ஸ்கேன் இந்தியா
பெருமை
நாட்டிலேயே பெரிய பொதுத்துறை மின்னணு நிறுவனமான கெல்ட்ரான் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. உயர்தரத் தகவல் தொடர்பு பரிசோதனை நிலையங்கள், கணினி ஆய்வகங்கள் ஆகியவற்றை அமைப்பதில் முன்னணி வகிக்கிறது. பொதுத்துறையைப் பாதுகாப்பது என்ற அளவிலும், நாட்டின் முன்னணி நிறுவனமாக கெல்ட்ரானை உருவாக்குவது என்றும் கேரள அரசு முனைப்புடன் செயலாற்றுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் 1,071 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்று, அதை திறன்பட செயலாற்றி, அடுத்த கட்டமாக 205 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை கெல்ட்ரான் பெற்றிருக்கிறது. புதிய பணியின் மூலமாக 654 உயர்தர தகவல்தொடர்பு பரிசோதனை நிலையங்கள், 1,016 கணினி ஆய்வகங்கள் உருவாகின்றன. கெல்ட்ரானின் தரம் பிற தனியார் நிறுவனங்களின் செயல்பாடு களுக்கான அளவுகோலை உயர்த்தி வைத்திருக்கிறது.
சோகம்
லடாக்கின் லே பகுதியில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. மாநில அந்தஸ்து மற்றும் அரசியல் சட்டத்தின் ஆறாவது பட்டியலில் இணைப்பது என்ற இரண்டு அம்சங்கள் குறித்து மாநில மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சனையாக மட்டுமே ஒன்றிய அரசு அணுகுகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்பதுதான் அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். வன்முறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறித்தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட வாங்சுக்கின் தொண்டு நிறுவனத்திற்கான உரிமத்தை சந்தடி சாக்கில் ரத்து செய்திருக் கிறார்கள். வடகிழக்கில் மணிப்பூரை உருவாக்கியது போல், வடக்கில் லடாக்கை உருவாக்குகிறார்கள் என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
குழப்பம்
பீகார் சட்ட மன்றத் தேர்தலில் “நம்ம கூட்டணி தோத்தா நல்லது” என்று தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பேசிக் கொள்கிறார்கள். வேறு வழியில்லாமல் நிதிஷ்குமாரின் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இதில் சிராக் பஸ்வான் பிரச்சனை செய்கிறார். வென்றால், மறுபடி யும் நிதிஷ் தலைமையில்தான் ஆட்சி அமைக்க வேண்டும். தோற்றால் அந்தப் பிரச்சனையில்லை. அதோடு, அவர்கள் கட்சி மக்களவை உறுப்பினர்களை இந்தப்பக்கம் இழுத்துவிடலாம் என்றெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய ஜனதா தளக்கட்சியினரைப் பொறுத்தவரை, தோற்று விட்டால் கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்ற குழப்பத்தில் உள்ளனர். வெற்றி பெற்றாலும் சிராக் பஸ்வான் செல்வாக்கு அடி வாங்க வேண்டும் என்ற உள்குத்தையும் செயல்படுத்தத் தயாராகி வருகிறார்கள்.
வெறுப்பு
மதமாற்றத் தடைச்சட்டம் என்பது பெரும்பான்மை வெறுப்பை பரப்புகிறது என்று ராஜஸ்தானில் உள்ள பல்வேறு அமைப்புகள் கண்டித்துள்ளன. கடந்த மாதத்தில் இதற்கான மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றியது. அச்சத்துடனே வாழும் சூழலை சிறுபான்மையினருக்கு உரு வாக்கி, அதன் மூலம் அரசியல் லாபம் அடை வதே நோக்கம் என்று இந்த அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இதுபோன்ற சட்டம் இன்னும் 11 மாநிலங்களில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், இருப்பதிலேயே ராஜஸ்தானில் உள்ளதுதான் கொடூரமானது என்று சுட்டிக்காட்டியுள்ளனர். வரையறை, மாற்றும் முறைகள், தண்டனையின் அளவு என்று அனைத்து அம்சங்களும் மிகவும் கொடூரமானதாகவே இருக்கிறது என்கிறார்கள். விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினரின் பிரச்சனைகளைத் திசைதிருப்பவே இந்த சட்டம் என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது.