் சிங் மற்றும் ஆர்.கே. சர்மா, டி யுசிசி சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் மிஸ்ரா, சேவா சார்பில் ஆஷாபென் மற்றும் லதாபென், ஏஐசிசி டியு சார்பில் சுசேதா தே மற்றும் ராஜீவ் டிம்ரி, எல்பிஎப் சார்பில் ஆர்.கே. மௌரியா மற்றும் ஜவஹர் சிங், யுடியுசி சார்பில் ஆர்.எஸ்.தாகர் மற்றும் சத்ருஜித் சிங் ஆகிய தலைவர்கள் மாநாட்டைத் தலைமை தாங்கி வழிநடத்திய தோடு, மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைச் சாடி எழுச்சியுரையாற்றினர். இந்தியத் தொழிலாளர் வர்க்கம் கடந்த காலங் களில் ஐந்து மாபெரும் பொது வேலை நிறுத்தங்களை வெற்றிகரமாக நடத்திய போதி லும், அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருப்ப தை இத்தலைவர்கள் சுட்டிக்காட்டினர். ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும் பொருளாதாரச் சரிவும் இந்தியத் தொழிலாளர் இயக்கம் முன்னெப் போதும் இல்லாத ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளதாக இம்மாநாடு கவலை தெரிவித்தது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து வருவது ஒருபுறமிருக்க, வேலை யில்லாத் திண்டாட்டம் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டி யுள்ளது. மக்களின் அடிப்படை ஜனநாயக உரி மைகள் நசுக்கப்படுவதோடு, சிறுபான்மை யினருக்கு எதிராக விஷமத்தனமான வெறுப்புப் பிரச்சாரங்கள் மூலம் மக்களைத் துண்டாடும் மதவாத முயற்சிகள் திட்டமிட்டு அரங்கேற்றப் படுகின்றன. ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்படும் தன்னாட்சி நிறுவனங்கள் அனைத்தும் ஆளுங்கட்சியின் விசுவாசிகளைக் கொண்டு நிரப்பப்பட்டு, மாற்றுக் கருத்துடை யோர் மற்றும் விமர்சிப்போர் ஒடுக்கப்படுவது குறித்துத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரி வித்தனர். குறிப்பாக, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் சங்கம் அமைக்கும் உரிமை ஆகியவற்றின் மீது அரசு ஏவிவிட்டுள்ள தாக்குதல் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பையே சிதைத்து வருவதாக சிறப்பு மாநாட்டின் பிரகடனம் எச்சரிக்கிறது. தொழிலாளர்களை அடிமையாக்கும் சட்டங்களும் கொள்கைகளும் நாடாளுமன்றத்தில் தனக்குள்ள பெரும் பான்மையைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை முறையான விவாதமின்றி நிறைவேற்றி யுள்ளது. இந்தச் சட்டங்கள் குறித்துத் தொழி லாளர் சங்கங்களுடன் அரசு எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை. குறிப்பாக, கடந்த அக்டோபர் மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட தொழிலாளர் கொள்கை வரைவு அறிக்கையை இம்மாநாடு அடியோடு நிராகரித்தது. இக்கொள்கை, உழைப்பைத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமை என்று கருதாமல், அதை ஒரு தர்மம் என்று அடையாளப்படுத்துகிறது. நவீன காலத்திற்குப் பொருந்தாத மனுஸ்மிருதி மற்றும் பிற பழமைவாத நூல்களிலிருந்து இக்கொள்கை உத்வேகம் பெற்றுள்ளதாகக் கூறப்படுவது, தொழிலாளர்களை மீண்டும் இருண்ட அடிமைத்துவ காலத்திற்கு இட்டுச் செல்லும் பிற்போக்குத்தனமான முயற்சியாகும். இந்தச் சட்டங்கள் முழுமையாக அமலானால், நாட்டில் உள்ள எழுபது சதவீத தொழிற்சாலைகள் தொழிலாளர் சட்டங்களின் வரம்பிலிருந்து வெளியேறிவிடும். வேலை பாதுகாப்பு, ஊதிய பாதுகாப்பு மற்றும் கூட்டுப் பேரம் பேசும் உரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டு, தொழிலாளர்கள் முதலாளிகளின் தயவில் வாழ வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று இம்மாநாடு எச்சரித்தது. பொதுத்துறை விற்பனையும் தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஒன்றிய அரசின் தீவிரத் தனியார்மய