articles

img

பாஜக அரசால் சதிராடப்படும் சாகித்ய அகாடமியும், தணிக்கை வாரியமும் - கே.பாலகிருஷ்ணன்

பாஜக அரசால் சதிராடப்படும் சாகித்ய அகாடமியும், தணிக்கை வாரியமும்

இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு கலை, இலக்கியத் துறை மற்றும் திரைப்படத்துறையைச் செம்மைப் படுத்தவும், வளமைப்படுத்தவும் சுதந்திரமான அமைப்புகளாக சாகித்ய அகாடமியும், மத்திய திரைப்படச் சான்றிதழ் துறையும் உருவாக்கப் பட்டுச் செயல்பட்டு வந்துள்ளன. சாகித்ய அகாடமி துறையின் மூலம் இந்திய நாட்டில் தமிழ், வங்காளம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிகளில் சிறந்த இலக்கியங்கள் படைப்போ ருக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் இவ்விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் குறித்துச் சில விமர்ச னங்கள் இருந்த போதிலும், அவ்வமைப்பானது அரசின் தலையீடின்றி சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தது.

இதேபோல வெளியிடப்படும் திரைப்படங்க ளுக்கான சான்றிதழ் வழங்கித் திரையிடப்படு வதற்கு அனுமதி வழங்கும் பணியினைத் திரைப்படச் சான்றிதழ் துறை நிறைவேற்றி வரு கிறது. இதுவும் அரசின் தலையீடின்றி சுதந்திர மாகத் திரைப்படங்களைத் தணிக்கை செய்து  சான்றிதழ் வழங்கி வந்தது. ஆனால், இவைக ளெல்லாம் பாஜக ஆட்சியில் பழங்கதையாகிப் போயுள்ளன. ஏற்கனவே சிபிஐ, தேர்தல் ஆணை யம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அனைத்தையும் தன்னுடைய கைப்பா வையாக மாற்றி இந்தியாவின் ஜனநாயக நெறி முறைகளை பாஜக அரசு காலில் போட்டு மிதித்து வருகிறது. இப்பட்டியலில் தற்போது சாகித்ய அகாடமியும், திரைப்படச் சான்றிதழ் துறையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜக அரசுக்கு ஒத்தூதும் இலக்கியங்களுக்கும், திரைப் படங்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தொடுக்கப்பட்ட நெருக்கடிகள் சமீபத்தில், விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்திற்கான திரைப்படச் சான்றிதழ் வழங்கு வது இழுத்தடிக்கப்பட்டு படத் தயாரிப்பு நிறு வனம் சொல்லொணா நெருக்கடிக்கு ஆட்பட்டு வருகிறது. ‘ஜனநாயகன்’ படம் திரைப்பட அனு மதிக்கு 2025 டிசம்பர் மாதம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. திரைப்பட அனுமதிக்குழு டிசம்பர் 19, 2025 அன்று படத்தைப் பார்வையிட்டுச் சில திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் அந்தத் திருத்தங்களை ஏற்றுக்கொண்டு டிசம்பர் 24 ஆம் தேதி மீண்டும் சமர்ப்பித்துள்ளது. இதை ஏற்றுக்கொண்ட தணிக்கைக்குழு படத்திற்குச் சான்றிதழ் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தயாரிப்பு நிறுவனம் இதன் பின்னர் திரைப் படத்தை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொண்டது. படம் வெளியிடுவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, திரையரங்குகள் முன்பதிவு என அனைத்துப் பணிகளும் முழுவீச்சில் தொடங்கியிருந்த நிலையில், திடீரெனப் படத்தைத் தணிக்கைத் துறையின் மறு ஆய்வுக்கு அனுப்ப உள்ளதாக அறிவிப்பு வெளி யானது. தணிக்கைத் துறையின் ஒரு உறுப்பி னர் அளித்த ஆட்சேபணையின் பேரில் இந்நட வடிக்கை மேற்கொள்வதாகத் தணிக்கை வாரியத் தலைவர் அறிவித்துள்ளார். நீதிமன்றப் போராட்டமும்  ஒன்றிய அரசின் தடையுத்தரவும் இதனை ஏற்க மறுத்த படத்தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உடனடியாகச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டுமெனக் கோரினார். உயர்நீதி மன்றத் தனி நீதிபதி பி.டி. ஆஷா வழக்கை விசாரித்து ஆவணங்களை எல்லாம் சரிபார்த்த  பின்னர் படத்திற்குச் சான்றிதழ் வழங்க வேண்டு மென உத்தரவிட்டார். மேலும், தனது தீர்ப்பில் ஏற்கெனவே தணிக்கைத்துறை சான்றிதழ் வழங்கச் சிபாரிசு செய்த பின்னர் மீண்டும் ஆய்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பியது ஏற் புடையதல்ல எனவும் தெளிவாகக் குறிப் பிட்டுள்ளார்.

