தமிழ் மண்ணின் வாழ்வும், வளமும்
1967 தேர்த லில் திமுக தோழமைக் கட்சி களின் துணையோடு ஆட்சிப் பொறுப்பு ஏற்றது. முதல்வர் அண்ணா கொண்டு வந்த முக்கிய மாற்றங்களில் ஒன்று தனியார் ஆதிக்கத்தில் இருந்த பேருந்து நிறு வனங்களை அரசுடமையாக்கியது. மத்திய அரசிடம் ரயில்வே போக்குவரத்து இருப்பது போல மாநில அரசின் கைகளில் பேருந்து போக்குவரத்து இருக்க வேண்டும் என்று அண்ணா உறுதிபடக் கூறினார். அண்ணா மறைவுக்கு பின் கலைஞர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றார். தனியார் பேருந்துகளை அரசுடமை யாக்குவதில் அவர் தீவிர கவனம் செலுத்தி னார். பணபலம் படைத்த தனியார் நிறு வனங்கள் பேருந்துகளை அரசிடம் ஒப்ப டைக்க மறுத்தன. அப்போது கலைஞர் உருக்குப் போல உறுதியாக நின்று அரசுப் பேருந்துகளின் வளர்ச்சிக்கு உரம்சேர்த்தார். தமிழ்நாடு வளர்ச்சியின் அடித்தளம் லாபம் தரும் பாதைகளில் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பேருந்துகள் அரசுடமையாக்கப்பட்ட பிறகு ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகள் சென்று சாதனை புரிந்தன. கடைக்கோடி மனிதன் நகரம் நோக்கி வந்தான். தமிழகத்தின் வளர்ச்சிக்கு அது அடித்தளமாக அமைந்தது. வைரவிழாவை நோக்கி பயணிக்கும் இத்துறையில் ஏறத்தாழ 20508 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாட்டி லேயே மிகப்பெரிய இந்த அரசுப் பேருந்து நிறுவனம் தமிழ் மண்ணின் பெருமைக் குரிய சின்னம். இரவும், பகலும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் பள்ளிச் சிறுவர்கள் அரசுப் பேருந்து வருவதைக் கண்டதும் கைதட்டி வரவேற்பது கண்கொள்ளா காட்சியாகும். அடித்தட்டு மக்கள் காய்கறி, மண்வெட்டி, கடப்பாறை போன்ற தட்டுமுட்டுச்சாமான்களோடு அதிகாலை யிலேயே பேருந்துகளில் நகரை நோக்கிப் பயணிக்கத் துவங்குவார்கள். அவர்களை நடத்துநர்களும், ஓட்டுநர்களும் இன்முகத்து டனும் அரவணைத்து பேருந்துகளில் அழைத்துச் செல்வார்கள். எளிய மக்க ளுக்கான இந்தச் சேவையை தனியார் பேருந்துகள் அனுமதிப்பதில்லை. கூகுள் நிர்வாகி சுந்தர் பிச்சை போன்று வெளிநாடு களிலும் உள்நாட்டிலும் ஒளிவீசும் இளம்காளைகள் அனைவரும் அரசுப் பேருந்தில் பயணம் செய்து கல்வி பயின்ற வர்கள்தான். தமிழகத்தின் வாழ்வும், வளமும் மங்காத அரசுப் போக்குவரத்துத் துறை யோடு பின்னிப் பிணைந்தது. ‘படியில் பயணம்; நொடியில் மரணம்’ என்று பேருந்துகளில் காணப்படும் வாசகம். காலம் கடந்த பழுதான பேருந்துகளுக்கும் இது பொருந்தும். இந்தப் பேருந்துகளையும் ஓட்டுநர்கள் கடமை உணர்வுடன் கவ னமாக இயக்குவது இமாலய சாதனை யாகும். ஆகாயத்திலும், கடலிலும் வாக னங்களை இயக்குவது எளிது. குண்டும் குழி யுமான சாலைகளிலும் வாகன நெருக்கடி களுக்கிடையிலும் அரசுப் பேருந்துகளை காலம் தவறாமல் இயக்குவதும் ஒரு சாதனைச் சரித்திரம்தான். இதயத்துடிப்பு நிற்கப் போகிறது என்று உணர்ந்த வேளையிலும் கூட சாலை ஓரத்தில் பேருந்தை பத்திரமாக நிறுத்தி, பய ணிகளைப் பாதுகாத்து தனது உயிரை விட்ட ஓட்டுநர்களும் உண்டு. பண்டிகைக் காலங்களில் தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளை நாளுக்கு நாள் அதி கரிக்கிறது. விமானக் கட்டணங்களும் அது