மாக்கல் கொள்கை தேசத்தின் சுயசார்பு பொருளாதாரத்தையே சிதைத்து வருவதாக மாநாடு எச்சரித்தது. ரயில்வே, துறைமுகங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள், எண்ணெய், எஃகு, பாதுகாப்புத் துறை, சாலைப் போக்குவரத்து, விமான நிலையங்கள், வங்கிகள், காப்பீடு, தொலைத்தொடர்பு மற்றும் அணுசக்தி என அனைத்துத் துறைகளையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க அரசு துடிக்கிறது. சுமார் 65 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப மறுக்கும் அரசு, நிரந்தரப் பணிகளைத் திட்டமிட்டு ஒப்பந்தமயமாக்கி வருகிறது. காப்பீடு துறையில் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதும், லாப நோக்கோடு அணுசக்தித் துறையில் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் ஷாந்தி சட்டம் போன்றவையும் தேசப் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாகும் என்று இம்மாநாடு பிரகடனம் செய்தது. அடிப்படைச் சேவைகள் சீர்குலைந்து வரும் நிலையில், தூய்மையற்ற குடிநீரால் மக்கள் உயிரிழக்கும் அவலம் தொடருவதாகவும், கல்வி மற்றும் சுகாதாரம் எட்டாக்கனியாக மாறி வருவதாகவும் மாநாடு கவலை தெரிவித்தது. கிராமப்புற வாழ்வாதாரச் சிதைவும் விவசாயிகளின் போராட்டமும் விவசாயத் துறையிலும் அரசு புகுத்தி யுள்ள மாற்றங்கள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரமாக இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்து, அதற்குப் பதிலாக விக்சித் பாரத் கிராமீன் என்ற புதிய சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இது உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட வேலைவாய்ப்பை, தன்னிச்சையான மத்திய அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதோடு, நிதிச் சுமையை மாநில அரசுகளின் மீது சுமத்துகிறது. இது தவிர, புதிய விதை மசோதா மற்றும் மின்சாரத் திருத்தச் சட்டம் போன்றவை விவசாயிகளையும், சிறு மற்றும் நடுத்தர மின் நுகர்வோரையும் கடுமையாகப் பாதிக்கும் என்று தலைவர்கள் சுட்டிக்காட்டினர். விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகள் வாழ்வாதாரம் தேடி நகரங்களுக்கு இடம்பெயரும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதை இம்மாநாடு சுட்டிக்காட்டியது. விடுதலைப் போராக அறிவிக்கப்பட்ட பொது வேலைநிறுத்தம் ஒன்றிய அரசின் இந்தப் பிடிவாதமான போக்கிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வரும் ஜனவரி 16 அன்று விதை மசோதா மற்றும் மின்சாரத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிராம மற்றும் ஒன்றிய அளவில் ஐக்கிய கிசான் மோர்ச்சா நடத்தும் எதிர்ப்புப் போராட்டங்களில் தொழிற்சங்கங்கள் முழுமையாகப் பங்கேற்கும். இதன் தொடர்ச்சியாகப் பிப்ரவரி 12 நாடு தழுவிய ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் நடைபெறும். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்களுடன் இணைந்து மின்சாரத் துறை ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் தேசியக் கூட்டமைப்பும் பங்கேற்கிறது. அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறாவிட்டால், பிப்ரவரி வேலைநிறுத்தத்திற்குப் பிறகு பல நாட்கள் நீடிக்கக்கூடிய தொடர் பொது வேலைநிறுத்தங்கள் நடத்தப்படும் என்றும் இம்மாநாடு எச்சரித்துள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், தேர்தல் முறைமையையும் காப்பாற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகள் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் அமைப்புகள் இந்த உரிமைப் போரில் கைகோர்க்க வேண்டும் என 10 மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன.