உடனடியாக மத்திய தணிக்கை வாரியம் தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டுமென உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் மேல்முறையீடு செய்தது. அதன் அடிப்படையில் தற்போது ‘ஜனநாயகன்’ படத்திற்குச் சான்றிதழ் வழங்கத் தடை விதிக் கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஜனவரி 9 ஆம் தேதி திரையி டப்படவிருந்த ‘ஜன நாயகன்’ படம் திரை யிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத மோசமான இந்நடவடிக்கை ஒன்றிய பாஜக அரசின் தலையீட்டின் பேரி லேயே நடந்துள்ளது என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது. குறிப்பாக, உயர்நீதிமன்றத் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடியதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் இவ்வழக்கில் ஆஜராகி வாதிட வேண்டிய தேச முக்கியத்துவம் வாய்ந்த அவசியம் என்ன என்பதே இங்கு எழும் கேள்வி.

தவெக தலைவர் விஜய் நடித்த இப்படத்திற்கு ஒன்றிய அரசு கொடுக்கும் நேரடி நிர்பந்தமே இத்தகைய நிலைமைக்குக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. மௌனம் காக்கும் “கதாநாயகனும்” மக்கள் பாதிப்பும் ஆனாலும், ஒன்றிய அரசின் இந்த நய வஞ்சக அராஜகப் போக்கை எதிர்த்துச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் கதாநாயகன் வாய்திறக்காமல் ரகசியம் காப்பது ஏன் என்பது அனைவர் முன்னாலும் பெரும் கேள்வியாக உள்ளது. ‘ஜனநாயகன்’ என்ற பெயரைத் தாங்கிய படத்தின் மீது தொடுக்கப்படும் ஜன நாயக விரோத நடவடிக்கைகளை தவெக தலை வரும் இப்படத்தின் கதாநாயகனும், தமிழ்நாட்டின் ஜனநாயகத்தைத் தான் நிலை நாட்டப்போவதாகச் சண்டமாருதம் செய்பவ ருமானவர், ஒன்றிய அரசுக்குச் சரணாகதியாகச் செல்வது ஏனோ என்பது அவருக்கே வெளிச்சம். உலகம் முழுவதும் டிக்கெட் முன்பதிவு செய்த வர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களது பணம் திரும்பி வழங்கப்படும் எனத் திரையரங்குகள் அறிவித்துள்ளன. இருப்பினும், பல நூறு கோடி செலவழித்துத் தயாரிக்கப்பட்ட திரைப்படம் திரையிடப்பட முடியாமல் இழுத்தடிக்கப்படுவதும், பொங்கல் வெளியீட்டின்போது கிடைக்க வேண்டிய வாய்ப்பு கள் அனைத்தும் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது தயாரிப்பு நிறுவனத்திற்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