போலத்தான். ஒன்றிய அரசின் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் மானுட வாழ்வு சீரழிந்து வருகிறது. இச்சூழலில் அரசுப் பேருந்துகளை முறையான கட்டணத்தில் கூடுதலான சிறப்புப் பேருந்து களை அரசு இயக்கி வருகிறது. பண்டிகை நாட்களில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் குடும்பத்தோடு வீட்டில் இருக்க முடிவ தில்லை. பேருந்தில் பயணம் செய்ப வர்கள்தான் அவர்களின் பண்டிகைக் கால உறவு முறையினர். பொறுப்புமிக்க போராட்டம் அரசின் உயிர்நாடி போன்ற இந்த ஊழியர்கள் நீதிகேட்டு தொடர்ந்து போராடி வருகிறார்கள். போக்குவரத்து தடை படக்கூடாது என்பதற்காக பொறுப்பு டன் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஊதிய உயர்வோ, புதிய கோரிக்கைகள் எதுவுமோ தொழிலாளர் களால் முன் வைக்கப்படவில்லை. அரசு தந்த வாக்குறுதிகளையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் அமலாக்குங்கள் என் பது ஊழியர்களின் அறநெறி சார்ந்த கோரிக்கைகளாகும். புறநகர் பேருந்துகளில் ஓட்டுநரும், நடத்துநரும் தங்களின் பணிக்காலத்தில் ஏறத்தாழ 3 லட்சம் கிலோமீட்டர் பயணித்து இலட்சக்கணக்கான பயணிகளுக்கு சேவை புரிந்த சாதனையாளர்கள். தமிழ் மண்ணின் வளர்ச்சிக்காக காலம் தோறும் ஓடி உழைத்து தேய்ந்த கரங்கள் பணி ஓய்வு காலப் பலன்களைப் பெறுவதற்கு அரசு துணை நிற்க வேண்டாமா? அரசுப் பேருந்து நிறுவனம் துவக்கத்தில் 3 ஆயிரம் பேருந்துகள் மற்றும் 100 கோடி மூலதனத்துடன் துவக்கப்பட்டது. இன்று 313 பெரிய பணிமனைகள், 20508 பேருந்து கள், பரந்த நிலப்பகுதிகள், வானுயர்ந்த கட்டடங்கள் இவற்றுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது. இந்த மகத்தான வளர்ச்சியில் உழைப்பாளி மக்களின் உருக்கு போன்ற பங்களிப்பு மறைக்க முடியாத உண்மை யாகும். ஊழியர்களின் தன்னலமற்ற உழைப்பால் ஆல்போல் தழைத்து செழித்து வளர்ந்துள்ள போக்குவரத்து கழகத்தின் இன்றைய சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். “மாடல் எம்ப்ளாயராக” செயல்பட வேண்டிய அரசு நிதிப்பிரச்சனை என்ற பெயரால் ஊழியர்களை வஞ்சிப்பது திமுக ஆட்சிக்கு அழகல்ல. ஊழியர்கள் அரசிடம் யாசகம் எதுவும் கேட்கவில்லை. வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைத்த பணப்பலன்களைத்தான் உரிமையோடு கேட்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்யும் பாஜக அரசுடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கரூரில் நடந்த முப்பெரும் விழாவில் முழங்கி யுள்ளார். கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் வீரம் செறிந்த மக்களின் துணை யுடன்தான் ஒன்றிய பாஜக அரசின் சதிச் செயல்களை முறியடித்து தமிழகத்தைக் காக்க முடியும். கேரளத்தில் நலிவுற்றிருந்த அரசு போக்குவரத்துத்துறையை இடது ஜனநாயக முன்னணி அரசு சீரமைத்து தலைநிமிர வைத்துள்ளது. நலிவுற்ற இதர பொதுத்துறை நிறுவனங்களையும் சீரமைத்து பாதுகாத்துள்ளது. கேரளத்தை விட நிதி நிலையில் வலுவாக உள்ள தமிழக அரசும் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதில் உரிய கவனம் செலுத்துவது தமிழக மண்ணுக்குச் செய்யும் சிறந்த சேவையாகும்.