திரைப்படத் தணிக்கைத் துறை பாஜக அரசின் அராஜகத்தால் சீர் குலைந்திருப்பதும், எதிர்காலத்தில் தங்களது ஒப்புதல் பெற்ற படங்களே வெளியிட முடியும் என்பது அராஜகத்தின் உச்சமாகும். சாகித்ய அகாடமியில்  அநாகரீகத் தலையீடுகள் ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத் துறையில் சாதனையாளர்களைத் தேர்வு செய்து சாகித்ய அகாடமி விருது வழங்கி வருவது வழக்க மான ஒன்றாகும். சாகித்ய அகாடமியின் நிர்வாகக் குழுவின் இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப் பட்ட விருதாளர்கள் பட்டியல் இறுதி செய்யப் பட்டுள்ளது. இப்பட்டியலில் தமிழகத்தின் தலை சிறந்த இடதுசாரிய படைப்பாளரான ச.தமிழ் செல்வன் பெயர் உட்படப் பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதனை அறிவிப்பதற்காக டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி பத்திரிகையாளர்க ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் நடைபெற இருந்த பத்திரிகையாளர்கள் கூட்டம் திடீ ரென்று ரத்து செய்யப்பட்டதால் தேர்வு செய்யப்பட்ட விருதாளர்கள் பெயர்கள் வெளி யிடப்படவில்லை.

1954இல் சாகித்ய அகாடமி அமைக்கப்பட்டது முதல் இப்போது வரை இவ்வாறு நடந்ததில்லை. ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறையின் தலையீட்டின்பேரிலேயே இந்த அராஜகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த படைப்பாளர்களுக்கு விருது வழங்கப்படுமா அல்லது பாஜக அரசின் தலையீட்டால் மாற்றப்பட்டுத் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயர் இணைக்கப்படுமா என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. முடக்கப்படும் கருத்து சுதந்திரம் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்த சாகித்ய அகாடமி அமைப்பை முடமாக்கித் தாங்கள் விரும்புகிறவர்களுக்கு மட்டுமே விருது வழங்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் மத்திய பண்பாட்டுத்துறை சாகித்ய அகாடமி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விதித்த உத்தர வுகளின் மூலம் இந்த அராஜகம் அரங்கேற்றப் பட்டுள்ளது. இதன் மூலம் சிறந்த இலக்கியவா திகள் புறக்கணிக்கப்படுவதற்கும், அரசின் தத்துவக் கோட்பாடுகளுக்குத் துதிபாடுபவர்க ளுக்கும் விருது வழங்கும் அமைப்பாகச் சாகித்ய அமைப்பு மாற்றப்பட்டுள்ளது மிகவும் ஆபத்தான போக்காகும்.

ச.தமிழ்ச்செல்வன் போன்ற, தமிழ் இலக்கிய உலகின் முத்திரை பதித்த முற்போக்குப் படைப்பாளிகளுக்கு இது போன்ற விருதுகள் மறுக்கப்படுமானால், அது மிகப்பெரிய அநீதியா கும்; அனுமதிக்க முடியாத அக்கிரமம் ஆகும். இந்தியாவில் சுதந்திரமாகச் செயல்பட்டு ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கான அமைப்புகளாக உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் குரல் வளையை நெரித்துத் தனது ஆட்டத்திற்கேற்பத் தாளம் போடும் அமைப்பாக பாஜக அரசு மாற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது பண்பாட்டுத்துறை மூலம் சாகித்ய அகாடமியும், திரைப்படத் தணிக்கைத் துறையும் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தை வெளியிடுவதற்கு மூலக்கருவாக உள்ள இலக்கியங்கள், திரைப் படங்கள் எதிர்காலத்தில் பாசிசத் தாக்குதல்க ளுக்கு உள்ளாகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்தைத் தடுத்திட, மதச்சார்பற்ற, இடதுசாரி, ஜனநாயக சக்திகளின் போராட்டத் தோடு ஒட்டுமொத்த கலை இலக்கிய உலகமும் கை கோர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.